இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசி சாதனை


பொல்லார்ட்; தனஞ்ஜெயா
x
பொல்லார்ட்; தனஞ்ஜெயா
தினத்தந்தி 4 March 2021 10:52 PM GMT (Updated: 4 March 2021 10:52 PM GMT)

இலங்கைக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட் ‘ஹாட்ரிக்’ விக்கெட் வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர் தனஞ்ஜெயாவின் ஒரே ஓவரில் 6 சிக்சர் விளாசி சாதனை படைத்தார்.

20 ஓவர் கிரிக்கெட்

இலங்கை- வெஸ்ட்இண்டீஸ் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆன்டிகுவாவில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்தது.

‘டாஸ்’ ஜெயித்த வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் பொல்லார்ட் பீல்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி, வெஸ்ட்இண்டீஸ் வீரர்களின் கட்டுக்கோப்பான பந்து வீச்சை அடித்து ஆட முடியாமல் தடுமாறியதுடன், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளையும் இழந்தது. 20 ஓவர்களில் அந்த அணி 9 விக்கெட்டுக்கு 131 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பதும் நிசங்கா 39 ரன்னும், டிக்வெல்லா 33 ரன்னும் எடுத்தனர்.

தனஞ்ஜெயா ‘ஹாட்ரிக்’

பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட்இண்டீஸ் அணி ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் இவின் லீவிஸ் முதல் ஓவரில் தொடர்ச்சியாக 3 சிக்சர் விரட்டியடித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் அதிரடி அமர்களத்துக்கு சுழற்பந்து வீச்சாளர் அகிலா தனஞ்ஜெயா 4-வது ஓவரில் ‘செக்’ வைத்தார். அவர் தொடர்ச்சியாக அடுத்தடுத்த பந்துகளில் இவின் லீவிஸ் (28 ரன்), கிறிஸ் கெய்ல் (0), நிகோலஸ் பூரன் (0) ஆகியோரின் விக்கெட்டுகளை சாய்த்து ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்தார். இதன் மூலம் சர்வதேச 20 ஓவர் போட்டியில் ‘ஹாட்ரிக்’ விக்கெட்டுகள் வீழ்த்திய 13-வது பவுலர் என்ற பெருமையை தனஞ்ஜெயா பெற்றார்.

பொல்லார்ட் சாதனை

தனஞ்ஜெயாவுக்கு இந்த ஆட்டம் மகிழ்ச்சியும், வருத்தமும் ஒருசேர கலந்ததாக அமைந்தது. அவரது அடுத்த ஓவரில் (6-வது ஓவரில்) வெஸ்ட்இண்டீஸ் கேப்டன் கீரன் பொல்லார்ட் அதிரடியாக ஆடி 6 பந்துகளையும் நேர் திசை மற்றும் லெக் சைடில் சிக்சருக்கு தூக்கியடித்து வியக்க வைத்ததுடன், ஆட்டத்தின் போக்கையும் மாற்றினார்.

ஒரே ஓவரில் 6 பந்துகளையும் சர்வசாதாரணமாக சிக்சராக மாற்றிய பொல்லார்ட் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஒரு ஓவரில் 6 சிக்சர் நொறுக்கிய 3-வது வீரர் என்ற சிறப்பை சொந்தமாக்கினார். சிறிய மைதானமும் சிக்சர்மழைக்கு உதவிகரமாக இருந்தது. ஏற்கனவே 2007-ம் ஆண்டு ஒருநாள் உலக கோப்பை போட்டியில் நெதர்லாந்து சுழற்பந்து வீச்சாளர் டான் வான் புன்ச் ஓவரில் தென்ஆப்பிரிக்க வீரர் கிப்சும், அதே ஆண்டில் 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஓவரில் இந்திய வீரர் யுவராஜ்சிங்கும் 6 சிக்சர்கள் அடித்து சாதனை படைத்துள்ளனர். 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்த அரிய சாதனை வரிசையில் பொல்லார்ட் இணைந்துள்ளார்.

வெஸ்ட்இண்டீஸ் வெற்றி

சரவெடியாய் வெடித்த பொல்லார்ட் 11 பந்துகளில் 6 சிக்சருடன் 38 ரன்கள் எடுத்த நிலையில் டி சில்வா பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 13.1 ஓவர்களில் வெஸ்ட்இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் சேர்த்து 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஜாசன் ஹோல்டர் 29 ரன்னுடனும், வெய்ன் பிராவோ 4 ரன்னுடனும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். இலங்கை தரப்பில் தனஞ்ஜெயா, டி சில்வா தலா 3 விக்கெட் வீழ்த்தினார்கள். பொல்லார்ட் ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட்இண்டீஸ் அணி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஆட்டம் இதே மைதானத்தில் இன்று (இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3.30 மணிக்கு) நடக்கிறது.

யுவராஜ் வாழ்த்து

சாதனை படைத்த பொல்லார்ட்டுக்கு ஏற்கனவே இந்த சாதனையை படைத்து இருக்கும் கிப்ஸ், யுவராஜ் சிங் ஆகியோர் ‘டுவிட்டர்’ மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்த சாதனையாளர் பட்டியலில் பொல்லார்ட் இணைவதை வரவேற்கிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.


Next Story