கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தவறவிடும் மும்பை


கொரோனா தொற்று அதிகரிப்பு எதிரொலி: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை தவறவிடும் மும்பை
x
தினத்தந்தி 3 March 2021 12:44 AM GMT (Updated: 3 March 2021 12:44 AM GMT)

இந்தியாவில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராததால் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றை ஒரே இடத்தில் அதாவது மராட்டிய தலைநகர் மும்பையில் உள்ள 4 ஸ்டேடியங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது.

மும்பை, 

இந்தியாவில் கொரோனா பரவல் முழுமையாக கட்டுக்குள் வராததால் 14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் லீக் சுற்றை ஒரே இடத்தில் அதாவது மராட்டிய தலைநகர் மும்பையில் உள்ள 4 ஸ்டேடியங்களில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டது. ஆனால் மராட்டியத்தில் தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மராட்டியத்தில் நடக்கும் போட்டிகளில் ரசிகர்களை அனுமதிக்க வேண்டாம் என்று அந்த மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து மும்பையில் மட்டும் ஐ.பி.எல். என்ற யோசனையை இந்திய கிரிக்கெட் வாரியம் முற்றிலும் கைவிட்டு விட்டது. அது மட்டுமின்றி ஐ.பி.எல். வரலாற்றில் முதல்முறையாக மும்பையில் எந்த ஐ.பி.எல். ஆட்டங்களையும் நடத்த முடியாத நிலைமை உருவாகியுள்ளது. அதனால் இந்த சீசனில் மும்பையில் ஐ.பி.எல். ஆட்டங்கள் இடம்பெறாது என்று கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சென்னை, பெங்களூரு, ஐதராபாத், கொல்கத்தா, ஆமதாபாத், டெல்லி ஆகிய நகரங்களில் ஐ.பி.எல். போட்டியை நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசித்து வருகிறது. ஏப்ரல் 8-ந்தேதி முதல் 12-ந்தேதிக்குள் ஐ.பி.எல். போட்டி தொடங்கி மே இறுதி வாரத்திலோ அல்லது ஜூன் முதல் வாரத்திலோ நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் அட்டவணையை இ்ந்திய கிரிக்கெட் வாரியமும், ஐ.பி.எல். ஆட்சி மன்ற குழுவும் விரைவில் இறுதி செய்ய இருக்கிறது.

இதற்கிடையே, ஐ.பி.எல். போட்டியை நடத்துவதற்கு தேர்வு செய்யப்பட்ட இடங்களின் உத்தேச பட்டியலில் மொகாலி விடுபட்டு இருப்பதற்கு பஞ்சாப் மாநில முதல்-மந்திரி அமரிந்தர் சிங் அதிருப்தி தெரிவித்து உள்ளார். ‘மொகாலி நகரம் விடுபட்டு இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. ஐ.பி.எல். போட்டியை மொகாலியில் நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் பரிசீலிக்க வேண்டும். மொகாலியில் ஐ.பி.எல். போட்டியை நடத்த முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. கொரோனாவுக்கு எதிரான அனைத்துவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் எங்களது அரசு செய்து கொடுக்கும்’ என்று அமரிந்தர்சிங் கூறியுள்ளார்.

Next Story