ஆமதாபாத் ஆடுகளம் மீது ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்குமா? இந்திய கிரிக்கெட் வாரியம் பதில்


ஆமதாபாத் ஆடுகளம் மீது ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்குமா? இந்திய கிரிக்கெட் வாரியம் பதில்
x
தினத்தந்தி 28 Feb 2021 12:48 AM GMT (Updated: 28 Feb 2021 12:48 AM GMT)

ஆமதாபாத்தில் நடந்த பிங்க் பந்து டெஸ்ட் 2-வது நாளிலேயே முடிந்து விட்டதால் ஆடுகளத்தின் தரம் சரியில்லை என்று கூறி ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்குமா? என்பதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் பதில் அளித்துள்ளது.

புதுடெல்லி,

ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. பகல்-இரவாக பிங்க் பந்தில் நடத்தப்பட்ட இந்த டெஸ்ட் 2 நாளிலேயே முடிவுக்கு வந்தது. சுழலுக்கு சாதகமாக காணப்பட்ட இந்த ஆடுகளத்தில் இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் 19 விக்கெட்டுகளை அள்ளினர். உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான இங்கு 2 நாளில் டெஸ்ட் முடிந்ததால் ஆடுகளம் குறித்து சர்ச்சை கிளம்பியது. மோசமான ஆடுகளம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) முத்திரை குத்தினால் அவப்பெயர் ஏற்படும். சில நேரம் தடை கூட விதிக்கப்படும்.

ஆனால் அத்தகைய நடவடிக்கை ஏதும் இருக்காது என்பது தெரியவந்துள்ளது. இதே மைதானத்தில் தான் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகிற 4-ந்தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்டுக்கு அருகில் உள்ள வேறு ஆடுகளம் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது. அது மட்டுமின்றி ஆடுகளம் பேட்டிங்குக்கு சாதகமாக இருக்கும் வகையில் பராமரிக்கப்படுகிறது.

இது குறித்து பெயர் வெளியிட விரும்பாத இந்திய கிரிக்கெட் வாரிய மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-

கடைசி டெஸ்டுக்கான ஆடுகளம் கடின தன்மை கொண்டதுடன், பவுன்ஸ் ஆகும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கிறோம். அதாவது நிச்சயம் பேட்டிங்குக்கு ஏற்றதாக இருக்கும். இத்தகைய ஆடுகளத்தில் சிவப்பு நிற பந்தை பயன்படுத்தும் போது, அதிக ரன்கள் குவிக்கப்படும் டெஸ்ட் போட்டியாக இருக்கும் என்பதை எதிர்பார்க்கலாம்.

இரண்டு போட்டிகள் ஒரே இடத்தில் நடக்கும் போது, ஒரு போட்டியின் முடிவை ஒதுக்கி வைத்து விட முடியாது. எனவே கடைசி டெஸ்ட் நிறைவடைந்த பிறகே போட்டி நடுவர் ஜவஹல் ஸ்ரீநாத் ஆடுகளத்தன்மை குறித்து ஐ.சி.சி.க்கு அறிக்கை அனுப்புவார். அதன் அடிப்படையில் ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்கும். இப்போது வரைக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் ஆடுகளம் குறித்து அதிகாரபூர்வமாக புகார் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

ஒரே மைதானத்தில் ஒரு ஆடுகளம் நன்றாக இருந்து, மற்றொரு ஆடுகளம் மோசமாக இருந்தால் ஐ.சி.சி. நடவடிக்கை எடுக்க வாய்ப்பில்லை. தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் இந்தியாவுக்கு மகிழ்ச்சியாக இருக்கும். அதே சமயம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற இந்த டெஸ்டில் இந்தியா ‘டிரா’ செய்தாலே போதுமானது. அதனால் முடிவு காண்பதற்காக ஆடுகளத்தை சுழலுக்கு சாதகமாக மாற்றி தான் ஆக வேண்டும் என்ற நிலைமை இல்லை.

‘பிங்க்’ பந்து டெஸ்ட் போட்டி கூட நன்றாகத் தான் இருந்தது. பெரும்பாலான இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் சுழல் இன்றி நேராக வந்த பந்துகளில் தான் ஆட்டமிழந்தனர். என்றாலும் இது போன்ற ஆடுகளங்களால் சிக்கல் உருவாகும் என்பதை இந்திய கிரிக்கெட் வாரியம் அறியும்.

இவ்வாறு அந்த நிர்வாகி கூறினார்.

Next Story