சுழல் தாக்குதலில் சுருண்டது இங்கிலாந்து: கடைசி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி - தொடரை கைப்பற்றி உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி


சுழல் தாக்குதலில் சுருண்டது இங்கிலாந்து: கடைசி டெஸ்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி - தொடரை கைப்பற்றி உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி
x
தினத்தந்தி 7 March 2021 12:51 AM GMT (Updated: 7 March 2021 12:51 AM GMT)

கடைசி டெஸ்டில் 3-வது நாளிலேயே இங்கிலாந்தை சுருட்டி இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை கைப்பற்றியதோடு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது.

ஆமதாபாத்,

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இதில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து 205 ரன்னில் ஆட்டமிழந்ததை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை ஆடிய இந்திய அணி 2-வது நாள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 294 ரன்கள் எடுத்திருந்தது. ஆல்-ரவுண்டர்கள் வாஷிங்டன் சுந்தர் (60 ரன்), அக்‌ஷர் பட்டேல் (11 ரன்) களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில் 3-வது நாள் ஆட்டம் நேற்று நடந்தது. வாஷிங்டன் சுந்தரும், அக்‌ஷர் பட்டேலும் நிலைத்து நின்று விளையாடி அசத்தினர். இங்கிலாந்து வீரர்களின் பவுன்சர் தாக்குதலை வாஷிங்டன் சுந்தர் திறம்பட சமாளித்து ரன்களாக மாற்றினார். வலுவான முன்னிலையை எட்ட உதவிய இந்த ஜோடி துரதிர்ஷ்டவசமாக ரன்-அவுட்டில் பிரிந்தது. அணியின் ஸ்கோர் 365 ரன்களாக உயர்ந்த போது அக்‌ஷர் பட்டேல் (43 ரன், 97 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) ரன்-அவுட் ஆனார். இவர்கள் 8-வது விக்கெட்டுக்கு 106 ரன்கள் திரட்டியது குறிப்பிடத்தக்கது. அப்போது 96 ரன்களில் நின்ற வாஷிங்டன் சுந்தர் எதிர்முனையில் மாட்டிக்கொண்டார். இன்னொரு முனையில் இஷாந்த் ஷர்மா (0), முகமது சிராஜ் (0) ஒரே ஓவரில் காலியானதால் வாஷிங்டன் சுந்தரின் முதலாவது சர்வதேச சதம் வாய்ப்பு நழுவிப்போனது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 365 ரன்கள் குவித்து ‘ஆல்-அவுட்’ ஆகி மொத்தம் 160 ரன்கள் முன்னிலை பெற்றது. தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் 96 ரன்களுடன் (174 பந்து, 10 பவுண்டரி, ஒரு சிக்சர்) அவுட் ஆகாமல் இருந்தார். டெஸ்டில் அவரது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும்.

பின்னர் 160 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி எதிர்பார்த்தது போலவே அஸ்வின்- அக்‌ஷர் பட்டேல் என்ற இரட்டை சுழல் சூறாவளி தாக்குதலில் சிக்கி மீண்டும் சின்னாபின்னமானது. புழுதி கிளம்பிய இந்த ஆடுகளத்தில் பந்து வெகுவாக சுழன்று எகிறியதால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் துல்லியமாக கணிக்க முடியாமல் வருவதும் போவதுமாக அரண்டு போனார்கள். இதில் தொடக்க ஆட்டக்காரர் டாம் சிப்லி (3 ரன்) வித்தியாசமான முறையில் வீழ்ந்தார். அவர் லெக்சைடில் பலமாக அடித்த பந்து அருகில் நின்ற பீல்டர் சுப்மான் கில்லின் காலில் பட்டு மேலே எழும்பியது. அதை விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் கேட்ச் செய்தார். கேப்டன் ஜோ ரூட் (30 ரன், 72 பந்து, 3 பவுண்டரி) அஸ்வின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ் (2 ரன்) கச்சிதமான பீல்டிங் வியூகத்தில் சிக்கினார். அக்‌ஷர் பட்டேலின் பந்து வீச்சில் முட்டிப்போட்டு பந்தை திருப்பிய போது லெக் ஸ்லிப்பில் நின்ற கோலி சாதுர்யமாக கேட்ச் செய்து அவரை வெளியேற்றினார்.

கடைசி கட்டத்தில் டேன் லாரன்ஸ் ஓரளவு போராடினார். அவரது அரைசதம் (50 ரன், 95 பந்து, 6 பவுண்டரி) அணி 100 ரன்களை கடக்க மட்டுமே உதவியது. அவர் இறுதி விக்கெட்டாக அஸ்வின் பந்து வீச்சில் கிளீன்போல்டு ஆனார்.

முடிவில் இங்கிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 54.5 ஓவர்களில் 135 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் இந்தியா இன்னிங்ஸ் மற்றம் 25 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை ருசித்தது. இந்திய தரப்பில் அக்‌ஷர் பட்டேல், அஸ்வின் தலா 5 விக்கெட்டுகளை அள்ளினர். சதம் அடித்த ரிஷாப் பண்ட் ஆட்டநாயகனாகவும், ஆல்-ரவுண்டராக ஜொலித்த அஸ்வின் ( 189 ரன் மற்றும் 32 விக்கெட்) தொடர்நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது டெஸ்டில் இங்கிலாந்தும், எஞ்சிய 3 டெஸ்டில் இந்தியாவும் வெற்றி பெற்றன.

இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்ட தொடராகும். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு 30 புள்ளிகள் கிடைத்தது. இதனால் சதவீதம் அடிப்படையில் முதலிடத்தை உறுதி செய்த இந்திய அணி முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் கணக்கீட்டில் இந்திய அணி 12 வெற்றி, 4 தோல்வி, ஒரு டிரா என்று மொத்தம் 520 புள்ளிகள் குவித்ததுடன் சதவீதம் அடிப்படையிலும் (72.2 சதவீதம்) முதலிடத்தை பெற்றுள்ளது.

லண்டன் லார்ட்சில் ஜூன் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கும் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை சந்திக்க உள்ளது.

டெஸ்ட் தொடர் நிறைவடைந்த நிலையில் அடுத்து இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர் நடத்தப்படுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி இதே ஆமதாபாத்தில் வருகிற 12-ந்தேதி நடக்கிறது.

‘கடந்த 3-4 மாதங்களில் ரிஷாப் பண்ட் மிக கடினமாக உழைத்தார். அதற்குரிய பலன் அவருக்கு கிட்டியுள்ளது. இந்தியாவில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 6-வது வரிசையில் களம் இறங்கி அதிலும் சுழலுக்கு சாதகமான ஆடுகளத்தில் எதிரணிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் விளையாடி சதம் அடித்ததில், சிறந்ததாக ரிஷாப் பண்டின் ஆட்டத்தை பார்க்கிறேன்.’

Next Story