கிரிக்கெட்

சுழல் சூறாவளியால் 2-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது பகல்-இரவு டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி - இங்கிலாந்தை சுருட்டியது + "||" + The hurricane ended on the 2nd day Day-Night Test: By 10 wickets India beat England by a huge margin

சுழல் சூறாவளியால் 2-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது பகல்-இரவு டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி - இங்கிலாந்தை சுருட்டியது

சுழல் சூறாவளியால் 2-வது நாளிலேயே முடிவுக்கு வந்தது பகல்-இரவு டெஸ்ட்: 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி - இங்கிலாந்தை சுருட்டியது
ஆமதாபாத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான பகல்-இரவு டெஸ்டில் இந்திய அணி 2-வது நாளிலேயே 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிக்கனியை பறித்தது.
ஆமதாபாத், 

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி பகல்-இரவு மோதலாக (பிங்க் பந்து டெஸ்ட்) உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் ‘பேட்’ செய்த இங்கிலாந்து முதல்இன்னிங்சில் 112 ரன்னில் சுருண்டது. பின்னர் தனது முதல்இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கு 99 ரன்கள் எடுத்திருந்தது. ரோகித் சர்மா (57 ரன்), அஜிங்யா ரஹானே (1 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று யாரும் எதிர்பாராத வண்ணம் போட்டியே முடிவுக்கு வந்தது. சுழலுக்கு சொர்க்கமாக திகழ்ந்த இந்த ஆடுகளத்தில் சுழற்பந்து வீச்சாளர்கள் மாயாஜால வித்தை காட்டினர்.

முந்தைய நாள் ஸ்கோருடன் தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் ரோகித் சர்மா ஆண்டர்சனின் ஓவரில் 2 பவுண்டரி அடித்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். இங்கிலாந்தின் ஸ்கோரை கடந்ததும் ரோகித்-ரஹானே ஜோடி பிரிந்தது. ஸ்கோர் 114 ரன்களை எட்டிய போது ரஹானே (7 ரன்) ஜாக் லீச்சின் சுழலில் எல்.பி.டபிள்யூ. ஆனார். அவரது அடுத்த ஓவரில் ரோகித் சர்மா (66 ரன், 96 பந்து, 11 பவுண்டரி) முட்டிப்போட்டு பந்தை விரட்ட முயற்சித்த போது அவரும் எல்.பி.டபிள்யூ.-வில் சிக்கினார். டி.ஆர்.எஸ். தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் பலன் இல்லை.

இதன் பிறகு பகுதி நேர சுழற்பந்து வீச்சாளரான இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் ஆடுகளத்தை சாதகமாக பயன்படுத்தி அமர்க்களப்படுத்தினார். அவரது பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கடைசிகட்ட பேட்ஸ்மேன்கள் வரிசையாக நடையை கட்டினர். இந்த நெருக்கடிக்கு மத்தியில் அஸ்வின் (17 ரன்) கொஞ்சம் தாக்குப்பிடித்து ஆடினார்.

தேனீர் இடைவேளைக்கு முன்பாக இந்திய அணி முதல் இன்னிங்சில் 53.2 ஓவர்களில் 145 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜோ ரூட் 8 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். இது அவரது சிறந்த பந்து வீச்சாகும். ஜாக் லீச் 4 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் 33 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் பதிலடி கொடுத்தனர். அக்‌ஷர் பட்டேல் வீசிய முதல் பந்திலேயே ஜாக் கிராவ்லி (0) கிளீன் போல்டு ஆனார். அடுத்து வந்த ஜானி பேர்ஸ்டோ (0) 3-வது பந்தில் போல்டு ஆகி வெளியேற்றப்பட்டார். இந்த அதிர்ச்சியில் இருந்து இங்கிலாந்தால் கடைசி வரை மீள முடியவில்லை.

ஆடுகளத்தில் அதிகப்படியான சுழற்சியும், அதிலும் பிங்க் பந்து எகிறும் போது கணிக்க முடியாமல் திணறுவதும் தொடர்கதையானது. அக்‌ஷர் பட்டேல், அஸ்வின் ஆகிய இரட்டை சுழல் சூறாவளிகளை மட்டும் கேப்டன் விராட் கோலி இடைவிடாது பயன்படுத்தி குடைச்சல் கொடுத்தார்.

இங்கிலாந்தின் விக்கெட்டுகள் கொத்து கொத்தாக சரிந்தன. அனுபவம் வாய்ந்த துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (25 ரன், 34 பந்து, 3 பவுண்டரி), கேப்டன் ஜோ ரூட் (19 ரன், 45 பந்து) எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்ந்ததும் அவர்களின் பேட்டிங் வரிசை முற்றிலும் சீர்குலைந்தது. எந்த வீரராலும் பேட்டிங்கில் கச்சிதமாக செயல்பட முடியவில்லை. அஸ்வினும், அக்‌ஷர் பட்டேலும் கூட்டாக 30 ஓவர்களை வீசி எதிரணியின் 9 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தனர். அதன் பிறகு மற்றொரு சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் பந்து வீச அழைக்கப்பட்டார். அவர் தனது முதல் ஓவரிலேயே எஞ்சிய ஒரு விக்கெட்டையும் காலி செய்தார்.

