கிரிக்கெட்டில் இருந்து யூசுப் பதான், வினய்குமார் ஓய்வு


கிரிக்கெட்டில் இருந்து யூசுப் பதான், வினய்குமார் ஓய்வு
x
தினத்தந்தி 27 Feb 2021 12:13 AM GMT (Updated: 27 Feb 2021 12:13 AM GMT)

கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக யூசுப் பதான் மற்றும் வினய்குமார் அறிவித்தனர்.

புதுடெல்லி,

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டரான யூசுப் பதான் அதிரடி ஆட்டத்துக்கு பெயர் போனவர். 2007-ம் ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டில் ஒருநாள் போட்டி உலக கோப்பையை வென்ற இந்திய அணியில் அங்கம் வகித்தார். 2012-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. 

இந்த நிலையில் 38 வயதான யூசுப் பதான் சர்வதேச போட்டி உள்பட அனைத்து வகையிலான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ‘டுவிட்டர்’ மூலம் நேற்று அறிவித்தார். ‘இரண்டு உலக கோப்பையை வென்றதும், சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் உலக கோப்பை போட்டி வெற்றிக்கு பிறகு தெண்டுல்கரை தோளில் சுமந்தபடி மைதானத்தை வலம் வந்ததும் எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 

யூசுப் பதான் இந்திய அணிக்காக 57 ஒருநாள் போட்டியில் விளையாடி 2 சதம், 3 அரைசதம் உள்பட 810 ரன்னும், 22 இருபது ஓவர் போட்டியில் ஆடி 236 ரன்னும் எடுத்துள்ளார். ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ஐதராபாத் சன்ரைசர்ஸ் ஆகிய அணிகளுக்காக விளையாடி இருக்கும் அவர் மொத்தம் 174 ஆட்டங்களில் ஆடி ஒரு சதம், 13 அரைசதம் உள்பட 3,204 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 42 விக்கெட்டுகளும் வீழ்த்தி இருக்கிறார். அத்துடன் ஐ.பி.எல். போட்டியில் அதிவேகமாக சதம் அடித்த (37 பந்துகளில்) இந்தியர் என்ற சாதனையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான கர்நாடகாவை சேர்ந்த 37 வயது வினய்குமாரும் சர்வதேச மற்றும் முதல் தர போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக நேற்று அறிவித்தார். 2013-ம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓரங்கட்டப்பட்ட அவர் இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 31 ஒருநாள் மற்றும் 9 இருபது ஓவர் போட்டிகளில் களம் கண்டு இருக்கிறார். அத்துடன் 139 முதல்தர போட்டிகளில் விளையாடி 504 விக்கெட்டுகளை அறுவடை செய்துள்ளார்.

Next Story