சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி தோல்வி இங்கிலாந்து பவுலர்கள் அசத்தல்


சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி தோல்வி இங்கிலாந்து பவுலர்கள் அசத்தல்
x

சென்னையில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

சென்னை, 

இந்தியா -இங்கிலாந்து அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் கடந்த 5-ந்தேதி தொடங்கியது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 578 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி 337 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி ‘பாலோ-ஆன்’ ஆனது. ஆனால் ‘பாலோ-ஆன்’ வழங்காமல் 241 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து 178 ரன்னில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் இந்திய அணிக்கு 420 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி 4-வது நாள் முடிவில் ரோகித் சர்மாவின் விக்கெட்டை இழந்து 39 ரன்கள் எடுத்திருந்தது. சுப்மான் கில் (15 ரன்), புஜாரா (12 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நேற்று நடந்தது. மேற்கொண்டு 381 ரன்கள் எடுப்பது நிச்சயம் கடினம் என்பதை உணர்ந்த இந்திய வீரர்கள் ‘டிரா’ செய்யும் முனைப்புடன் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். சிறிது நேரத்தில் புஜாரா (15 ரன்) ஜாக் லீச்சின் சுழலில் ஸ்லிப்பில் நின்ற ஸ்டோக்சிடம் பிடிபட்டார். அடுத்து கேப்டன் விராட் கோலி வந்தார். மறுமுனையில் சுழற்பந்து வீச்சை சிரமமின்றி நொறுக்கிய சுப்மான் கில் தனது 3-வது அரைசதத்தை எட்டினார். இந்த சூழலில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சனை பந்துவீசுவதற்கு ஜோ ரூட் அழைத்தார். அவரது வியூகத்துக்கு உடனடி பலன் கிடைத்தது.

அச்சுறுத்திய ஆண்டர்சன்

ரிவர்ஸ் ஸ்விங்காக ஆண்டர்சன் வீசிய பந்து சுப்மான் கில்லை (50 ரன், 83 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) காலி செய்தது. அதாவது அவர் பந்தை தடுத்து ஆட முற்பட்ட போது பேட்டுக்கும் பேடுக்கும் இடையே ஊடுருவி ஸ்டம்பை பதம் பார்த்தது. 4-வது விக்கெட்டுக்கு இறங்கிய துணை கேப்டன் ரஹானேவும் (0) துளியும் பிசகாமல் அதே போல் ஆட்டம் இழந்தார். அவருக்கும் ஆப்-ஸ்டம்ப் சில அடி தூரம் பல்டி அடித்ததை பார்க்க முடிந்தது. ஒரே ஓவரில் ஆண்டர்சனின் ‘இரட்டை செக்’ இந்திய அணியை தடம் புரள வைத்தது.

செம்மண் புழுதி கிளம்பிய இந்த ஆடுகளத்தில் பந்து அதிகமாக எழும்பவே இல்லை. இதை சாதகமாக மாற்றிக்கொண்ட இங்கிலாந்து பவுலர்கள் சுழல், வேகம் என்று இடைவிடாது தாக்குதல் தொடுத்து இந்திய பேட்ஸ்மேன்களை நிமிர விடாமல் நெருக்கடி கொடுத்தனர். இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் (11 ரன்), வாஷிங்டன் சுந்தர் (0) ஆகியோரும் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பினர்.

கோலி 72 ரன்

117 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்த இந்திய அணிக்கு 7-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கேப்டன் விராட் கோலியும், அஸ்வினும் சற்று ஆறுதல் அளித்தனர். டாம் பெஸ்சின் பந்து வீச்சில் கோலி ‘ஹாட்ரிக்’ பவுண்டரி ஓட விட்டார். இவர்களால் இந்திய அணியின் தோல்வியை கொஞ்ச நேரம் தள்ளிபோட முடிந்ததே தவிர தடுக்க முடியவில்லை.

ஸ்கோர் 171 ரன்களை எட்டிய போது அஸ்வின் (9 ரன், 46 பந்து) ஜாக்லீச்சின் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் பட்லரிடம் கேட்ச் ஆனார். இதற்கிடையே, தனது 24-வது அரைசதத்தை கடந்த விராட் கோலியின் போராட்டத்தை பென் ஸ்டோக்ஸ் முடிவுக்கு கொண்டு வந்தார். அவரது பந்து வீச்சில் கோலி (72 ரன், 104 பந்து, 9 பவுண்டரி) கிளீன் போல்டு ஆனார்.

இங்கிலாந்து வெற்றி

தேனீர் இடைவேளைக்கு முன்பாக இந்திய அணி 2-வது இன்னிங்சில் 58.1 ஓவர்களில் 192 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்தது. இந்திய மண்ணில் இங்கிலாந்தின் மெகா வெற்றி இதுவாகும். இங்கிலாந்து தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச் 4 விக்கெட்டும், வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் 3 விக்கெட்டும் சாய்த்தனர். முதல் இன்னிங்சில் இரட்டை சதம் விளாசிய இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து அணி தற்போது 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி இதே சென்னை மைதானத்தில் வருகிற 13-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

இங்கிலாந்து 578 ரன்

இந்தியா 337 ரன்

2-வது இன்னிங்ஸ்

இங்கிலாந்து 178 ரன்

இந்தியா

ரோகித் சர்மா (சி) லீச் 12

சுப்மான் கில் (பி) ஆண்டர்சன் 50

புஜாரா(சி) ஸ்டோக்ஸ் (பி) லீச் 15

விராட் கோலி (பி) ஸ்டோக்ஸ் 72

ரஹானே (பி) ஆண்டர்சன் 0

ரிஷாப் பண்ட் (சி) ரூட்

(பி) ஆண்டர்சன் 11

வாஷிங்டன் சுந்தர் (சி) பட்லர்

(பி) பெஸ் 0

அஸ்வின் (சி) பட்லர் (பி) லீச் 9

ஷபாஸ் நதீம் (சி) பர்ன்ஸ்

(பி) லீச் 0

இஷாந்த் ஷர்மா (நாட்-அவுட்) 5

பும்ரா (சி) பட்லர் (பி) ஆர்ச்சர் 4

எக்ஸ்டிரா 14

மொத்தம் (58.1 ஓவர்களில்

ஆல்-அவுட்) 192

விக்கெட் வீழ்ச்சி: 1-25, 2-58, 3-92, 4-92, 5-110, 6-117, 7-171, 8-179, 9-179.

பந்து வீச்சு விவரம்

ஜோப்ரா ஆர்ச்சர் 9.1-4-23-1

ஜாக் லீச் 26-4-76-4

ஆண்டர்சன் 11-4-17-3

டாம் பெஸ் 8-0-50-1

பென் ஸ்டோக்ஸ் 4-1-13-1

Next Story