கிரிக்கெட்

ஐ.பி.எல். வரலாற்றில் புதிய சாதனை: தென்ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் ரூ.16¼ கோடிக்கு ஏலம் - ஜாமிசன், மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், கவுதம் ஆகியோருக்கும் ஜாக்பாட் + "||" + IPL New record in history: South African Chris Morris bid for Rs.16¼ crore

ஐ.பி.எல். வரலாற்றில் புதிய சாதனை: தென்ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் ரூ.16¼ கோடிக்கு ஏலம் - ஜாமிசன், மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், கவுதம் ஆகியோருக்கும் ஜாக்பாட்

ஐ.பி.எல். வரலாற்றில் புதிய சாதனை: தென்ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் ரூ.16¼ கோடிக்கு ஏலம் - ஜாமிசன், மேக்ஸ்வெல், ரிச்சர்ட்சன், கவுதம் ஆகியோருக்கும் ஜாக்பாட்
ஐ.பி.எல். ஏலம் வரலாற்றில் அதிகபட்சமாக தென்ஆப்பிரிக்க வீரர் கிறிஸ் மோரிஸ் ரூ.16¼ கோடிக்கு நேற்று விலை போனார். அவரை ராஜஸ்தான் அணி வாங்கியது.
சென்னை,

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் மினி ஏலம் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று மாலை நடைபெற்றது. ஏலப்பட்டியலில் 164 இந்திய வீரர்கள் உள்பட 292 பேர் இடம் பிடித்திருந்தனர். தங்களிடம் இருந்த இருப்புத்தொகைக்கு ஏற்ப வியூகங்களுடன் 8 அணிகளைச் சேர்ந்த குறிப்பிட்ட நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் வீரர்களை வாங்க ஏலத்திற்கு வந்திருந்தனர். நிகழ்ச்சியை ஏலம் விடுவதில் நிபுணரான ஹியூக் எட்மீட்ஸ் (இங்கிலாந்து) நடத்தினார். முதலில் டெஸ்டில் முச்சதம் அடித்தவரான இந்தியாவின் கருண் நாயரின் பெயர் வாசிக்கப்பட்டது. அவரை யாரும் சீண்டவில்லை. இதனால் அவர் விற்கப்படாத வீரரின் பட்டியலில் வைக்கப்பட்டார். இருப்பினும் அடுத்த சுற்றில் அவர் விலை போனார்.

ஏலத்தில் 4 வெளிநாட்டு வீரர்களுக்கு கடும் கிராக்கி நிலவியது. அதில் வியப்பூட்டும் வகையில் தென்ஆப்பிரிக்க ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிசுக்கு மெகா ஜாக்பாட் அடித்தது. அவரது அடிப்படை விலை ரூ.75 லட்சத்தில் இருந்து மும்பையும், பெங்களூருவும் தொகையை தாறுமாறாக எகிற வைத்தன. ரூ.10 கோடி வந்ததும் பெங்களூரு ஒதுங்கியது. அதன் பிறகு மும்பையுடன், ராஜஸ்தான் மல்லுக்கட்டியது. ரூ.13 கோடியை எட்டியதும் மும்பை பின்வாங்க பஞ்சாப் குதித்தது. தொடர்ந்து விலை மின்னல் வேகத்தில் உயர்ந்து கொண்டே போனது. ரூ.16 கோடி வரை பஞ்சாப் கேட்டுப்பார்த்தது. கடைசியில் ரூ.16¼ கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அவரை சொந்தமாக்கியது. ஐ.பி.எல். ஏலம் வரலாற்றில் அதிக தொகைக்கு விலை போன வீரர் இவர் தான். இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு ஏலத்தில் இந்தியாவின் யுவராஜ்சிங்கை ரூ.16 கோடிக்கு டெல்லி அணி வாங்கியதே அதிகபட்ச ஏலத்தொகையாக இருந்தது. அச்சாதனையை முறியடித்துள்ள 33 வயதான கிறிஸ் மோரிஸ் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் 70 ஆட்டங்களில் விளையாடி 80 விக்கெட்டுகளும், 551 ரன்களும் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கிளைன் மேக்ஸ்வெல்லை முந்தைய ஏலத்தில் ரூ.10¾ கோடிக்கு எடுத்த பஞ்சாப் அணி அவரை கழற்றி விட்டதால் மீண்டும் ஏலத்திற்கு வந்தார். அவரது தொடக்க விலை ரூ.2 கோடியாகும். அவரை தங்கள் பக்கம் இழுக்க 4 அணிகள் விரும்பின. முதலில் கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகள் ஏலம் கேட்டன. ரூ.4.40 கோடியை எட்டிய பிறகு டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்சும், விராட் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும் நேரடி கோதாவில் இறங்கின.

இரு அணிகளும் விடாப்பிடியாக மாறிமாறி விலையை உயர்த்தின. எப்படியாவது மேக்ஸ்வெல்லை வாங்கி விட வேண்டும் என்பதில் சென்னை அணி குறியாக இருந்தது. இதனால் ரூ.14 கோடி வரை முட்டி மோதியது. அதன் பிறகும் பெங்களூரு விலையை உயர்த்தியதால் கையிருப்பு தொகையை மனதில் கொண்டு சென்னை அணி மவுனமானது. முடிவில் ரூ.14¼ கோடிக்கு பெங்களூரு அணி அவரை வசப்படுத்தியது. கடந்த ஐ.பி.எல். தொடரில் சோபிக்காத மேக்ஸ்வெல் 13 ஆட்டங்களில் விளையாடி 108 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை என்பது நினைவுகூரத்தக்கது.

