‘ஆமதாபாத் ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததாக இல்லை’ - முன்னாள் வீரர்கள் விமர்சனம்


‘ஆமதாபாத் ஆடுகளம் டெஸ்ட் போட்டிக்கு உகந்ததாக இல்லை’ - முன்னாள் வீரர்கள் விமர்சனம்
x
தினத்தந்தி 27 Feb 2021 12:24 AM GMT (Updated: 27 Feb 2021 12:24 AM GMT)

ஆமதாபாத் ஆடுகளம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு உகந்ததாக இல்லை என்று முன்னாள் வீரர்கள் கூறியுள்ளனர்.

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் ஆமதாபாத் மோட்டேராவில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்டில் (பிங்க் பந்து டெஸ்ட்) இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த டெஸ்ட் வெறும் இரண்டு நாளில் முடிவுக்கு வந்தது கடும் விமர்சனங்களை கிளப்பியிருக்கிறது. ஆடுகளம் (பிட்ச்) முதல் பந்தில் இருந்தே சுழலுக்கு ஒத்துழைத்ததால் பேட்ஸ்மேன்கள் ஈடுகொடுக்க முடியாமல் தகிடுதத்தம் போட்டனர். இரு இன்னிங்சையும் சேர்த்தும் மொத்தம் 11 விக்கெட்டுகளை சாய்த்த இந்திய சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேல் ஆட்டநாயகன் விருது பெற்றார். 1935-ம் ஆண்டுக்கு பிறகு குறைந்த பந்துகள் (மொத்தம் 842 பந்து வீசப்பட்டது) வீசப்பட்டு முடிவு கண்ட டெஸ்ட் இது தான்.

இந்த நிலையில் ஆமதாபாத் ஆடுகளத்தை முன்னாள் வீரர்கள் பலரும் விமர்சித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு:-

வி.வி.எஸ்.லட்சுமண் (இந்தியா): இது டெஸ்ட் போட்டிக்கு உகந்த ஆடுகளம் அல்ல. இந்தியா கூட முதல் இன்னிங்சில் 145 ரன்னில் நிலைகுலைந்து போய் விட்டது.

ஹர்பஜன்சிங் (இந்தியா): டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற ஆடுகளமாக இது இல்லை. முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 200 ரன்கள் எடுத்திருந்தால், இந்தியாவுக்கும் சிக்கல் ஏற்பட்டிருக்கும். அதே சமயம் இந்த ஆடுகளம் இரு அணியினருக்குமே ஒரே மாதிரியாகத் தான் இருந்தது.

யுவராஜ்சிங் (இந்தியா): 2 நாளிலேயே போட்டி முடிந்து விட்டதால் இது டெஸ்ட் போட்டிக்கு சிறந்த ஆடுகளமா? என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. கும்பிளேவும், ஹர்பஜன்சிங்கும் இது போன்ற ஆடுகளங்களில் பந்து வீசியிருந்தால் ஆயிரம் விக்கெட், 800 விக்கெட்டுகளை எட்டியிருப்பார்களோ?. எது எப்படியோ நேர்த்தியாக பந்து வீசிய அக்‌ஷர் பட்டேல், அஸ்வினுக்கு வாழ்த்துகள்.

சுனில் கவாஸ்கர் (இந்தியா): இது போன்ற ஆடுகளங்கள் தான் பேட்ஸ்மேன்களின் திறமையை பரிசோதிக்கிறது. இங்கு ரன் எடுப்பவர்கள் தான் உண்மையான பேட்ஸ்மேன்கள். எப்படி செயல்படுவது என்பது அவர்களின் மனஉறுதியை பொறுத்தது. ரோகித் சர்மாவும், ஜாக் கிராவ்லியும் அரைசதம் அடித்ததை பார்க்க வேண்டும். பெரும்பாலான இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் களத்தில் தாக்குப்பிடிப்பதில் தான் கவனம் செலுத்தினார்களே தவிர எப்படி ரன் சேர்க்க வேண்டும் என்பது பற்றி சிந்திக்கவில்லை. வித்தியாசமான முறையில் பந்து வீசி அசத்திய அக்‌ஷர் பட்டேலுக்கே எல்லா சிறப்பும் சாரும்.

மைக்கேல் வாகன் (இங்கிலாந்து): இது போன்ற ஆடுகளங்களை நாங்கள் முன்கூட்டியே பார்த்தோம் என்றால், இங்கு எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு எங்களிடம் பதில் இருக்கும். இத்தகைய ஆடுகளங்களில் ஒவ்வொரு அணிக்கும் 3 இன்னிங்ஸ் வழங்க வேண்டும் என்று கூறியிருப்போம்.

கிரேமி ஸ்வான் (இங்கிலாந்து): பொதுவாக இந்திய ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதை அறிவோம். அப்படி இருக்கையில், இந்திய மண்ணில் ஒரே ஒரு சுழற்பந்து வீச்சாளரை வைத்து கொண்டு விளையாடுவது கடினமானது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story