சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு டி-20 தொடர்; 35 பந்துகளில் 80 ரன்கள் -மிரட்டிய சேவாக்


கோப்பு படம்
x
கோப்பு படம்
தினத்தந்தி 6 March 2021 5:14 AM GMT (Updated: 6 March 2021 5:19 AM GMT)

சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக ஓய்வுபெற்ற வீரர்களை உள்ளடக்கிய லெஜண்ட் அணிகளுக்கு இடையில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.

சாலைப் பாதுகாப்பு  விழிப்புணர்வுக்காக  ஓய்வுபெற்ற வீரர்களை உள்ளடக்கிய லெஜண்ட் அணிகளுக்கு இடையில் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, வங்கதேசம், இலங்கை, தென்னாப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் பங்கேற்றுள்ளது.

நேற்று நடைபெற்ற போட்டியில் இந்தியா, வங்கதேசம் லெஜண்ட் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. வங்கதேசம் லெஜண்ட் 20 ஓவர்கள் முடிவில் 109 ரன்கள்  மட்டுமே எடுத்தது. இந்திய தரப்பில் வினய் குமார், பிரக்யான் ஓஜா, யுவராஜ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்கள்.

அடுத்துக் களமிறங்கிய இந்திய லெஜண்ட் அணியில் விரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர்  துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். சேவாக் முதல் பந்தில் பவுண்டரி விளாசி தனது வழக்கமான அதிரடி பாணியில் ஆட்டத்தைத் துவங்கினார். குறிப்பாக, முதல் இரண்டு ஓவர்களில் சச்சினை பேட் செய்யவிடாமல் அதிரடியாக விளையாடினார். தொடர்ந்து மிரட்டிய சேவாக் வான வேடிக்கைகள் நிகழ்த்தியதால், வங்கதேச லெஜண்ட் அணி சோர்வுடன் பந்துவீசினார்கள்.

சச்சின் டெண்டுல்கர் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தார். இந்திய லெஜண்ட் அணி 10.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை எட்டியது. சேவாக் 10 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 80* (35) ரன்களும், சச்சின் 5 பவுண்டரிகளுடன் 33* (26) ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

Next Story