இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணிக்கு 420 ரன்கள் இலக்கு


இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணிக்கு 420 ரன்கள் இலக்கு
x
தினத்தந்தி 9 Feb 2021 1:14 AM GMT (Updated: 9 Feb 2021 1:14 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 420 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

சென்னை,

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 578 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தது. கேப்டன் ஜோ ரூட் 218 ரன்கள் சேர்த்தார்.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் 74 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 257 ரன்கள் எடுத்து இருந்தது. தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 33 ரன்னுடனும், ஆர்.அஸ்வின் 8 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. வாஷிங்டன் சுந்தர், ஆர்.அஸ்வின் தொடர்ந்து ஆடினார்கள். இருவரும் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இருவரும் ஏதுவான பந்தை அவ்வப்போது எல்லைக்கோட்டுக்கு விரட்டினார்கள். டாம் பெஸ் பந்து வீச்சில் அஸ்வின் சிக்சர் பறக்கவிட்டு கலக்கினார். ஜாக் லீச் பந்து வீச்சில் வாஷிங்டன் சுந்தர் பவுண்டரி விளாசி அரைசதத்தை கடந்தார். 2-வது டெஸ்ட் போட்டியில் ஆடும் அவர் அடித்த 2-வது அரைசதம் இதுவாகும்.

அணியின் ஸ்கோர் 305 ரன்னை எட்டிய போது பாலோ-ஆனை (379 ரன்கள்) தவிர்க்கும் வரை நிலைத்து நிற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த இணை பிரிந்தது. ஆர்.அஸ்வின் (31 ரன்கள், 91 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜாக் லீச் பந்து வீச்சை தடுத்து ஆடுகையில் பந்து பேட்டில் பட்டு மேல் நோக்கி எழும்பியது. அதனை விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் ஓடிச் சென்று கேட்ச் செய்தார். 7-வது விக்கெட்டுக்கு அஸ்வின்-வாஷிங்டன் சுந்தர் ஜோடி 80 ரன்கள் திரட்டியது.

அடுத்து வந்த ஷபாஸ் நதீம் 12 பந்துகளில் ரன் எதுவும் எடுக்காமல் ஜாக் லீச் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற பென் ஸ்டோக்சிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இதைத்தொடர்ந்து களம் கண்ட இஷாந்த் ஷர்மா (4 ரன்) ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய பவுன்சர் பந்தை தடுத்து ஆட முற்பட்டு ஆலி போப்பிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் மறுமுனையில் அபாரமாக ஆடிய வாஷிங்டன் சுந்தர், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோ ரூட் ஆகியோர் பந்து வீச்சில் சிக்சர் தூக்கி அசத்தினார்.

கடைசி விக்கெட்டான ஜஸ்பிரித் பும்ராவை (0) வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் காலி செய்தார். அவர் வீசிய பந்து பும்ராவின் பேட்டில் உரசியபடி தாழ்வாக தரையை நோக்கி சென்றது. அதனை ஸ்லிப்பில் நின்ற பென் ஸ்டோக்ஸ் ஒற்றை கையில் அற்புதமாக பிடித்தார்.

95.5 ஓவர்களில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 337 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆகி பாலோ-ஆன் ஆனது. ஆனால் இங்கிலாந்து அணி, இந்திய அணிக்கு பாலோ-ஆன் கொடுக்கவில்லை. வாஷிங்டன் சுந்தர் 138 பந்துகளில் 12 பவுண்டரி, 2 சிக்சருடன் 85 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் டாம் பெஸ் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாக் லீச் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 241 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணியினர் வேகமாக ரன் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அதிரடியாக அடித்து ஆடினார்கள். அந்த அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோரி பர்ன்ஸ் (0) முதல் பந்திலேயே அஸ்வினின் சுழலில், ரஹானேவிடம் கேட்ச் கொடுத்து நடையை கட்டினார். இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் இன்னிங்சின் முதல் பந்தில் விக்கெட்டை வீழ்த்திய 3-வது சுழற்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை அஸ்வின் பெற்றார். இதற்கு முன்பு இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் பாப்பி பீலும் (1888-ம் ஆண்டு), தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் பெர்ட் ஓக்லெரும் (1907-ம் ஆண்டு) இதேபோல் முதல் பந்தில் விக்கெட் சாய்த்து இருந்தனர்.

ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்று திரும்பியது. அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு அஸ்வின் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் நெருக்கடி அளித்தார். ஷபாஸ் நதீம் உள்ளிட்ட மற்ற பவுலர்களும் நேர்த்தியாக செயல்பட்டு இங்கிலாந்து அணியின் ரன் வேட்டைக்கு முட்டுக்கட்டை போட்டதுடன், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் விரைவில் வீழ்த்தினார்கள்.

இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 46.3 ஓவர்களில் 178 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் ஜோ ரூட் 40 ரன்னும் (32 பந்து, 7 பவுண்டரி), ஆலி போப் 28 ரன்னும், டாம் பெஸ் 25 ரன்னும், ஜோஸ் பட்லர் 24 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் ஆர்.அஸ்வின் 6 விக்கெட்டும், ஷபாஸ் நதீம் 2 விக்கெட்டும், இஷாந்த் ஷர்மா, பும்ரா தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர். அஸ்வின் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்துவது இது 28-வது முறையாகும்.