நியூசிலாந்து அணியின் அதிரடி ஆல்-ரவுண்டர் கைல் ஜாமிசன் உயரமான வேகப்பந்து வீச்சாளர்களில் (6 அடி 8 அங்குலம்) ஒருவர். கடந்த ஆண்டு இந்தியாவுக்கு எதிரான தொடரில் அறிமுகமாகி பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் கலக்கிய அவருக்கு எதிர்பார்த்தபடியே ஏலத்தில் அதிக மவுசு காணப்பட்டது. டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் அணிகள் அவருக்காக வரிந்து கட்டின. ரூ.75 லட்சத்தில் இருந்து ஆரம்பித்த தொகை ராக்கெட் வேகத்தில் நகர்ந்து ரூ.10 கோடியை மிஞ்சி பறந்தது. இறுதியில் ரூ.15 கோடிக்கு அவரை பெங்களூரு அணி எடுத்தது.

இதே போல் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் 24 வயதான ஜய் ரிச்சர்ட்சனும் ஒரே நாளில் மில்லியன் டாலருக்கு அதிபதியானார். சமீபத்தில் நிறைவடைந்த பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் அதிக விக்கெட்டுகளை (29 விக்கெட்) கைப்பற்றி கவனத்தை ஈர்த்த ரிச்சர்ட்சனை வாங்க டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் அணிகள் ஆர்வம் காட்டின. இந்த மும்முனை போட்டியில் வெற்றி பஞ்சாப்புக்கே கிடைத்தது. அந்த அணி நி்ாவாகம் ரிச்சர்ட்சனை ரூ.14 கோடிக்கு வாங்கியது.

இந்திய வீரர்களில் சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டரான கர்நாடகாவைச் சேர்ந்த 32 வயதான கிருஷ்ணப்பா கவுதம் அதிகபட்சமாக ரூ.9¼ கோடிக்கு விலை போனார். சர்வதேச போட்டி அனுபவம் இல்லாத இவரது தொடக்க விலை வெறும் ரூ.20 லட்சம் தான். சுழல் மட்டுமின்றி கடைசி கட்டத்தில் அதிரடி காட்டுவதிலும் வல்லவரான அவரை எடுக்க சென்னை சூப்பர் கிங்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் தீவிர முனைப்பு காட்டின. ரூ.9 கோடியை தொட்டதும் ஐதராபாத் ஜகா வாங்கியதால் ரூ.9¼ கோடிக்கு சென்னை அணி கிருஷ்ணப்பா கவுதமை மஞ்சள் சீருடை பட்டாளத்திற்குள் கொண்டு வந்தது. இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரர்களில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் என்ற சிறப்பை கிருஷ்ணப்பா கவுதம் பெற்றார். இதேபோல் இங்கிலாந்து ஆல்-ரவுண்டர் மொயீன் அலியையும் சென்னை அணி (ரூ.7 கோடி) வாங்கியது.

நேற்றைய ஏலத்தில் இன்னொரு அதிசயத்தையும் பார்க்க முடிந்தது. பிரபலமில்லாத ஆஸ்திரேலியாவில் உள்ளூர் போட்டிகளில் மட்டும் விளையாடி வரும் இளம் வேகப்பந்து வீச்சாளர் ரிலி மெரிடித்தின் தொடக்க விலை ரூ.40 லட்சத்தில் இருந்து டெல்லி கேப்பிட்டல்சும், பஞ்சாப் கிங்சும் மோதின. மளமளவென அதிகரித்த தொகை ரூ.8 கோடிக்கு பஞ்சாப் அணி வாங்கிய பிறகே நின்றது. அதே சமயம் ஆஸ்திரேலியாவின் நட்சத்திர பேட்ஸ்மேனான ஸ்டீவன் சுமித் வெறும் ரூ.2.20 கோடிக்கு மட்டுமே ஏலம் போகி ஆச்சரியம் அளித்தார். அவரை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பெற்றது.

சையத் முஷ்டாக் அலி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தமிழக அணி கோப்பையை வெல்வதில் முக்கிய பங்கு வகித்த அதிரடி பேட்ஸ்மேன் ஷாருக்கான் நிச்சயம் நல்ல விலைக்கு போவார் என்ற கணிப்பு அப்படியே பலித்தது. டெல்லி, பெங்களூரு, பஞ்சாப் அணிகள் அவருக்கு வலைவிரித்து ரூ.20 லட்சத்தில் இருந்து படிப்படியாக விலையை உயர்த்தின. இறுதியில் பஞ்சாப் அணி ரூ.5¼ கோடிக்கு தட்டிச்சென்றது. சென்னையைச் சேர்ந்த 25 வயதான ஷாருக்கான் கும்பிளேவின் பயிற்சியின் கீழ், லோகேஷ் ராகுலின் கேப்டன்ஷிப்பில் விளையாட ஆர்வமாக இருப்பதாகவும், ஐ.பி.எல்.-ல் ஆடுவதன் மூலம் நிறைய கற்றுக்கொள்ள முடியும் என்றும் மகிழ்ச்சி பொங்க தெரிவித்தார்.

இதே போல் மற்ற தமிழக வீரர்களான சித்தார்த்தை ரூ.20 லட்சத்துக்கு டெல்லி அணியும், ஹரி நிஷாந்த்தை ரூ.20 லட்சத்திற்கு சென்னை அணியும் எடுத்தது.

தொடக்கத்தில் ஏலம் போகாத ஹர்பஜன்சிங், கேதர் ஜாதவ் ஆகியோரை 2-வது கட்டத்தில் முறையே கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் அவர்களது அடிப்படை விலையான ரூ.2 கோடிக்கு எடுத்தன.