கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து 205 ரன்னில் ‘ஆல்-அவுட்’ + "||" + Last Test against India: England all out for 205

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து 205 ரன்னில் ‘ஆல்-அவுட்’

இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட்: இங்கிலாந்து 205 ரன்னில் ‘ஆல்-அவுட்’
ஆமதாபாத்தில் நேற்று தொடங்கிய இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி 205 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது.

கடைசி டெஸ்ட்

இந்தியா- இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று தொடங்கியது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக ஓய்வு அளிக்கப்பட்ட ஜஸ்பிரித் பும்ராவுக்கு பதிலாக முகமது சிராஜ் இடம் பிடித்தார். இங்கிலாந்து அணியில் ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பிராட் நீக்கப்பட்டு டாம் பெஸ், டேன் லாரன்ஸ் சேர்க்கப்பட்டனர். வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் மீண்டும் வலது முழங்கையில் வலியால் அவதிப்படுவதால் அவரை வெளியே உட்கார வைக்க வேண்டியதாகி விட்டது.

தொடரை சமன் செய்ய இந்த டெஸ்டில் கட்டாயம் வென்றாக வேண்டிய நெருக்கடியில் இங்கிலாந்தும், தொடரை கைப்பற்ற வெற்றி அல்லது டிரா செய்ய வேண்டிய நிலைமையில் இந்தியாவும் உள்ளன. இதற்கு மத்தியில் ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். தாங்களும் முதலில் பேட் செய்யவே விரும்பியதாக இந்திய கேப்டன் விராட் கோலி கூறினார்.

ஜோ ரூட் 5 ரன்

ஜாக் கிராவ்லியும், டாம் சிப்லியும் இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். ஆடுகளத்தில் கொஞ்சம் புற்கள் இருந்தன. இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்களோடு தனது தாக்குதலை தொடங்கியது. 6-வது ஓவரில் இடக்கை சுழற்பந்து வீச்சாளர் அக்‌ஷர் பட்டேலை கேப்டன் கோலி அழைத்தார். அதற்கு உடனடி பலன் கிடைத்தது. அவரது பந்து வீச்சில் சிப்லிக்கு (2 ரன்) பந்து பேட்டில் உரசியபடி ஸ்டம்பை பதம் பார்த்தது. அடுத்து ஜானி பேர்ஸ்டோ வந்தார். மற்றொரு தொடக்க வீரர் கிராவ்லி (9 ரன்) அக்‌ஷர் வீசிய பந்தை சில அடி இறங்கி வந்து விரட்ட முயற்சித்தார். சரியாக ‘கிளிக்’ ஆகாத அந்த பந்தை முகமது சிராஜ் எளிதில் கேட்ச் செய்தார்.

4-வது வரிசையில் நுழைந்த அபாயகரமான பேட்ஸ்மேனான கேப்டன் ஜோ ரூட்டை (5 ரன்) முகமது சிராஜ் காலி செய்தார். இன்ஸ்விங்காக சீறிய பந்தில் ரூட் எல்.பி.டபிள்யூ. ஆகிப் போனார். சிறிது நேரத்தில் பேர்ஸ்டோவையும் (28 ரன்) சிராஜ் வெளியேற்றினார். ஆடுகளத்தில் பந்து ஓரளவு சுழன்று திரும்பியது. ஆனால் முந்தைய டெஸ்ட் போன்று சகட்டுமேனிக்கு சுழற்சி இல்லை. பேட்டிங்குக்கும் உகந்த வகையிலேயே காணப்பட்டது.

ஸ்டோக்ஸ் அரைசதம்

இருப்பினும் இங்கிலாந்து அணி 78 ரன்னுக்குள் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து திணறியது. இதையடுத்து 5-வது விக்கெட்டுக்கு துணை கேப்டன் பென் ஸ்டோக்சும், ஆலி போப்பும் கைகோர்த்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். முகமது சிராஜின் ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை சாத்திய பென் ஸ்டோக்ஸ், அஸ்வின், வாஷிங்டன் சுந்தரின் சுழலில் சிக்சரும் பறக்க விட்டதுடன், தனது 24-வது அரைசதத்தையும் நிறைவு செய்தார்.

ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாக்குப்பிடித்த இந்த கூட்டணிக்கு வாஷிங்டன் சுந்தர் முற்றுப்புள்ளி வைத்தார். ஸ்கோர் 121 ரன்களை எட்டிய போது பென் ஸ்டோக்ஸ் (55 ரன், 121 பந்து, 6 பவுண்டரி, 2 சிக்சர்), வாஷிங்டன் வீசிய பந்தை தடுத்து ஆட முற்பட்ட போது எல்.பி.டபிள்யூ. ஆனார். அவரைத் தொடர்ந்து களம் புகுந்த டேன் லாரன்சும் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு பொறுமையுடன் ஆடினார். ஆனால் மறுமுனையில் ‘விக்கெட் அணிவகுப்பு’ தொடங்கியதால் வீழ்ச்சியை தடுக்க முடியவில்லை. ஆலி போப் (29 ரன், 87 பந்து, 2 பவுண்டரி) அஸ்வின் பந்து வீச்சில் அருகில் நின்ற சுப்மான் கில்லிடம் பிடிபட்டார். தொடர்ந்து விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. லாரன்ஸ் தனது பங்குக்கு 46 ரன்கள் (74 பந்து, 8 பவுண்டரி) சேர்த்த நிலையில் அக்‌ஷரின் பந்து வீச்சில் ரிஷாப் பண்டுவால் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

இங்கிலாந்து 205 ரன்

முடிவில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 75.5 ஓவர்களில் 205 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இந்திய தரப்பில் அக்‌ஷர் பட்டேல் 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் சாய்த்தனர்.

