இந்திய அணி உணவு இடைவேளை வரை 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது.
சென்னை,
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணிக்கு துவக்கமே அதிர்ச்சி காத்திருந்தது. இளம் வீரர் சுப்மான் கில் ரன் எதுவும் இன்றி ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார்.
இதையடுத்து, ரோகித் சர்மாவுடன் - புஜாரா ஜோடி சேர்ந்தார். புஜாரா வழக்கம் போல தடுப்பாட்டம் ஆட ரோகித் சர்மா சற்று அதிரடியாக ஆடினார். சிறப்பாக பேட் செய்த ரோகித் சர்மா அரைசதம் அடித்தார். சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அவர் அடிக்கும் 12-வது அரைசதம் இதுவாகும்.
நிதானமாக ஆடி வந்த புஜாரா 21 ரன்களில் ஜேக் லீச் பந்தில் ஆட்டமிழந்தார். 4-வது விக்கெட்டுக்கு களம் இறங்கிய கேப்டன் கோலி, மோயின் அலி சுழலில் சிக்கி போல்டு ஆனார். 86-ரன்களுக்குள் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்திய அணி உணவு இடைவேளை வரை 26 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா 80 ரன்களுடனும் ரகானே 5 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.