இதனை அடுத்து 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி நேற்றைய ஆட்ட நேரம் முடிவில் 13 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 39 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 12 ரன்னில் (20 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) ஜாக் லீச் பந்து வீச்சில் ‘கிளீன் போல்டு’ ஆனார். சுப்மான் கில் 35 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 15 ரன்னும், புஜாரா 23 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 12 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இந்திய அணி வெற்றிக்கு மேலும் 381 ரன்கள் தேவைப்படுகிறது. கைவசம் 9 விக்கெட்டுகள் இருக்கிறது. டெஸ்ட் போட்டியில் இவ்வளவு பெரிய ஸ்கோரை (420 ரன்கள்) எட்டிப்பிடிப்பது என்பது இயலாத காரியமாகும். எனவே இன்று இந்திய அணியினர் டிரா செய்யும் எண்ணத்துடன் ஆடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

இங்கிலாந்து 578 ரன்கள்

இந்தியா

ரோகித் சர்மா (சி) பட்லர்

(பி) ஆர்ச்சர் 6

சுப்மான் கில் (சி) ஆண்டர்சன்

(பி) ஆர்ச்சர் 29

புஜாரா (சி) ரோரி பர்ன்ஸ்

(பி) டாம் பெஸ் 73

விராட்கோலி (சி) போப்

(பி) டாம் பெஸ் 11

ரஹானே (சி) ஜோ ரூட்

(பி) டாம் பெஸ் 1

ரிஷாப் பண்ட் (சி) ஜாக் லீச்

(பி) டாம் பெஸ் 91

வாஷிங்டன் சுந்தர் (நாட்-அவுட்) 85

அஸ்வின் (சி) பட்லர்

(பி) ஜாக் லீச் 31

ஷபாஸ் நதீம் (சி) ஸ்டோக்ஸ்

(பி) ஜாக் லீச் 0

இஷாந்த் ஷர்மா (சி) போப்

(பி) ஆண்டர்சன் 4

பும்ரா (சி) ஸ்டோக்ஸ்

(பி) ஆண்டர்சன் 0

எக்ஸ்டிரா 6

மொத்தம் (95.5 ஓவர்களில்

ஆல்-அவுட்) 337

விக்கெட் வீழ்ச்சி: 1-19, 2-44, 3-71, 4-73, 5-192, 6-225, 7-305, 8-312, 9-323.

பந்து வீச்சு விவரம்:

ஜேம்ஸ் ஆண்டர்சன் 16.5-5-46-2

ஜோப்ரா ஆர்ச்சர் 21-3-75-2

பென் ஸ்டோக்ஸ் 6-1-16-0

ஜாக் லீச் 24-5-105-2

டாம் பெஸ் 26-5-76-4

ஜோ ரூட் 2-0-14-0

2-வது இன்னிங்ஸ்

இங்கிலாந்து

ரோரி பர்ன்ஸ் (சி) ரஹானே

(பி) அஸ்வின் 0

டாம் சிப்லி (சி) புஜாரா

(பி) அஸ்வின் 16

லாரன்ஸ் எல்.பி.டபிள்யூ

(பி) இஷாந்த் ஷர்மா 18

ஜோ ரூட் எல்.பி.டபிள்யூ.

(பி) பும்ரா 40

பென் ஸ்டோக்ஸ் (சி) ரிஷாப்

பண்ட் (பி) அஸ்வின் 7

ஆலி போப் (சி) ரோகித் சர்மா

(பி) நதீம் 28

ஜோஸ் பட்லர் (ஸ்டம்பிங்)

ரிஷாப் பண்ட் (பி) நதீம் 24

டாம் பெஸ் எல்.பி.டபிள்யூ.

(பி) அஸ்வின் 25

ஜோப்ரா ஆர்ச்சர் (பி) அஸ்வின் 5

ஜாக் லீச் (நாட்-அவுட்) 8

ஜேம்ஸ் ஆண்டர்சன் (சி) அண்ட்

(பி) அஸ்வின் 0

எக்ஸ்டிரா 7

மொத்தம் (46.3 ஓவர்களில்

ஆல்-அவுட்) 178

விக்கெட் வீழ்ச்சி: 1-0, 2-32, 3-58, 4-71, 5-101, 6-130, 7-165, 8-167, 9-178.

பந்து வீச்சு விவரம்:

ஆர்.அஸ்வின் 17.3-2-61-6

ஷபாஸ் நதீம் 15-2-66-2

இஷாந்த் ஷர்மா 7-1-24-1

ஜஸ்பிரித் பும்ரா 6-0-26-1

வாஷிங்டன் சுந்தர் 1-0-1-0

இந்தியா

ரோகித் சர்மா (பி) ஜாக் லீச் 12

சுப்மான் கில் (நாட்-அவுட்) 15

புஜாரா (நாட்-அவுட்) 12

மொத்தம் (13 ஓவர்களில்

ஒரு விக்கெட்டுக்கு) 39

விக்கெட் வீழ்ச்சி: 1-25.

பந்து வீச்சு விவரம்:

ஜோப்ரா ஆர்ச்சர் 3-2-13-0

ஜாக் லீச் 6-1-21-1

ஜேம்ஸ் ஆண்டர்சன் 2-1-2-0

டாம் பெஸ் 2-0-3-0

Next Story