விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது தமிழக அணி - மற்றொரு ஆட்டத்தில் ஜார்கண்ட் சாதனை


விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது தமிழக அணி - மற்றொரு ஆட்டத்தில் ஜார்கண்ட் சாதனை
x
தினத்தந்தி 21 Feb 2021 1:27 AM GMT (Updated: 21 Feb 2021 1:27 AM GMT)

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப்பை தோற்கடித்து வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

இந்தூர்,

19-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் நேற்று தொடங்கியது. இந்தியாவின் 6 நகரங்களில் நடைபெறும் இந்த போட்டியில் 38 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் முடிவில் 8 அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

எலைட் பி பிரிவில் அங்கம் வகிக்கும் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி தனது தொடக்க ஆட்டத்தில் பஞ்சாப்பை சந்தித்தது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி 4 விக்கெட்டுக்கு 288 ரன்கள் சேர்த்தது. சதம் அடித்த குர்கீரத் சிங் மான் 139 ரன்களுடன் (121 பந்து, 14 பவுண்டரி, 7 சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார்.

அடுத்து களம் இறங்கிய தமிழக அணி 49 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 289 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விக்கெட் கீப்பர் ஜெகதீசன் 101 ரன்களும் (103 பந்து, 14 பவுண்டரி, 2 சிக்சர்), பாபா அபராஜித் 88 ரன்களும் (11 பவுண்டரி, 1 சிக்சர்), ஷாருக்கான் 55 ரன்களும் (36 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) விளாசினர். கேப்டன் தினேஷ் கார்த்திக் 19 ரன்னில் கேட்ச் ஆனார்.

இதே பிரிவில் இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஜார்கண்ட் அணி, மத்திய பிரதேசத்தை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்த மத்தியபிரதேசம் முதலில் ஜார்கண்டை பேட் செய்ய அழைத்தது. இதன்படி முதலில் பேட்டிங் செய்த ஜார்கண்ட் அணியில் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான இஷான் கிஷன் மைதானத்தின் நாலாபுறமும் பந்தை தெறிக்கவிட்டார். ரன்மழை பொழிந்த அவர் ஸ்கோரை மளமளவென உயர்த்தினார். இஷான் கிஷன் 173 ரன்கள் (94 பந்து, 19 பவுண்டரி, 11 சிக்சர்) நொறுக்கினார். அவரைத் தொடர்ந்து மிடில் வரிசையில் விராட் சிங் (68 ரன்), சுமித் குமார் (52 ரன்), அனுகுல் ராய் (72 ரன்) ஆகியோர் அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை 400 ரன்களை கடக்க வைத்தனர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் ஜார்கண்ட் அணி 9 விக்கெட்டுக்கு 422 ரன்கள் குவித்து மலைக்க வைத்தது. விஜய் ஹசாரே போட்டி வரலாற்றில் ஒரு அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2010-ம் ஆண்டு ரெயில்வேக்கு எதிரான ஆட்டத்தில் மத்தியபிரதேசம் 6 விக்கெட்டுக்கு 412 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச சாதனையாக இருந்தது.

தொடர்ந்து ஆடிய மத்திய பிரதேச அணி 18.4 ஓவர்களில் வெறும் 98 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 324 ரன்கள் வித்தியாசத்தில் ஜார்கண்ட் மெகா வெற்றியை ருசித்தது. வேகப்பந்து வீச்சாளர் வருண் ஆரோன் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

பெங்களூருவில் நடந்த ஒடிசா-கேரளா (சி பிரிவு) இடையிலான ஆட்டத்தில் மழை பாதிப்புக்கு மத்தியில் கேரள அணி ராபின் உத்தப்பாவின் சதத்தின் (107 ரன்) உதவியோடு 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேரள வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் 2 விக்கெட் வீழ்த்தினார். இதே பிரிவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கர்நாடகாவுக்கு 9 ரன் வித்தியாசத்தில் உத்தரபிரதேச அணி அதிர்ச்சி அளித்தது.

இன்று 10 லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. இதில் மும்பை-டெல்லி, புதுச்சேரி-ராஜஸ்தான் ஆட்டங்களும் (காலை 9 மணி) அடங்கும்.

Next Story