சென்னையில் தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி 300 ரன்கள் சேர்ப்பு


சென்னையில் தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய அணி 300 ரன்கள் சேர்ப்பு
x
தினத்தந்தி 13 Feb 2021 11:34 PM GMT (Updated: 13 Feb 2021 11:34 PM GMT)

சென்னையில் நேற்று தொடங்கிய இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 300 ரன்கள் சேர்த்துள்ளது. ரோகித் சர்மா சதம் விளாசினார்.

சென்னை, 

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டன. வாஷிங்டன் சுந்தர், ஷபாஸ் நதீம் ஆகியோருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர்கள் அக்‌ஷர் பட்டேல், குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டனர். முதல்முறையாக டெஸ்டில் களம் காணும் அக்‌ஷர் பட்டேல் இந்தியாவின் 302-வது டெஸ்ட் வீரர் ஆவார். இதே போல் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு பணிச்சுமையை கருத்தில் கொண்டு ஓய்வு கொடுக்கப்பட்டு, முகமது சிராஜிக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இங்கிலாந்து அணியில் 4 மாற்றமாக ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோஸ் பட்லர், டாம் பெஸ், ஜோப்ரா ஆர்ச்சர் ஆகியோர் நீக்கப்பட்டு ஸ்டூவர்ட் பிராட், விக்கெட் கீப்பர் பென் போக்ஸ், மொயீன் அலி, ஆலி ஸ்டோன் இடம் பெற்றனர்.

அதிர்ச்சி தொடக்கம்

‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் விராட் கோலி தயக்கமின்றி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் இ்ந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். இந்தியா ரன் கணக்கை தொடங்கும் முன்பே விக்கெட் கணக்கை தொடங்கி அதிர்ச்சிக்குள்ளானது. வேகப்பந்து வீச்சாளர் ஆலி ஸ்டோன் வீசிய பந்து வெளியே செல்லும் என்று நினைத்து சுப்மான் கில் (0) காலை நடு ஸ்டம்புக்கு நேராக வைத்து பேட்டை மேல்வாக்கில் உயர்த்தினார். பந்து சரியாக அவரது காலில் பட்டதால் எல்.பி.டபிள்யூ. ஆகிப்போனார். அடுத்து புஜாரா வந்தார்.

ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி குழுமியிருந்த ஏறக்குறைய 12 ஆயிரம் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். ஸ்டோக்சின் ஓவரில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி ஓட விட்டார். ஸ்கோர் 85 ரன்களை எட்டிய போது புஜாரா (21 ரன், 58 பந்து, 2 பவுண்டரி) சுழற்பந்து வீச்சாளர் ஜாக் லீச்சின் பந்து வீச்சில் ஸ்லிப்பில் நின்ற பென் ஸ்டோக்சிடம் பிடிபட்டார். அடுத்து வந்த கேப்டன் விராட் கோலி (0) மொயீன் அலியின் சுழலில் கிளீன் போல்டு ஆகி திகைப்புக்குள்ளானார். அப்போது இந்திய அணி 86 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாற்றத்திற்கு உள்ளானது.

ரோகித் சர்மா 161 ரன்

இதன் பின்னர் ரோகித் சர்மாவுடன், துணை கேப்டன் அஜிங்யா ரஹானே இணைந்தார். இருவரும் அணியை சரிவில் இருந்து படிப்படியாக மீட்டனர். மதிய உணவு இடைவேளை வரை ரன்வேட்டையில் தீவிரம் காட்டிய ரோகித் சர்மா 78 பந்தில் 80 ரன்கள் திரட்டினார். அதன் பிறகு ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கத் தொடங்கியது. கருமை நிற மண் கிளம்பிய இந்த ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்று எகிறியதை பார்க்க முடிந்தது. இதனால் இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் அதிகமாக சுழற்பந்து வீச்சை பயன்படுத்தி நெருக்கடி கொடுத்தார். கடினமான இந்த ஆடுகளத்தில் எதிரணியின் சவாலை ரோகித் சர்மா திறம்பட சமாளித்து குதூகலப்படுத்தினார். அவரது ‘ஸ்வீப் ஷாட்’டுகள் பிரமிப்பூட்டின. இந்த வகையில் மட்டும் அவர் 16 முறை ஷாட்டுகள் அடித்தது கவனிக்கத்தக்கது.

