நாளை தொடங்கும் கடைசி டெஸ்டுக்கான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கே சாதகமாக இருக்கும் இந்திய வீரர் ரஹானே பேட்டி


நாளை தொடங்கும் கடைசி டெஸ்டுக்கான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கே சாதகமாக இருக்கும் இந்திய வீரர் ரஹானே பேட்டி
x
தினத்தந்தி 3 March 2021 2:30 AM GMT (Updated: 3 March 2021 2:30 AM GMT)

கடைசி டெஸ்டுக்கான ஆடுகளத்திலும் சுழற்பந்து வீச்சு தான் எடுபடும் என்று இந்திய வீரர் ரஹானே கூறியுள்ளார்.

ஆமதாபாத், 

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையே 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடந்து வருகிறது. இதில் முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், அடுத்த இரு டெஸ்டுகளில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இவ்விரு அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நாளை (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

3-வது டெஸ்ட் போட்டியும் இதே ஆமதாபாத்தில் தான் நடந்தது. பகல்-இரவாக பிங்க் பந்தில் நடந்த அந்த டெஸ்ட் வெறும் 2 நாட்களில் முடிந்து போனது. சுழற்பந்து வீச்சின் சொர்க்கமாக திகழ்ந்த அந்த போட்டியில் இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 2-வது நாளிலேயே பிங்க் பந்து டெஸ்ட் முடிந்ததால் ஆடுகளம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. இது தரமற்ற ஆடுகளம் என்று இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் சாடினர்.

ரஹானே பேட்டி

இந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கே சாதகமாக இருக்கும் என்று இந்திய அணியின் துணை கேப்டன் அஜிங்யா ரஹானே கூறியுள்ளார். காணொலி மூலம் அவர் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

2-வது டெஸ்ட் போட்டி நடந்த சென்னை சேப்பாக்கத்தில் உள்ள ஆடுகளம் எப்படி இருந்ததோ அதே போன்று தான் இந்த ஆடுகளமும் இருக்கும் என்று நினைக்கிறேன். அதாவது சுழற்பந்து வீச்சுக்குரிய ஆடுகளம். இத்தகைய ஆடுகளத்தில் பிங்க் பந்தில் விளையாடிய போது வித்தியாசமாக இருந்தது. சிவப்பு நிற பந்தை காட்டிலும் பிங்க் பந்து மிக வேகமாக வந்தது. அதற்கு ஏற்ப எங்களை மாற்றிக்கொண்டு ஆட வேண்டி இருந்தது. எது எப்படியோ கடைசி டெஸ்டுக்கான ஆடுகளம், 2-வது மற்றும் 3-வது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளம் போன்றே இருக்கும்.

வெளிநாட்டில் ஆடும் போது...

ஆடுகளம் குறித்து விமர்சனவாதிகள் தாங்கள் நினைத்த எதையும் சொல்லலாம். இதுவே நாங்கள் வெளிநாடு சென்று விளையாடும் போது, எப்படி இந்த அளவுக்கு வேகப்பந்து வீச்சுக்கு உகந்த ஆடுகளத்தை அமைக்கலாம் என்று யாரும் பேசுவதில்லை. அப்போது பேட்டிங்கில் இந்திய வீரர்களின் தொழில்நுட்பம் குறித்து பேசுவார்கள்.

எங்களது வெளிநாட்டு சுற்றுப்பயணங்களில் போட்டியின் முதல் நாளில் ஆடுகளம் ஈரப்பதமாக இருக்கும். அதில் புற்கள் இருந்து பந்து தாறுமாறாக எகிறும் போது, ஆடுகளம் அபாயகரமாக தோன்றும். ஆனால் அது பற்றி நாங்கள் புகார் சொல்வதில்லை. ஆடுகளம் சரியில்லை என்று பேசுவதும் கிடையாது. எனவே இந்த விவகாரத்தில் முன்னாள் வீரர்களின் கருத்துகளை தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை.

பந்து நன்கு சுழன்று திரும்பும் ஆடுகளங்களில், சரியான லைனில் கணித்து விளையாட வேண்டும். அதுவே பந்து அதிகமாக சுழன்றால் அது பற்றி சிந்தித்துக் கொண்டிருக்காமல் வழக்கம் போல் ஆட வேண்டும். எந்த ஆடுகளமாக இருந்தாலும் உங்களது தடுப்பாட்டத்தில் நம்பிக்கை வைத்து செயல்பட வேண்டும்.

இங்கிலாந்து அணியை நாங்கள் மதிக்கிறோம். அவர்கள் மிகச்சிறந்த அணி. கடந்த இரு டெஸ்டில் நாங்கள் நன்றாக விளையாடி வெற்றி பெற்றோம். முதலாவது டெஸ்டில் உண்மையிலேயே இங்கிலாந்து அணியினர் அபாரமாக ஆடினர். எந்த வகையிலும் அவர்களை நாங்கள் எளிதாக எடுத்துக் கொள்ளமாட்டோம்.

டெஸ்ட் சாம்பியன்ஷிப்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வெல்வது உலக கோப்பைக்கு நிகரானது என்று இஷாந்த் ஷர்மா கூறியது நிச்சயம் சரி தான். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மீது எங்களது கவனம் உள்ளது. அதே சமயம் இப்போது முழு கவனமும் 4-வது டெஸ்ட் மீதே இருக்கிறது.

இவ்வாறு ரஹானே கூறினார்.

கடைசி டெஸ்டில் இந்திய அணி டிரா செய்தாலே ஜூன் மாதம் லண்டனில் நடக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story