கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் இங்கிலாந்து அணி 112 ரன்னில் சுருண்டது - அக்‌ஷர் பட்டேல் 6 விக்கெட் சாய்த்து அசத்தல் + "||" + Day-night Test against India England 112 all out on the run - Akshar Patel took 6 wickets

இந்தியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் இங்கிலாந்து அணி 112 ரன்னில் சுருண்டது - அக்‌ஷர் பட்டேல் 6 விக்கெட் சாய்த்து அசத்தல்

இந்தியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் இங்கிலாந்து அணி 112 ரன்னில் சுருண்டது - அக்‌ஷர் பட்டேல் 6 விக்கெட் சாய்த்து அசத்தல்
ஆமதாபாத்தில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் அக்‌ஷர் பட்டேலின் சுழலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இங்கிலாந்து அணி 112 ரன்னில் ‘சரண்’ அடைந்தது.
ஆமதாபாத்,

இந்தியாவுக்கு வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றதால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் நீடிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு ஆட்டமாக (பிங்க் பந்து டெஸ்ட்) குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. உலகின் மிகப்பெரிய ஸ்டேடியத்தில் நடக்கும் இந்த டெஸ்டுக்கான இ்ந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன. முகமது சிராஜ், குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு ஜஸ்பிரித் பும்ரா, வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டனர். இங்கிலாந்து அணியில் 4 மாற்றமாக ரோரி பர்ன்ஸ், லாரன்ஸ், மொயீன் அலி, ஆலி ஸ்டோன் கழற்றி விடப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட், ஜோப்ரா ஆர்ச்சர், ஜாக் கிராவ்லி ஆகியோர் இடம் பிடித்தனர். இந்தியா 3 சுழற்பந்து வீச்சாளர்களுக்கு வாய்ப்பு வழங்கிய நிலையில், இங்கிலாந்து ஒரே சுழற்பந்து வீச்சாளரை மட்டும் தேர்வு செய்தது ஆச்சரியம் அளித்தது.

‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் தயக்கமின்றி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி ஜாக் கிராவ்லியும், டாம் சிப்லியும் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். தனது 100-வது டெஸ்டில் கால்பதித்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா 3-வது ஓவரிலேயே முத்திரை பதித்தார். அவரது பந்து வீச்சில் டாம் சிப்லி (0) ஸ்லிப்பில் நின்ற ரோகித் சர்மாவிடம் பிடிபட்டார். அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ (0) அக்‌ஷர் பட்டேலின் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

இதன் பின்னர் ஜாக் கிராவ்லியும், கேப்டன் ஜோ ரூட்டும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். கிராவ்லி அவ்வப்போது பவுண்டரிகளை ஓடவிட்டார்.

இருப்பினும் அக்‌ஷர் பட்டேலும், அஸ்வினும் இடைவிடாது சுழல் தாக்குதலை தொடுத்து அழுத்தம் கொடுத்தனர். ஆடுகளத்தில் பந்து நன்கு சுழன்று திரும்பியதால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் தடுமாறினர். ஸ்கோர் 74 ரன்களை எட்டிய போது ஜோ ரூட் (17 ரன், 37 பந்து, 2 பவுண்டரி) அஸ்வின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தின்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. தொடர்ந்து ஜாக் கிராவ்லியும் (53 ரன், 84 பந்து, 10 பவுண்டரி) இதே போல் வீழ்ந்தார்.

அதன் பிறகு இங்கிலாந்தின் பேட்டிங் வரிசை முற்றிலும் சீர்குலைந்தது. பந்து எப்போது சுழன்று திரும்புகிறது? எப்போது சுழற்சி இன்றி நேராக வருகிறது என்பதை கணிக்க முடியாமல், அவர்கள் திண்டாடினர். துணை கேப்டன் பென் ஸ்டோக்சும் (6 ரன்) தாக்குப்பிடிக்க முடியவில்லை.

இரவு உணவு இடைவேளைக்கு முன்பாக இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 48.4 ஓவர்களில் 112 ரன்னில் சுருண்டது. கடைசி 38 ரன்களுக்கு அந்த அணி 8 விக்கெட்டுகளை தாரைவார்த்தது. அத்துடன் தொடர்ச்சியாக 4 இன்னிங்ஸ்களில் அந்த அணி 200 ரன்னுக்குள் முடங்கி இருப்பது கவனிக்கத்தக்கது.

இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் 4-வது குறைந்த ஸ்கோர் இதுவாகும். அதே சமயம் கடந்த 35 ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக அவர்களின் மோசமான ஸ்கோராகவும் பதிவானது.

உள்ளூர் வீரரான இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் 38 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை அள்ளினார். பகல்-இரவு டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் ஒருவரின் 2-வது சிறந்த பந்து வீச்சு இதுவாகும். அஸ்வினுக்கு 3 விக்கெட் கிடைத்தது.

பின்னர் இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடியது. ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் தொடக்க ஆட்டக்காரர்களாக நுழைந்தனர். இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் பிங்க் பந்தில் ஆக்ரோஷமாக வீசி நெருக்கடி அளித்தனர். 27-வது பந்தில் தான் சுப்மான் கில் முதல் ரன்னையே எடுத்தார். மறுமுனையில் ரோகித் சர்மா அருமையாக ஆடினார். முதல் விக்கெட்டுக்கு 33 ரன்கள் எடுத்து இந்த ஜோடி பிரிந்தது. சுப்மான் கில் 11 ரன்னில் (51 பந்து) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த புஜாரா(0) ஜாக் லீச்சின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார்.

இதன் பின்னர் ரோகித் சர்மாவும், விராட் கோலியும் இணைந்து சமாளித்தனர். கோலி 24 ரன்னில் இருந்த போது கொடுத்த மிக எளிதான கேட்ச் வாய்ப்பை ஆலி போப் கோட்டை விட்டார். இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறிய கோலி (27 ரன், 58 பந்து, 3 பவுண்டரி) ஒரு ஓவர் எஞ்சியிருந்த போது போல்டாகிப் போனார்.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 99 ரன்கள் சேர்த்துள்ளது. ரோகித் சர்மா 57 ரன்களுடனும் (82 பந்து, 9 பவுண்டரி), ரஹானே ஒரு ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

இன்று 2-வது நாள் ஆட்டம் பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கி நடைபெறும்.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

இங்கிலாந்து

கிராவ்லி எல்.பி.டபிள்யூ (பி)

அக்‌ஷர் 53

டாம் சிப்லி (சி) ரோகித்

(பி) இஷாந்த் 0

பேர்ஸ்டோ எல்.பி.டபிள்யூ

(பி) அக்‌ஷர் 0

ஜோ ரூட் எல்.பி.டபிள்யூ

(பி) அஸ்வின் 17

பென் ஸ்டோக்ஸ்

எல்.பி.டபிள்யூ (பி) அக்‌ஷர் 6

ஆலி போப் (பி) அஸ்வின் 1

பென் போக்ஸ் (பி) அக்‌ஷர் 12

ஜோப்ரா ஆர்ச்சர் (பி)அக்‌ஷர் 11

ஜாக் லீச் (சி) புஜாரா (பி)

அஸ்வின் 3

ஸ்டூவர்ட் பிராட் (சி) பும்ரா

(பி) அக்‌ஷர் 3

ஆண்டர்சன் (நாட்-அவுட்) 0

எக்ஸ்டிரா 6

மொத்தம் (48.4 ஓவர்களில்

ஆல்-அவுட்) 112

விக்கெட் வீழ்ச்சி: 1-2, 2-27, 3-74, 4-80, 5-81, 6-81, 7-93, 8-98, 9-105.

பந்து வீச்சு விவரம்

இஷாந்த் ஷர்மா 5-1-26-1

பும்ரா 6-3-19-0

அக்‌ஷர் பட்டேல் 21.4-6-38-6

அஸ்வின் 16-6-26-3

இந்தியா

ரோகித் சர்மா (நாட்-அவுட்) 57

சுப்மான் கில் (சி) கிராவ்லி

(பி) ஆர்ச்சர் 11

புஜாரா எல்.பி.டபிள்யூ (பி)

ஜாக் லீச் 0

விராட் கோலி (பி) ஜாக் லீச் 27

ரஹானே (நாட்-அவுட்) 1

எக்ஸ்டிரா 3

மொத்தம் (33 ஓவர்களில்

3 விக்கெட்டுக்கு) 99

விக்கெட் வீழ்ச்சி: 1-33, 2-34, 3-98

பந்து வீச்சு விவரம்

ஆண்டர்சன் 9-6-11-0

ஸ்டூவர்ட் பிராட் 6-1-16-0

ஜோப்ரா ஆர்ச்சர் 5-2-24-1

ஜாக் லீச் 10-1-27-2

பென் ஸ்டோக்ஸ் 3-0-19-0