கிரிக்கெட்

புதிய அவதாரம் எடுக்கிறார், தினேஷ் கார்த்திக் + "||" + New incarnation, Dinesh Karthik

புதிய அவதாரம் எடுக்கிறார், தினேஷ் கார்த்திக்

புதிய அவதாரம் எடுக்கிறார், தினேஷ் கார்த்திக்
தினேஷ் கார்த்திக் புதிய அவதாரமாக டெலிவிஷன் வர்ணனையாளர் பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளார்.
புதுடெல்லி, 

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான தினேஷ் கார்த்திக் 2019-ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கு பிறகு அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டார். விக்கெட் கீப்பிங்கில் டோனி சிறந்து விளங்கியதால் அவருக்கு இடம் கிடைக்காமல் போனது. அத்துடன் டோனி ஓய்வுக்கு பிறகு ரிஷாப் பண்ட், லோகேஷ் ராகுல், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட இளம் விக்கெட் கீப்பர்களின் படையெடுப்பு தினேஷ் கார்த்திக்கின் மறுபிரவேசத்துக்கு முட்டுக்கட்டையாக அமைந்தது. 

இதனால் அவர் இனிமேல் இந்திய அணியில் இடம் பிடிப்பது என்பது இயலாத காரியமாகும். இந்த நிலையில் தினேஷ் கார்த்திக் புதிய அவதாரம் எடுக்க இருக்கிறார். அதாவது அவர் டெலிவிஷன் வர்ணனையாளர் பணியில் ஈடுபட முடிவு செய்துள்ளார். இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 20 ஓவர் போட்டி தொடர் ஆமதாபாத்தில் வருகிற 12-ந் தேதி தொடங்குகிறது. 

இதையடுத்து ஒருநாள் போட்டி தொடர் புனேயில் நடக்கிறது. இந்த போட்டிகளை இங்கிலாந்தில் ஒளிபரப்பும் உரிமத்தை ஸ்கை ஸ்போர்ட்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. அந்த நிறுவனத்தின் வர்ணனையாளர் குழுவில் 35 வயதான தினேஷ் கார்த்திக் இடம் பிடித்துள்ளார். அந்த குழுவில் அங்கம் வகிக்கும் ஒரே இந்தியர் தினேஷ் கார்த்திக் தான். மற்ற அனைவரும் வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் ஆவர். தற்போது தினேஷ் கார்த்திக் விஜய் ஹசாரே கோப்பை போட்டிக்கான தமிழக அணிக்கு தலைமை தாங்கி விளையாடி வருகிறார். 

இந்த போட்டி வருகிற 14-ந் தேதி முடிவடைகிறது. தமிழக அணி ‘நாக்-அவுட்’ சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில் தினேஷ் கார்த்திக் வர்ணனையாளர் பணியில் பாதியில் இணைவார் என்று தெரிகிறது.