ராகுல், கெய்லை சந்திக்க ஆர்வம்: ‘பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என்று எதிர்பார்க்கவில்லை’ - தமிழக வீரர் ஷாருக்கான் பேட்டி


ராகுல், கெய்லை சந்திக்க ஆர்வம்: ‘பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என்று எதிர்பார்க்கவில்லை’ - தமிழக வீரர் ஷாருக்கான் பேட்டி
x
தினத்தந்தி 20 Feb 2021 12:50 AM GMT (Updated: 20 Feb 2021 12:50 AM GMT)

பெரிய தொகைக்கு ஏலம் போவேன் என்று எதிர்பார்க்கவில்லை என ரூ.5¼ கோடிக்கு விலை போன தமிழக வீரர் ஷாருக்கான் கூறியுள்ளார்.

சென்னை,

சென்னையில் நேற்று முன்தினம் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் ஏலத்தில் தமிழக வீரர் ஷாருக்கானை ரூ.5¼ கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி எடுத்தது. இவரது அடிப்படை தொகை ரூ.20 லட்சம் தான். ஆனால் 3 அணிகள் அவரை வாங்க மல்லுகட்டியதால் தொகை எகிறி இப்போது கோடீஸ்வரர் ஆகி விட்டார். எந்த சர்வதேச போட்டிகளிலும் ஆடாத ஷாருக்கான் தற்போது விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்காக தன்னை தயார்படுத்தி வருகிறார். சென்னையைச் சேர்ந்த 25 வயதான ஷாருக்கான் கூறியதாவது:-

என்னை ஏலத்தில் எடுப்பார்கள் என்று தெரியும். ஆனால் இவ்வளவு தொகைக்கு விலை போவேன் என்று எதிர்பார்க்கவில்லை. ஏலம் நடந்து கொண்டிருந்த போது, விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்கான பயிற்சியை முடித்துக்கொண்டு ஓட்டல் அறைக்கு திரும்பிக்கொண்டிருந்தேன். அங்கு சென்றதும் கேப்டன் தினேஷ் கார்த்திக் மற்றும் சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதற்குரிய பரிசு இது. தினேஷ் கார்த்திக் கேப்டன்ஷிப்பில் ஆடியது வியப்புக்குரிய அனுபவம். அவர் திறமையான கேப்டன். எனக்கு நிறைய நம்பிக்கையை அளிக்கிறார்.

பஞ்சாப் அணியின் கேப்டன் லோகேஷ் ராகுலை சில தடவை சந்தித்து இருக்கிறேன். ஆனால் இப்போது கிறிஸ் கெய்லை சந்திக்க மிகவும் ஆர்வமுடன் இருக்கிறேன். கெய்ல் பந்தை பலமாக அடித்து நொறுக்கக்கூடியவர். அபாயகரமான ஒரு பேட்ஸ்மேன். கெய்ல், ராகுல் போன்ற வீரர்களுடன் இணைந்து ஓய்வறையில் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது சந்தோஷமாக இருக்கும். இதே போல் தலைமை பயிற்சியாளர் கும்பிளேவை சந்தித்து பேசுவதையும் எதிர்நோக்கி உள்ளேன். என் மீது நம்பிக்கை வைத்த பஞ்சாப் அணி நிர்வாகத்துக்கு நன்றி. அணிக்கு நிச்சயம் எனது மிகச்சிறந்த பங்களிப்பை அளிப்பேன்.

நான் இயல்பாகவே அதிரடியாக ஆடும் திறமை கொண்டவன். அந்த அளவுக்கு வலு என்னிடம் உண்டு. அதில் முன்னேற்றம் காண தொடர்ந்து கவனம் செலுத்துகிறேன். அது மட்டுமின்றி கடந்த 2 ஆண்டுகளாக வேகப்பந்தும் வீசி வருகிறேன். என்னால் வேகமாக பவுலிங் செய்ய முடியும்.

எனது சித்தி இந்தி நடிகர் ஷாருக்கானின் தீவிர ரசிகை. உனக்கு ஆண் குழந்தை பிறந்தால் ஷாருக்கான் பெயர் தான் வைக்க வேண்டும் என்று எனது அம்மாவிடம் அடிக்கடி சொல்வாராம். இப்படி தான் எனக்கு ஷாருக்கான் என்ற பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

இவ்வாறு ஷாருக்கான் கூறினார்.

முன்னதாக ஏலத்தின் போது ஷாருக்கானை வாங்கியதும் பஞ்சாப் அணியின் உரிமையாளரான இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா, ஏலத்திற்கு வந்திருந்த கொல்கத்தா அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை சீண்டினார். ‘நாங்கள் ஷாருக்கானை வசப்படுத்தி விட்டோம்’ என்று பிரீத்தி, ஆர்யனை நோக்கி கூறினார்.

ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான 24 வயதான ஜய் ரிச்சர்ட்சன் ஆச்சரியப்படும் வகையில் ரூ.14 கோடிக்கு ஏலம் போனார். அவரை பஞ்சாப் கிங்ஸ் வாங்கியது. 20 ஓவர் தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்துக்கு சென்றுள்ள ரிச்சர்ட்சன் கூறுகையில், ‘எனது பெயரை ஏலத்தில் வாசித்த போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டேன். சில நிமிடங்கள் என்ன நடக்கப்போகிறதோ என்ற பதற்றமும் தொற்றியது. மிகப்பெரிய தொகைக்கு விலை போனதும் ஒன்றிரண்டு தடவை தொகை சரிதானா? என்று பரிசோதித்து கொண்டேன். ஏதோ நேற்று (நேற்று முன்தினம்) களத்தில் விளையாடியது போல் நினைப்பு. மனரீதியாக சோர்வுக்குள்ளானேன். அந்த அளவுக்கு எனக்குள் உணர்ச்சிமயம் ஆட்கொண்டது.

திடீரென பெரிய சுவற்றில் மோதினால் எப்படி ஸ்தம்பித்து நிற்போமோ அதே போல் ஒரு கணம் திகைத்து போனேன். இன்னும் மகிழ்ச்சியில் தான் மிதக்கிறேன். இந்த தொகை எனது வாழ்க்கையை மாற்றப்போகிறது என்பதே உண்மை’ என்றார்.

Next Story