இந்தியாவில் நடக்க உள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டியை வேறுநாட்டுக்கு மாற்ற வலியுறுத்துவோம் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பேட்டி


இந்தியாவில் நடக்க உள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டியை வேறுநாட்டுக்கு மாற்ற வலியுறுத்துவோம் - பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பேட்டி
x
தினத்தந்தி 21 Feb 2021 1:08 AM GMT (Updated: 21 Feb 2021 1:08 AM GMT)

இந்தியாவில் நடக்க உள்ள 20 ஓவர் உலக கோப்பை போட்டியை வேறுநாட்டுக்கு மாற்ற வலியுறுத்துவோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் பேட்டியில் கூறினார்.

கராச்சி, 

7-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் நடக்கிறது. இந்த போட்டியை வேறு நாட்டுக்கு மாற்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நெருக்கடி கொடுக்க தொடங்கியுள்ளது.

அந்த நாட்டு கிரிக்கெட் வாரிய தலைவர் இசான் மணி நேற்று அளித்த பேட்டியில், ‘20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்க வேண்டும் என்றால் விசா வழங்குவதில் எழுத்துப்பூர்வமான உறுதிமொழியை இந்தியா எங்களுக்கு மார்ச் மாத இறுதிக்குள் வழங்க வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் கூறியுள்ளோம். 

வீரர்களுக்கு மட்டுமல்ல, பாகிஸ்தான் ரசிகர்கள், நிர்வாகிகள், பத்திரிகையாளர் ஆகியோருக்கும் விசா கொடுப்பதில் எழுத்துப்பூர்வ உத்தரவாதம் வேண்டும். இதை இந்தியா செய்ய தவறினால் அதன் பிறகு நாங்கள் இந்த போட்டியை இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றக்கோரி அழுத்தம் கொடுப்போம்’ என்றார்.

சமீபத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்க பயணத்தை தள்ளிவைத்தது குறித்து ஏமாற்றம் தெரிவித்த இசான் மணி, கொரோனா வைரஸ் பரவல் இங்கிலாந்தில் உச்சத்தில் இருந்த போது பாகிஸ்தான் அணி அங்கு வெற்றிகரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடியதை சுட்டிக்காட்டினார்.

Next Story