கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான - இந்திய அணியில் இருந்து பும்ரா விடுவிப்பு + "||" + For the 4th Test against England - Bumra released from Indian team

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான - இந்திய அணியில் இருந்து பும்ரா விடுவிப்பு

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான - இந்திய அணியில் இருந்து பும்ரா விடுவிப்பு
இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா விடுவிக்கப்பட்டார்.
ஆமதாபாத்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சென்னையில் நடந்த முதலாவது டெஸ்டில் இங்கிலாந்து அணி 227 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்டில் இந்திய அணி 317 ரன்கள் வித்தியாசத்திலும், ஆமதாபாத்தில் நடந்த 3-வது டெஸ்டில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. இதனால் இந்திய அணி தொடரில் 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத் மோட்டேராவில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் வருகிற 4-ந் தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்டில் இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளர் 27 வயதான ஜஸ்பிரித் பும்ரா ஆடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரிய செயலாளர் ஜெய் ஷா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘4-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னை விடுவிடுக்கும்படி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதனை ஏற்று அவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்’ என்று தெரிவித்துள்ளார். மாற்று வீரர் யாரும் அணியில் சேர்க்கப்படவில்லை. கடைசி டெஸ்டில் அவருக்கு பதிலாக முகமது சிராஜ் களம் இறங்க வாய்ப்புள்ளது. ஏற்கனவே, டெஸ்ட் தொடர் முடிந்ததும் நடக்க உள்ள இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடருக்கான இந்திய அணியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்பதற்காக கொரோனா தடுப்பு பாதுகாப்பு உயிர் வளையத்துக்குள் ஆகஸ்டு மாதம் இணைந்த பும்ரா, அதனை தொடர்ந்து நடந்த ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெற்று டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டியில் ஆடினார். இதையடுத்து தற்போது நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்டில் ஆடிய அவர் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். 2-வது டெஸ்டில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆமதாபாத்தில் நடந்த பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் 6 ஓவர்கள் மட்டுமே பந்து வீசிய பும்ரா விக்கெட் எதுவும் கைப்பற்றவில்லை.

தொடர்ச்சியாக ஓய்வின்றி விளையாடி வந்த பும்ரா பணிச்சுமையை கருத்தில் கொண்டு கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகி இருக்கலாம் என்று தெரிகிறது.