தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி படுதோல்வி


தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்: இந்திய பெண்கள் அணி படுதோல்வி
x
தினத்தந்தி 7 March 2021 11:51 PM GMT (Updated: 7 March 2021 11:51 PM GMT)

இந்தியாவுக்கு வந்துள்ள தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இதில் முதலாவது ஒரு நாள் போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நேற்று நடந்தது. முதலில் பேட் செய்த இந்திய அணி வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 40 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது. அதன் பிறகு கேப்டன் மிதாலிராஜ் (50 ரன், 85 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), துணை கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (40 ரன், 41 பந்து, 6 பவுண்டரி) அணியை சரிவில் இருந்து மீட்டாலும் பின்வரிசையில் வந்த வீராங்கனைகள் சோபிக்க தவறினர். 

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 9 விக்கெட்டுக்கு 177 ரன்கள் மட்டுமே எடுத்தது. தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீராங்கனைகள் லிசில் லீ, லாரா வோல்வார்த் இருவரும் இந்திய பந்து வீச்சை நொறுக்கியதுடன் முதல் விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்து அட்டகாசப்படுத்தினர். அந்த அணி 40.1 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. வோல்வார்த் 80 ரன்களும் (12 பவுண்டரி), லிசில் லீ 83 ரன்களும் (11 பவுண்டரி, ஒரு சிக்சர்) திரட்டினர். ஓராண்டுக்கு பிறகு சர்வதேச போட்டியில் கால்பதித்த இந்திய பெண்கள் அணி முதல் போட்டியிலேயே மோசமாக ஆடி ஏமாற்றி விட்டது. இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை நடக்கிறது.


Next Story