சென்னையில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி இமாலய வெற்றி - அஸ்வின், பட்டேல் சுழலில் சுருண்டது இங்கிலாந்து


சென்னையில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி இமாலய வெற்றி - அஸ்வின், பட்டேல் சுழலில் சுருண்டது இங்கிலாந்து
x
தினத்தந்தி 17 Feb 2021 1:05 AM GMT (Updated: 17 Feb 2021 1:05 AM GMT)

சென்னையில் நடந்த 2-வது டெஸ்டில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை ஊதித்தள்ளியது.

சென்னை,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி கடந்த 13-ந்தேதி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் தொடங்கியது. சுழற்பந்து வீச்சுக்கு சொர்க்கமாக காணப்பட்ட இந்த ஆடுகளத்தில் முதல் இன்னிங்சில் முறையே இந்தியா 329 ரன்களும், இங்கிலாந்து 134 ரன்களும் எடுத்தன. பின்னர் 195 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய இந்தியா அஸ்வின் சதத்தின் உதவியுடன் 286 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் இங்கிலாந்துக்கு 482 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மலைப்பான இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 3-வது நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 53 ரன்களுடன் தோல்வியின் பாதைக்கு தள்ளப்பட்டது. டேன் லாரன்ஸ் (19 ரன்), கேப்டன் ஜோ ரூட் (2 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் நெருக்கடிக்கு மத்தியில் தொடர்ந்து பேட்டிங் செய்தனர். எதிர்பார்த்தபடியே அஸ்வின்- அக் ஷர் பட்டேல் சுழல் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அவர்கள் திணறினர். ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்று திரும்பியதுடன், எகிறவும் செய்ததால் கணிக்க இயலாமல் திகைத்தனர். சிறிது நேரத்தில் லாரன்ஸ் (26 ரன்) அஸ்வின் சுழலில் ரிஷாப் பண்ட்டால் பிரமாதமாக ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

அடுத்து வந்த துணை கேப்டன் பென் ஸ்டோக்சும் (8 ரன், 51 பந்து) அஸ்வின் பந்து வீச்சுக்கே இரையானார். அஸ்வின் வீசிய சுழல் வலையில் ஸ்டோக்ஸ் சிக்குவது இது 10-வது நிகழ்வாகும். ஸ்டோக்சின் விக்கெட்டை அதிகமுறை சாய்த்த பவுலர் அஸ்வின் தான்.

ஓரளவு தாக்குப்பிடித்து போராடிய கேப்டன் ஜோ ரூட் (33 ரன், 92 பந்து, 3 பவுண்டரி) அக் ஷர் பட்டேல் வீசிய பந்தை தடுத்து ஆட முற்பட்ட போது கையுறையில் பந்து பட்டு ஸ்லிப்பில் நின்ற ரஹானேவிடம் கேட்ச்சாக விழுந்தது. அதைத் தொடர்ந்து தோல்வி உறுதி என்ற நிலையில் கடைசி கட்டத்தில் மொயீன் அலி சிறிது நேரம் வாணவேடிக்கை காட்டினார். அக் ஷர் பட்டேலின் பந்து வீச்சில் ‘ஹாட்ரிக்’ சிக்சர் பறக்க விட்ட அவர் கடைசியில் குல்தீப் யாதவின் பந்து வீச்சில் சிக்சருக்கு முயற்சித்த போது ஸ்டம்பிங் செய்யப்பட்டார். இங்கிலாந்தின் இன்னிங்சில் அதிகபட்ச ரன்னை பதிவு செய்த மொயீன் அலி 43 ரன்னில் (18 பந்து, 3 பவுண்டரி, 5 சிக்சர்) வீழ்ந்தார்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 54.2 ஓவர்களில் 164 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா 317 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. அக் ஷர் பட்டேல் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். மொத்தம் 8 விக்கெட், சதம் என்று ஆல்-ரவுண்டராக ஜொலித்த தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் 4 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 1-1 என்ற கணக்கில் சமனுக்கு கொண்டு வந்துள்ளது. முன்னதாக முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து 227 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. இவ்விரு அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டி (பகல்-இரவு) வருகிற 24-ந்தேதி ஆமதாபாத்தில் தொடங்குகிறது.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

இந்தியா 329

இங்கிலாந்து 134

2-வது இன்னிங்ஸ்

இந்தியா 286

இங்கிலாந்து

ரோரி பர்ன்ஸ் (சி) கோலி (பி)

அஸ்வின் 25

டாம் சிப்லி எல்.பி.டபிள்யூ (பி)

அக் ஷர் 3

லாரன்ஸ் (ஸ்டம்பிங்) பண்ட்

(பி) அஸ்வின் 26

ஜாக் லீச் (சி)ரோகித்(பி)அக் ஷர் 0

ஜோ ரூட் (சி) ரஹானே(பி)

அக் ஷர் 33

பென் ஸ்டோக்ஸ் (சி) கோலி

(பி) அஸ்வின் 8

ஆலி போப் (சி) இஷாந்த் (பி)

அக் ஷர் 12

பென் போக்ஸ் (சி) அக் ஷர்

(பி) குல்தீப் 2

மொயீன் அலி (ஸ்டம்பிங்)

பண்ட் (பி) குல்தீப் 43

ஆலி ஸ்டோன் எல்.பி.டபிள்யூ

(பி) அக் ஷர் 0

ஸ்டூவர்ட் பிராட் (நாட்-அவுட்) 5

எக்ஸ்டிரா 7

மொத்தம் (54.2 ஓவர்களில்

ஆல்-அவுட்) 164

விக்கெட் வீழ்ச்சி: 1-17, 2-49, 3-50, 4-66, 5-90, 6-110, 7-116, 8-116, 9-126.

பந்து வீச்சு விவரம்

இஷாந்த் ஷர்மா 6-3-13-0

அக் ஷர் பட்டேல் 21-5-60-5

அஸ்வின் 18-5-53-3

முகமது சிராஜ் 3-1-6-0

குல்தீப் யாதவ் 6.2-1-25-2

Next Story