கிரிக்கெட்

‘கேப்டன்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறேன்’ - இஷாந்த் ஷர்மா பேட்டி + "||" + ‘I am acting in line with the expectations of the captains’ - Interview with Ishant Sharma

‘கேப்டன்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறேன்’ - இஷாந்த் ஷர்மா பேட்டி

‘கேப்டன்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறேன்’ - இஷாந்த் ஷர்மா பேட்டி
‘கேப்டன்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்பட்டு வருகிறேன்’ என்று 100-வது டெஸ்டில் களம் காண இருக்கும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா தெரிவித்தார்.
ஆமதாபாத், 

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள சர்தார் பட்டேல் ஸ்டேடியத்தில் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. புதிதாக கட்டப்பட்ட பிரமாண்டமான ஸ்டேடியத்தில் பகல்-இரவாக (மின்னொளியின் கீழ்) நடைபெறும் இந்த போட்டியில் மிளிரும் தன்மை கொண்ட இளம் சிவப்பு நிற (பிங்க்) பந்து பயன்படுத்தப்படுகிறது.

இந்த போட்டி இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவுக்கு 100-வது டெஸ்ட் போட்டியாகும். முன்னாள் கேப்டன் கபில்தேவுக்கு பிறகு 100 டெஸ்ட் மைல்கல்லை எட்டும் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா ஆவார்.

100-வது டெஸ்டில் களம் காண இருக்கும் 32 வயதான இஷாந்த் ஷர்மா நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-

என்னை அதிகம் புரிந்து கொண்ட கேப்டன் யார்? என்று குறிப்பிட்டு சொல்வது கடினமானதாகும். எனக்கு கேப்டனாக இருந்த எல்லோருமே என்னை நன்கு புரிந்து செயல்பட்டு இருக்கிறார்கள். கேப்டன் நம்மை புரிந்து கொள்வதை விட கேப்டன் என்ன நினைக்கிறார், நம்மிடம் இருந்து எத்தகைய செயல்பாட்டை எதிர்பார்க்கிறார் என்பதை புரிந்து செயல்பட வேண்டியது எப்பொழுதும் மிகவும் முக்கியமானதாகும். ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்காதது 100 டெஸ்ட் போட்டி இலக்கை விரைவாக எட்ட உதவியதா? என்று கேட்கிறீர்கள். இதனை நான் கெட்டதிலும் நல்லது என்று தான் பார்க்கிறேன். குறுகிய வடிவிலான போட்டியில் நான் விளையாட விரும்பவில்லை என்று சொல்லமாட்டேன். எந்த வகையிலான போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கிறதோ? அதில் சிறப்பாக செயல்பட பயிற்சி எடுப்பது தான் விளையாட்டு வீரரின் பணியாகும். குறுகிய வடிவிலான போட்டியில் ஆடாததை நினைத்து எனது டெஸ்ட் போட்டியில் பாதிப்பை ஏற்படுத்த விரும்பமாட்டேன். ஒரு வடிவிலான போட்டியிலாவது விளையாட வாய்ப்பு கிடைப்பதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

மற்ற விஷயங்கள் குறித்து அதிகம் சிந்திக்காமல் டெஸ்ட் போட்டியில் மட்டும் கவனம் செலுத்தியது 100-வது டெஸ்டை எட்ட உதவி இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். மூன்று வடிவிலான போட்டியிலும் விளையாடி இருந்தால் 100-வது டெஸ்ட் இலக்கை எட்டி இருக்க முடியாது என்று சொல்லமாட்டேன். ஆனால் இந்த இலக்கை எட்ட அதிக காலம் பிடித்து இருக்கலாம்.

131 டெஸ்டில் விளையாடி இருக்கும் கபில்தேவின் சாதனையை கடப்பதற்கு நீண்ட காலம் பிடிக்கும். தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெறுவது குறித்து மட்டுமே சிந்திக்க நினைக்கிறேன். எனது தனிப்பட்ட சாதனையை காட்டிலும் அணியின் வெற்றிக்கு தான் முக்கியத்துவம் அளிப்பேன். உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வென்றால் ஒருநாள் உலக கோப்பையை வென்றது போன்ற மகிழ்ச்சியை அடைவேன். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் போல் 38 வயது வரை விளையாடுவேனா? என்று சொல்ல முடியாது. ஒரு நேரத்தில் ஒரு ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன். அடுத்து என்ன வரும் என்பது யாருக்கு தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார். இஷாந்த் ஷர்மா 99 டெஸ்ட் போட்டியில் விளையாடி 302 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். 2013-ம் ஆண்டுக்கு பிறகு 20 ஓவர் அணியிலும், 2016-ம் ஆண்டுக்கு பிறகு ஒருநாள் அணியிலும் அவர் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.