விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: ஷிகர் தவான் சதத்தால் டெல்லி அணி வெற்றி


விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: ஷிகர் தவான் சதத்தால் டெல்லி அணி வெற்றி
x
தினத்தந்தி 28 Feb 2021 1:06 AM GMT (Updated: 28 Feb 2021 1:06 AM GMT)

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் மராட்டியத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஷிகர் தவான் சதத்தால் டெல்லி அணி வெற்றி பெற்றது.

ஜெய்ப்பூர்,

38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் ஜெய்ப்பூர், கொல்கத்தா, சென்னை உள்பட 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ‘டி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் டெல்லி அணி, மராட்டியத்தை எதிர்கொண்டது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த மராட்டிய அணி 7 விக்கெட் இழப்புக்கு 328 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அஜிம் காஜி 91 ரன்னும், கேதர் ஜாதவ் 86 ரன்னும் சேர்த்தனர்.

தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 49.2 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 330 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 3 ஆட்டங்களில் 0, 6, 0 ரன் வீதம் எடுத்து ஏமாற்றம் அளித்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இந்த ஆட்டத்தில் 118 பந்துகளில் 21 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 153 ரன்கள் திரட்டி அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். முதல் ஆட்டத்தில் (மும்பைக்கு எதிராக) தோல்வி கண்ட டெல்லி அணி அடுத்து தொடர்ச்சியாக ருசித்த 3-வது (ஹாட்ரிக்) வெற்றி இதுவாகும். மராட்டிய அணிக்கு இது 2-வது தோல்வியாக அமைந்தது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு ஆட்டத்தில் மும்பை-ராஜஸ்தான் அணிகள் சந்தித்தன. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 7 விக்கெட் இழப்புக்கு 317 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 116 ரன்கள் (103 பந்து, 11 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசினார். அவர் தொடர்ச்சியாக அடித்த 2-வது சதம் இதுவாகும். முந்தைய ஆட்டத்தில் (மராட்டியத்துக்கு எதிராக) ஸ்ரேயாஸ் அய்யர் 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். அடுத்து களம் இறங்கிய ராஜஸ்தான் அணி 42.2 ஓவர்களில் 250 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இதனால் மும்பை அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மும்பை தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டும், தவால் குல்கர்னி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். மும்பை அணி தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பெற்று தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

இந்த பிரிவில் நடந்த இன்னொரு ஆட்டத்தில் புதுச்சேரி அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் இமாச்சலபிரதேசத்தை வீழ்த்தி முதல் வெற்றியை தனதாக்கியது. ஷெல்டன் ஜாக்சன் (104 ரன்கள்) சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

Next Story