விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் மும்பை, கேரளா அணிகள் கால்இறுதிக்கு தகுதி


விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் மும்பை, கேரளா அணிகள் கால்இறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 2 March 2021 1:04 AM GMT (Updated: 2 March 2021 1:04 AM GMT)

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டியில் மும்பை, கேரளா அணிகள் கால்இறுதிக்கு முன்னேறின.

ஜெய்ப்பூர், 

38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியாவின் 6 நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ‘டி’ பிரிவு லீக் ஆட்டம் ஒன்றில் மும்பை அணி, இமாச்சலபிரதேசத்தை சந்தித்தது. ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த மும்பை அணி 4 ஓவர்களில் 8 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஜெய்ஸ்வால் 2 ரன்னிலும், பிரித்வி ஷா 2 ரன்னிலும், கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 2 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தனர்.

அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் (91 ரன்கள்), விக்கெட் கீப்பர் ஆதித்ய தாரே (83 ரன்கள்) ஷர்துல் தாகூர் (92 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி சரிவில் இருந்து மீண்டது. 50 ஓவர்களில் மும்பை அணி 9 விக்கெட் இழப்புக்கு 321 ரன்கள் குவித்தது.

மும்பை அணி அபார வெற்றி

பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இமாச்சலபிரதேச அணி, மும்பை வீரர்களின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 24.1 ஓவர்களில் 121 ரன்னில் சுருண்டது. இதனால் மும்பை அணி 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மயங்க் தாகர் ஆட்டம் இழக்காமல் 38 ரன்கள் சேர்த்தார். மும்பை தரப்பில் பிரசாந்த் சோலங்கி 4 விக்கெட்டும், ஷாம்ஸ் முலானி 3 விக்கெட்டும், தவால் குல்கர்னி 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். தொடர்ச்சியாக 5-வது வெற்றியை ருசித்த மும்பை அணி 20 புள்ளிகளுடன் தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து கால்இறுதிக்கு முன்னேறியது.

இதே பிரிவில் நடந்த மற்றொரு லீக் ஆட்டத்தில் டெல்லி-ராஜஸ்தான் அணிகள் சந்தித்தன. ‘டாஸ்’ ஜெயித்த டெல்லி அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி 48.2 ஓவர்களில் 294 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.

சவுராஷ்டிரா அணி தகுதி

இதனை அடுத்து ஆடிய டெல்லி அணி 44.4 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 296 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. தொடக்க ஆட்டக்காரர்கள் துருவ் ஷோரேய் 31 ரன்னும், ஷிகர் தவான் 44 ரன்னும் எடுத்து ஆட்டம் இழந்தனர். ஹிம்மத் சிங் 117 ரன்னுடனும் (96 பந்து, 13 பவுண்டரி, ஒரு சிக்சர்), நிதிஷ் ராணா 88 ரன்னுடனும் (75 பந்து, 12 பவுண்டரி, ஒரு சிக்சர்) ஆட்டம் இழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றனர். 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்ற டெல்லி அணி 2-வது இடத்தை பெற்றதுடன், ரன் வித்தியாசத்தின் அடிப்படையில் கால்இறுதி வாய்ப்பை தக்க வைத்தது.

கொல்கத்தாவில் நடந்த ‘இ’ பிரிவு ஆட்டம் ஒன்றில் சவுராஷ்டிரா 68 ரன்கள் வித்தியாசத்தில் சர்வீசஸ் அணியிடம் தோல்வி அடைந்தது. முதலில் ஆடிய சர்வீசஸ் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 301 ரன்கள் எடுத்தது. ராகுல் சிங் 158 ரன்கள் குவித்தார். பின்னர் 302 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சவுராஷ்டிரா அணி 43.1 ஓவர்களில் 233 ரன்னில் முடங்கி தோல்வி கண்டது. சர்வீசஸ் அணி தரப்பில் ராகுல்சிங் 4 விக்கெட்டும், வருண் சவுத்ரி 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள். 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று தனது பிரிவில் முதலிடம் பிடித்த சவுராஷ்டிரா அணி கால்இறுதிக்கு தகுதி பெற்றது.

கால்இறுதிக்குள் நுழைந்த அணிகள்

சென்னையில் நடந்த ‘பிளேட்’ பிரிவு கடைசி லீக் ஆட்டத்தில் உத்தரகாண்ட் அணி 145 ரன்கள் வித்தியாசத்தில் சிக்கிமை தோற்கடித்தது. இந்த பிரிவில் லீக் ஆட்டம் முடிவில் உத்தரகாண்ட், அசாம் அணிகள் தலா 5 வெற்றியுடன் 20 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன. ரன்ரேட் அடிப்படையில் முதலிடத்தை பிடித்த உத்தரகாண்ட் அணி கால்இறுதி வாய்ப்பில் நீடிக்கிறது.

நேற்றுடன் முடிவடைந்த லீக் ஆட்டங்கள் முடிவில் எலைட் பிரிவுகளில் முதலிடம் பிடித்த குஜராத் (ஏ பிரிவு), ஆந்திரா (பி), கர்நாடகா (சி), மும்பை (டி), சவுராஷ்டிரா (இ) அணிகளும், எலைட் பிரிவில் 2-வது இடத்தை பிடித்த சிறந்த அணிகளான உத்தரபிரதேசம், கேரளா (‘சி’ பிரிவில் இடம் பெற்ற இந்த இரு அணிகளும் தலா 16 புள்ளிகள்) ரன் ரேட் முன்னிலை அடிப்படையிலும் கால்இறுதிக்கு நேரடியாக முன்னேறின.

உத்தரகாண்ட்-டெல்லி மோதல்

கால்இறுதிக்கு தகுதி பெறும் கடைசி அணி எது? என்பதை நிர்ணயிக்கும் ‘பிளே-ஆப்’ சுற்று ஆட்டம் வருகிற 7-ந் தேதி நடக்கிறது. இதில் ‘பிளேட்’ பிரிவில் முதலிடம் பிடித்த உத்தரகாண்ட் அணி, ‘டி’ பிரிவில் 2-வது இடம் பிடித்த டெல்லி அணியை (ஒட்டுமொத்த எலைட் பிரிவில் 8-வது இடம்) எதிர்கொள்கிறது. இதில் வெற்றி பெறும் அணி கால்இறுதிக்குள் நுழையும். கால்இறுதி ஆட்டங்கள் வருகிற 8-ந் தேதி ஆரம்பமாகிறது. 

Next Story