ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி ‘திரில்’ வெற்றி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: நியூசிலாந்து அணி ‘திரில்’ வெற்றி
x
தினத்தந்தி 26 Feb 2021 12:24 AM GMT (Updated: 26 Feb 2021 12:24 AM GMT)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி ‘திரில்’ வெற்றி பெற்றது.

டுனெடின், 

நியூசிலாந்து- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டுனெடினில் நேற்று நடந்தது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 7 விக்கெட்டுக்கு 219 ரன்கள் குவித்தது. உள்ளூர் சூழலில் அதிரடியில் கலக்கிய தொடக்க ஆட்டக்காரர் மார்ட்டின் கப்தில் 97 ரன்களும் (50 பந்து, 6 பவுண்டரி, 8 சிக்சர்), வில்லியம்சன் 53 ரன்களும், ஜேம்ஸ் நிஷம் 45 ரன்களும் விளாசினர். 

8 சிக்சர் நொறுக்கிய மார்ட்டின் கப்தில் சர்வதேச 20 ஓவர்போட்டியில் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முன்னிலையில் இருந்த இந்திய வீரர் ரோகித் சர்மாவை (127 சிக்சர், 108 போட்டி) பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்தார். 

கப்தில் 96 ஆட்டங்களில் ஆடி 132 சிக்சர்கள் அடித்துள்ளார். தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலிய அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 215 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் நியூசிலாந்து அணி 4 ரன் வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றியை சுவைத்தது. கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 15 ரன் தேவைப்பட்ட போது அந்த அணி 2 விக்கெட்டுகளை பறிகொடுத்து 10 ரன் மட்டுமே எடுத்தது. 

அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 78 ரன்கள் சேர்த்தார். இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி 5 போட்டி கொண்ட தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 3-வது 20 ஓவர் போட்டி 3-ந் தேதி வெலிங்டனில் நடக்கிறது.

Next Story