முதல் டெஸ்ட்: ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் சேர்ப்பு + "||" + First Test: At the end of the innings, the Indian team added 39 runs for the loss of 1 wicket
முதல் டெஸ்ட்: ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் சேர்ப்பு
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இன்றைய ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 39 ரன்கள் எடுத்தது.
சென்னை,
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 578 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. தொடர்ந்து முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ரன்கள் எடுத்திருந்தது. வாஷிங்டன் சுந்தர் 33 ரன்களிலும், அஸ்வின் 8 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்த நிலையில் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்சில் 337 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த வாஷிங்டன் சுந்தர் 85 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணியின் தரப்பில் டோம் பெஸ் 4 விக்கெட்டுகளும், ஜோப்ரா ஆர்ச்சர், ஜேக் லீச் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். 241 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தபோதிலும் இந்தியாவை பாலோ ஆன் செய்ய இங்கிலாந்து அணி அழைக்கவில்லை.
பின்னர் இங்கிலாந்து 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கைத் தொடங்கியது. அஸ்வின் வீசிய முதல் பந்திலேயே ரோரி பர்ன்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளைப் பறிகொடுத்தனர். அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 40 ரன்கள் சேர்த்தார். அந்த அணி 178 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியின் சார்பில் பந்து வீச்சில் அசத்திய அஸ்வின் 6 விக்கெட்டுகளும், நதீம் 2 விக்கெட்டுகளும், இஷாந்த் சர்மா மற்றும் ஜாஸ்பிரீத் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். இதன்மூலம், இந்திய அணியின் வெற்றிபெற 420 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
அடுத்து 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா 12 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத்தொடர்ந்து சுப்மன் கில்லுடன், புஜாரா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
பின்னர் இன்றைய ஆட்டநேர முடிவில் இந்திய அணி 13 ஒவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 39 ரன்கள் எடுத்தது. சுப்மன் கில் 15 ரன்களுடனும், புஜாரா 12 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்திய அணி வெற்றி பெற 381 ரன்கள் தேவைப்படுகிறது. நட்சத்திர வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.