‘இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்தாலும் வலுவாகவே இருக்கும்’ பயிற்சியாளர் சில்வர்வுட் பேட்டி


‘இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்தாலும் வலுவாகவே இருக்கும்’ பயிற்சியாளர் சில்வர்வுட் பேட்டி
x
தினத்தந்தி 12 Feb 2021 1:28 AM GMT (Updated: 12 Feb 2021 1:28 AM GMT)

இங்கிலாந்து அணியில் மாற்றம் செய்தாலும் வலுவாகவே இருக்கும் என்று அதன் பயிற்சியாளர் சில்வர்வுட் கூறியுள்ளார்.

சென்னை, 

சென்னை சேப்பாக்கத்தில் நடந்த இந்தியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாத்தில் வெற்றியை சுவைத்து தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியும் இதே சேப்பாக்கத்தில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.

தொடக்க டெஸ்டில் இங்கிலாந்து மெகா வெற்றியை பெற்ற போதிலும் வெற்றி கூட்டணியை பிரிக்க இங்கிலாந்து அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் முதலாவது டெஸ்டுடன் இரண்டு வாரங்கள் ஓய்வு எடுக்க தாயகம் திரும்பி விட்டதால் அவருக்கு பதிலாக பென் போக்ஸ் களம் இறங்குகிறார். இதே போல் 2-வது இன்னிங்சில் ‘ரிவர்ஸ் ஸ்விங்’ தாக்குதலில் இந்திய அணியை நிலைகுலைய செய்த மூத்த வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் இடமும் கேள்விக்குறியாகி இருக்கிறது. அவருக்கு பதிலாக மற்றொரு அனுபவ வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஆடும் லெவனில் இடம் பெறலாம். ஏனெனில் வேலைபளுவை குறைக்க வீரர்களை சுழற்சி முறையில் பயன்படுத்த வேண்டும் என்பதே இங்கிலாந்து அணி நிர்வாகத்தின் முடிவாகும். சுழற்பந்து வீச்சாளர் டாம் பெஸ்சுக்கு பதிலாக மொயீன் அலி சேர்க்கப்படலாம்.

சில்வர்வுட் கருத்து

இது குறித்து இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் கூறுகையில், ‘வீரர்கள் நீண்ட காலம் அணியில் நீடிப்பதற்கு எது தேவையோ அதை செய்வேன். அவர்களுக்கு ஓய்வு அவசியம் என்றால், இந்த வெற்றி கூட்டணியை மாற்றவும் தயங்கமாட்டேன். மாற்றமின்றி இதே அணியுடன் களம் இறங்கினாலும் முடிவு மாறலாம். ஏனெனில் இந்தியா வலுவான அணியாக மீண்டெழும் என்பது தெரியும். ஆண்டர்சன் போன்ற வீரரை விடுவிப்பது மிகவும் கடினம். அவர் தரமான வீரர். அதே சமயம் முந்தைய ஆட்டத்தில் ஸ்டூவர்ட் பிராட் விளையாடவில்லை என்பதை பார்க்க வேண்டும். அணியில் நிறைய பந்து வீச்சாளர்கள் உள்ளனர். அவர்கள் விளையாடுவதற்கு ஏதாவது ஒரு கட்டத்தில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். மாற்றம் செய்வதால் அணி பலவீனமடைந்து விடும் என்று நினைக்கவில்லை. மற்றொரு வீரர் தனது திறமையை நிரூபிப்பதற்கு ஒரு வாய்ப்பாக பார்க்கிறேன்’ என்றார்.

இதற்கிடையே 2-வது டெஸ்டில் களம் இறங்க உள்ள இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பென் போக்ஸ் அளித்த பேட்டியில், ‘முதலாவது டெஸ்ட் போட்டியுடன் ஒப்பிடும் போது 2-வது டெஸ்டுக்கு பயன்படுத்தப்படும் ஆடுகளம் வித்தியாசமானது. ஆடுகளத்தில் உள்ள மண் கருமை நிறத்தில் காட்சி அளிக்கிறது. ஆடுகளம் மிகவும் மெதுவாக (ஸ்லோ) இருக்கலாம் என்று நினைக்கிறேன். அனேகமாக இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து சீக்கிரமாகவே எடுபடும் என்று கருதுகிறேன்’ என்றார்.

Next Story