பின்னர் இந்திய அணி முதல் இன்னிங்சை ஆடியது. முதல் ஓவரிலேயே ஜேம்ஸ் ஆண்டர்சனின் வேகத்தில் சுப்மான் கில் (0) எல்.பி.டபிள்யூ. ஆனார். அதன் பிறகு ரோகித் சர்மா- புஜாரா ஜோடி தடுப்பாட்டத்தில் ஈடுபட்டது. மிரட்டலாக பந்து வீசிய ஆண்டர்சன் 5 ஓவர்களில் ஒரு ரன் கூட விட்டுக்கொடுக்கவில்லை.

முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 12 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்துள்ளது. ரோகித் சர்மா (8 ரன், 34 பந்து), புஜாரா (15 ரன், 36 பந்து) களத்தில் உள்ளனர். இன்று 2-வது நாள் ஆட்டம் நடைபெறும்.

ஸ்கோர் போர்டு

முதல் இன்னிங்ஸ்

இங்கிலாந்து

ஜாக் கிராவ்லி (சி) சிராஜ் (பி) அக்‌ஷர் 9

சிப்லி (பி) அக்‌ஷர் 2

பேர்ஸ்டோ எல்.பி.டபிள்யூ (பி) சிராஜ் 28

ஜோ ரூட் எல்.பி.டபிள்யூ (பி) சிராஜ் 5

ஸ்டோக்ஸ் எல்.பி.டபிள்யூ (பி) வாஷிங்டன் 55

ஆலி போப் (சி) சுப்மான் கில் (பி) அஸ்வின் 29

டேன் லாரன்ஸ் (ஸ்டம்பிங்) பண்ட் (பி) அக்‌ஷர் 46

பென் போக்ஸ் (சி) ரஹானே (பி) அஸ்வின் 1

டாம் பெஸ் எல்.பி.டபிள்யூ (பி) அக்‌ஷர் 3

ஜாக் லீச் எல்.பி.டபிள்யூ (பி) அஸ்வின் 7

ஆண்டர்சன் (நாட்-அவுட்) 10

எக்ஸ்டிரா 10

மொத்தம் (75.5 ஓவர்களில் ஆல்-அவுட்) 205

விக்கெட் வீழ்ச்சி: 1-10, 2-15, 3-30, 4-78, 5-121, 6-166, 7-170, 8-188, 9-189.

பந்து வீச்சு விவரம்

இஷாந்த் ஷர்மா 9-2-23-0

முகமது சிராஜ் 14-2-45-2

அக்‌ஷர் பட்டேல் 26-7-68-4

அஸ்வின் 19.5-4-47-3

வாஷிங்டன் சுந்தர் 7-1-14-1

இந்தியா

சுப்மான் கில் எல்.பி.டபிள்யூ (பி) ஆண்டர்சன் 0

ரோகித் சர்மா (நாட்-அவுட்) 8

புஜாரா (நாட்-அவுட்) 15

எக்ஸ்டிரா 1

மொத்தம் (12 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு) 24

விக்கெட் வீழ்ச்சி: 1-0.

பந்துவீச்சு விவரம்

ஆண்டர்சன் 5-5-0-1

பென் ஸ்டோக்ஸ் 2-1-4-0

ஜாக் லீச் 4-0-16-0

டாம் பெஸ் 1-0-4-0


முகமது சிராஜை திட்டிய ஸ்டோக்ஸ்

இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ், தனக்கு பவுன்சர் பந்து வீசிய இந்திய பவுலர் முகமது சிராஜை சீண்டினார். அவரை நோக்கி கோபத்தில் வசைபாடினார். இதையடுத்து சிராஜ், இந்திய கேப்டன் விராட் கோலியிடம் கூற அவர் ஸ்டோக்சிடம் தட்டிக்கேட்டு வாக்குவாதம் செய்தார். நடுவர்கள் தலையிட்டு அவர்களை சமாதானப்படுத்தினர். இது பற்றி முகமது சிராஜ் கூறுகையில், ‘பென் ஸ்டோக்ஸ் என்னை திட்டினார். இது பற்றி நான் கோலியிடம் சொன்னேன். இந்த பிரச்சினையை கோலி சரியாக கையாண்டார்’ என்றார்.


தொடர்புடைய செய்திகள்

1. இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வை தள்ளிவைக்க திட்டம்?
தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத்தொடங்கியதால் ஊரடங்கு தளர்வை தள்ளிவைக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
2. இங்கிலாந்தில் மேலும் 7,738- பேருக்கு ஒரே நாளில் கொரோனா பாதிப்பு
இங்கிலாந்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிப்பதில் தாமதம் ஏற்படலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
3. இங்கிலாந்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பு
இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 8,125- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
4. நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இங்கிலாந்து அணி 258 ரன்கள் சேர்ப்பு
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 258 ரன்கள் சேர்த்துள்ளது.
5. அமெரிக்க ஜனாதிபதியான பின் முதல் வெளிநாட்டு பயணம்; ஜோ பைடன், ரஷியாவுக்கு கடும் எச்சரிக்கை
அமெரிக்க ஜனாதிபதியான பின்னர் முதன்முதலாக ஜோ பைடன் இங்கிலாந்து சென்றார். ரஷியா தீங்கு விளைவிக்கும் செயலில் ஈடுபட்டால் வலுவான பதிலடி கொடுப்போம் என்று அவர் கடுமையாக எச்சரித்தார்.