தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் அணி வெற்றி - தொடரையும் கைப்பற்றியது


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: பாகிஸ்தான் அணி வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
x
தினத்தந்தி 9 Feb 2021 1:07 AM GMT (Updated: 9 Feb 2021 1:07 AM GMT)

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி தொடரையும் கைப்பற்றியது.

ராவல்பிண்டி,

பாகிஸ்தான்-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராவல்பிண்டியில் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. இதில் முதல் இன்னிங்சில் முறையே பாகிஸ்தான் அணி 272 ரன்னும், தென்ஆப்பிரிக்க அணி 201 ரன்னும் எடுத்தன.

71 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் அணி 298 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக முகமது ரிஸ்வான் 115 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன் மூலம் தென்ஆப்பிரிக்க அணிக்கு 370 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய தென்ஆப்பிரிக்க அணி 4-வது நாள் ஆட்டம் முடிவில் 41 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 127 ரன்கள் எடுத்து இருந்தது. மார்க்ராம் 59 ரன்னுடனும், வான்டெர் துஸ்சென் 48 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

நேற்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. முதல் ஓவரிலேயே வான்டெர் துஸ்சென் முந்தைய நாள் ஸ்கோருடன் ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த பாப் டுபிளிஸ்சிஸ் 5 ரன்னில் அவுட் ஆனார். இதைத்தொடர்ந்து தெம்பா பவுமா, மார்க்ராமுடன் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று ஆடி அணிக்கு நம்பிக்கை அளித்தனர். மார்க்ராம் 221 பந்துகளில் தனது 5-வது சதத்தை பூர்த்தி செய்தார்.

அணியின் ஸ்கோர் 241 ரன்னாக உயர்ந்த போது மார்க்ராம் (108 ரன்கள், 243 பந்து, 13 பவுண்டரி, 3 சிக்சர்) ஹசன் அலி பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பிறகு விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. கேப்டன் குயின்டான் டி காக் ரன் எதுவும் எடுக்காமலும், தெம்பா பவுமா 61 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். கடைசி 33 ரன்னுக்கு அந்த அணி 7 விக்கெட்டுகளை பறிகொடுத்தது.

91.4 ஓவர்களில் தென்ஆப்பிரிக்க அணி 2-வது இன்னிங்சில் 274 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் பாகிஸ்தான் அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பாகிஸ்தான் அணி தரப்பில் ஹசன் அலி 5 விக்கெட்டும், ஷகீன் ஷா அப்ரிடி 4 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 10 விக்கெட்டுகள் சாய்த்த பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி ஆட்டநாயகன் விருதையும், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் தொடர்நாயகன் விருதையும் தட்டிச் சென்றனர்.

இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி டெஸ்ட் போட்டி தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த அணி முதலாவது டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையே 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரில் முதலாவது போட்டி லாகூரில் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.

Next Story