இரவு உணவு இடைவேளைக்கு முன்பாக இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 30.4 ஓவர்களில் 81 ரன்னில் முடங்கியது. இந்தியாவுக்கு எதிராக இங்கிலாந்தின் மோசமான ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 1971-ம் ஆண்டு லண்டன் ஓவலில் இந்தியாவுக்கு எதிராக 101 ரன்னில் ஆட்டமிழந்ததே குறைந்த ஸ்கோராக இருந்தது. இந்திய தரப்பில் அக்‌ஷர் பட்டேல் 5 விக்கெட்டுகளும், அஸ்வின் 4 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

இதன் மூலம் இந்தியாவுக்கு 49 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எளிய இலக்கை இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மாவும், சுப்மான் கில்லும் தடுமாற்றமின்றி எட்டிப்பிடித்தனர். ஜோ ரூட்டின் ஓவரில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் இன்னிங்சை தித்திப்பாக ரோகித் சர்மா முடித்து வைத்தார். இந்திய அணி 2-வது இன்னிங்சில் 7.4 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 49 ரன்கள் சேர்த்து 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றியை ருசித்தது. ரோகித் சர்மா 25 ரன்களுடனும் (25 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்), சுப்மான் கில் 15 ரன்னுடனும் (21 பந்து, ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தனர். இரண்டு இன்னிங்சையும் சேர்த்து மொத்தம் 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், 2-வது டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றிருந்தன.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குரிய 30 புள்ளிகளை தட்டிச் சென்றது. கடைசி டெஸ்டில் இந்திய அணி டிரா செய்தாலே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு முன்னேறி விடலாம். மாறாக இந்த டெஸ்டில் தோற்றதால் இங்கிலாந்தின் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்பு முடிவுக்கு வந்தது.

இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இதே மைதானத்தில் பகல் போட்டியாக வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

இங்கிலாந்து 112

இந்தியா

ரோகித் சர்மா எல்.பி.டபிள்யூ

(பி) லீச் 66

சுப்மான் கில் (சி) கிராவ்லி

(பி) ஆர்ச்சர் 11

புஜாரா எல்.பி.டபிள்யூ (பி) லீச் 0

விராட் கோலி (பி) லீச் 27

ரஹானே எல்.பி.டபிள்யூ

(பி) லீச் 7

ரிஷாப் பண்ட் (சி) போக்ஸ்

(பி) ரூட் 1

அஸ்வின் (சி) கிராவ்லி (பி) ரூட் 17

வாஷிங்டன் சுந்தர் (பி) ரூட் 0

அக்‌ஷர் பட்டேல் (சி) சிப்லி

(பி) ரூட் 0

இஷாந்த் ஷர்மா (நாட்-அவுட்) 10

பும்ரா எல்.பி.டபிள்யூ (பி) ரூட் 1

எக்ஸ்டிரா 5

மொத்தம் (53.2 ஓவர்களில்

ஆல்-அவுட்) 145

விக்கெட் வீழ்ச்சி: 1-33, 2-34, 3-98, 4-114, 5-115, 6-117, 7-125, 8-125, 9-134.

பந்து வீச்சு விவரம்

ஆண்டர்சன் 13-8-20-0

ஸ்டூவர்ட் பிராட் 6-1-16-0

ஜோப்ரா ஆர்ச்சர் 5-2-24-1

ஜாக் லீச் 20-2-54-4

பென் ஸ்டோக்ஸ் 3-0-19-0

ஜோ ரூட் 6.2-3-8-5

2-வது இன்னிங்ஸ்

இங்கிலாந்து

ஜாக் கிராவ்லி (பி) அக்‌ஷர் 0

டாம் சிப்லி (சி) பண்ட்

(பி) அக்‌ஷர் 7

பேர்ஸ்டோ (பி) அக்‌ஷர் 0

ஜோ ரூட் எல்.பி.டபிள்யூ

(பி) அக்‌ஷர் 19

பென் ஸ்டோக்ஸ் எல்.பி.டபிள்யூ

(பி) அஸ்வின் 25

ஆலி போப் (பி) அஸ்வின் 12

பென் போக்ஸ் எல்.பி.டபிள்யூ

(பி) அக்‌ஷர் 8

ஜோப்ரா ஆர்ச்சர் எல்.பி.டபிள்யூ

(பி) அஸ்வின் 0

ஜாக் லீச் (சி) ரஹானே

(பி) அஸ்வின் 9

ஸ்டூவர்ட் பிராட் (நாட்-அவுட்) 1

ஜேம்ஸ் ஆண்டர்சன் (சி) பண்ட்

(பி) வாஷிங்டன் 0

எக்ஸ்டிரா 0

மொத்தம் (30.4 ஓவர்களில்

ஆல்-அவுட்) 81

விக்கெட் வீழ்ச்சி: 1-0, 2-0, 3-19, 4-50, 5-56, 6-66, 7-68, 8-80, 9-80.

பந்து வீச்சு விவரம்

அக்‌ஷர் பட்டேல் 15-0-32-5

அஸ்வின் 15-3-48-4

வாஷிங்டன் சுந்தர் 0.4-0-1-1

இந்தியா

ரோகித் சர்மா (நாட்-அவுட்) 25

சுப்மான் கில் (நாட்-அவுட்) 15

எக்ஸ்டிரா 9

மொத்தம் (7.4 ஓவர்களில்

விக்கெட் இழப்பின்றி) 49

பந்து வீச்சு விவரம்

ஜாக் லீச் 4-1-15-0

ஜோ ரூட் 3.4-0-25-0