கிரிக்கெட்

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்:இந்திய பெண்கள் அணி பதிலடி + "||" + Against South Africa One day cricket Indian women's team retaliates

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்:இந்திய பெண்கள் அணி பதிலடி

தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட்:இந்திய பெண்கள் அணி பதிலடி
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
லக்னோ, 

தென்ஆப்பிரிக்க பெண்கள் கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இதில் உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி லக்னோவில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் மிதாலிராஜ் பீல்டிங்கை தேர்வு செய்தார்.

இதன்படி முதலில் ‘பேட்’ செய்த தென்ஆப்பிரிக்க அணி, இந்திய வீராங்கனைகளின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 41 ஓவர்களில் 157 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக லாரா குட்ஆல் 49 ரன்னும், கேப்டன் சன் லூஸ் 36 ரன்னும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சு வீராங்கனைகள் ஜூலன் கோஸ்வாமி 4 விக்கெட்டும், மான்சி ஜோஷி 2 விக்கெட்டும், சுழற்பந்து வீச்சாளர் ராஜேஸ்வரி கெய்க்வாட் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

தொடர்ந்து ஆடிய இந்தியா 28.4 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 160 ரன்கள் சேர்த்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன், முந்தைய தோல்விக்கும் தக்க பதிலடி கொடுத்தது. தொடக்க வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் 9 ரன்னில் ஷப்னிம் இஸ்மாயில் பந்து வீச்சில் ‘கிளீன் போல்டு’ ஆனார். அதிரடியாக ஆடிய மற்றொரு தொடக்க வீராங்கனை ஸ்மிர்தி மந்தனா 64 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 80 ரன்னும், பூனம் ரவுத் 89 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 62 ரன்னும் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 4 விக்கெட்டுகள் சாய்த்த இந்திய வீராங்கனை ஜூலன் கோஸ்வாமி ஆட்டநாயகி விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை 1-1 என்ற கணக்கில் சமநிலைக்கு கொண்டு வந்துள்ளது. இவ்விரு அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுநாள் (காலை 9 மணிக்கு) நடக்கிறது.