மொயீன் அலியின் சுழலில் ஒரு சிக்சரை பறக்க விட்ட ரோகித் சர்மா அதன் தொடர்ச்சியாக தனது 7-வது சதத்தை 130 பந்துகளில் நிறைவு செய்தார். 7 சதங்களும் அவர் உள்நாட்டிலேயே அடித்தது நினைவு கூரத்தக்கது. இன்னொரு பக்கம் ரஹானேவும் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு தெறிக்கவிட்டார். இவர்கள் ஆடிய விதம் இந்தியா மெகா ஸ்கோரை நோக்கி பயணிப்பது போல் தோன்றியது. ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் நிலைமை மாறியது.

அணியின் ஸ்கோர் 248 ரன்களாக உயர்ந்த போது ரோகித் சர்மா (161 ரன், 231 பந்து, 18 பவுண்டரி,2 சிக்சர்) ஜாக் லீச்சின் பந்து வீச்சில் முட்டிப்போட்டு பந்தை எல்லைக்கோட்டை நோக்கி திருப்பி அடித்த போது பந்து மொயீன் அலியிடம் கேட்ச்சாக தஞ்சமடைந்தது. இவர்கள் 4-வது விக்கெட்டுக்கு 162 ரன்கள் சேர்த்தனர். தொடர்ந்து ரஹானேவும் (67 ரன், 149 பந்து, 9 பவுண்டரி) வெளியேறினார். அவர் மொயீன் அலியின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார்.

இந்தியா 300 ரன்

ரஹானேவுக்கு பிறகு கைகோர்த்த இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட், அஸ்வின் பார்ட்னர்ஷிப் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. அஸ்வின் 13 ரன்னில் ஆட்டம் இழந்தார். ஆனால் ரிஷாப் பண்ட் வழக்கம் போல் மட்டையை சுழட்டியடிக்க தவறவில்லை. அவரது இறுதிகட்ட ஜாலத்தால் இந்தியா 300 ரன்களை எட்டிப்பிடித்தது.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 88 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 300 ரன்கள் குவித்துள்ளது. ரிஷாப் பண்ட் 33 ரன்னுடனும் (56 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), அக்‌ஷர் பட்டேல் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

இ்ந்தியா

ரோகித் சர்மா (சி) மொயீன் அலி

(பி) லீச் 161

சுப்மான் கில் எல்.பி.டபிள்யூ

(பி) ஆலி ஸ்டோன் 0

புஜாரா (சி) ஸ்டோக்ஸ் (பி) லீச் 21

விராட் கோலி

(பி) மொயீன் அலி 0

ரஹானே (பி) மொயீன் அலி 67

ரிஷாப் பண்ட் (நாட்-அவுட்) 33

அஸ்வின் (சி) போப் (பி) ரூட் 13

அக் ஷர் பட்டேல் (நாட்-அவுட்) 5

எக்ஸ்டிரா 0

மொத்தம் (88 ஓவர்களில்

6 விக்கெட்டுக்கு) 300

விக்கெட் வீழ்ச்சி: 1-0, 2-85, 3-86, 4-248, 5-249, 6-284

பந்து வீச்சு விவரம்

ஸ்டூவர்ட் பிராட் 11-2-37-0

ஆலி ஸ்டோன் 15-5-42-1

ஜாக் லீச் 26-2-78-2

பென் ஸ்டோக்ஸ் 2-0-16-0

மொயீன் அலி 26-3-112-2

ஜோ ரூட் 8-2-15-1

Next Story