‘பிங்க் பந்தில் பேட்டிங் செய்வது சவாலானது’ - இந்திய கேப்டன் கோலி பேட்டி


‘பிங்க் பந்தில் பேட்டிங் செய்வது சவாலானது’ - இந்திய கேப்டன் கோலி பேட்டி
x
தினத்தந்தி 23 Feb 2021 11:51 PM GMT (Updated: 23 Feb 2021 11:51 PM GMT)

பிங்க் பந்தில் பேட்டிங் செய்வது சவாலானது என்று இந்திய கேப்டன் கோலி கூறினார்.

ஆமதாபாத்,

ஆமதாபாத்தில் இன்று தொடங்கும் 3-வது டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இங்குள்ள ஆடுகளத்தில் பந்து அதிகமாக ‘ஸ்விங்’ ஆக வாய்ப்பில்லை என்ற தகவல், துல்லியமான கணிப்பாக தோன்றவில்லை. சிவப்பு நிற பந்தை விட பிங்க் நிற பந்து அதிகமாக ‘ஸ்விங்’ ஆகும். 2019-ம் ஆண்டு வங்காளதேசத்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் விளையாடிய போது இதை அனுபவித்து இருக்கிறோம். ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தால் இங்கிலாந்தின் கை ஓங்கி விடும் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ளமாட்டேன். இங்கிலாந்து அணியின் பலம், பலவீனம் என்ன? என்பது பற்றி உண்மையிலேயே எங்களுக்கு கவலையில்லை. இதைவிட அதிகமாக வேகப்பந்து வீச்சுக்கு உகந்த சூழலை கொண்ட அவர்களது இடத்தில் (இங்கிலாந்து) வைத்தே அவர்களை வீழ்த்தியிருக்கிறோம். அது மட்டுமின்றி உலகின் சிறந்த வேகப்பந்து வீச்சு தாக்குதல் நம்மிடம் இருக்கிறது. எனவே பந்தின் தாக்கம் எப்படி இருந்தாலும் கவலையில்லை. எந்த சவாலையும் சந்திக்க தயாராக இருக்கிறோம். ஒரு அணியாக நன்றாக விளையாட வேண்டும். அது தான் முக்கியம்.

ஆடுகளம் எப்படி இருந்தாலும் பிங்க் பந்தில் விளையாடுவது என்பது அதிக சவால் நிறைந்தது. குறிப்பாக சூரியன் மறைந்து மின்னொளியின் கீழ் பேட்டிங்கை தொடங்கும் போது ஒன்றரை மணி நேரம் மிகவும் சவாலாக இருக்கும்.

இந்த டெஸ்டில் சுழற்பந்து வீச்சு நிச்சயம் முக்கிய பங்கு வகிக்கும். அதே சமயம் புதிய பந்தை வீசும் வேகப்பந்து வீச்சாளர்களையும் புறந்தள்ளி விட முடியாது. பந்தின் பளபளப்பு இருக்கும் வரை அவர்களாலும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும்.

வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மாவை நீண்ட காலமாக எனக்கு தெரியும். மாநில அணிக்காக (டெல்லி) என்னுடன் இணைந்து விளையாடி இருக்கிறார். மாநில அணிக்காக ஆடிய போது பல ஆண்டுகள் ஒரே அறையில் தங்கியுள்ளோம். இந்திய அணிக்காக அவர் முதல்முறையாக தேர்வான போது, மதியம் அறையில் தூங்கிக்கொண்டிருந்தார். பெட்டில் படுத்திருந்த அவருக்கு ஒரு மிதி கொடுத்து, அணிக்கு தேர்வாகியிருக்கும் தகவலை சொன்னேன். இதை நம்ப முடியாமல் என்னை பார்த்தார். அதை இப்போது திரும்பி பார்க்கிறேன்.

இஷாந்த் ஷர்மா 100-வது டெஸ்டில் கால்பதிப்பது பெரிய சாதனையாகும். 4-5 ஆண்டுகளாக அவர் உற்சாகமாக பந்து வீசுவதை பார்க்கவே மகிழ்ச்சியாக இருக்கிறது. ஒரு வேகப்பந்து வீச்சாளர் 100 டெஸ்டில் ஆடுவது எளிதான விஷயம் அல்ல. அதற்கு தொடர்ந்து உடல்தகுதியை சிறப்பாக வைத்திருக்க வேண்டும். வேகப்பந்து வீச்சாளர் நீண்ட காலம் விளையாடுவதை பார்ப்பது இந்த காலத்தில் அரிது. ஒரு வேகப்பந்து வீச்சாளர் 100 டெஸ்டில் ஆடுவது என்பது பேட்ஸ்மேன் 150 டெஸ்டில் விளையாடுவதற்கு இணையானது. அவர் மேலும் பல ஆண்டுகள் தொடர்ந்து விளையாடி இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு உந்துசக்தியாக இருப்பார் என்று நம்புகிறேன்.

இவ்வாறு விராட் கோலி கூறினார்.

Next Story