பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராக அஸ்வின் தேர்வு


பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீரராக அஸ்வின் தேர்வு
x
தினத்தந்தி 10 March 2021 3:00 AM GMT (Updated: 10 March 2021 2:41 AM GMT)

ஜனவரி மாதத்தின் சிறந்த வீரருக்குரிய விருதை இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் பெற்றார்.

துபாய், 

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) மாதந்தோறும் சிறந்த வீரர், வீராங்கனையை தேர்வு செய்து விருது வழங்கும் முறையை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. ஜனவரி மாதத்தின் சிறந்த வீரருக்குரிய விருதை இந்திய இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் பெற்றார்.

பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரருக்கான இறுதிப்பட்டியலில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், இங்கிலாந்து டெஸ்ட் கேப்டன் ஜோ ரூட், வெஸ்ட் இண்டீஸ் இளம் வீரர் கைல் மேயர்ஸ் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். இவர்களில் இருந்து ரசிகர்கள் மற்றும் ஐ.சி.சி. வாக்கு அகாடமி (முன்னாள் வீரர்கள், ஒளிபரப்பு நிறுவனங்கள், பத்திரிகையாளர் அடங்கிய கமிட்டி) ஆகியோர் அளித்த வாக்குகளின் அடிப்படையில் அதிக ஆதரவு பெற்ற தமிழகத்தை சேர்ந்த அஸ்வின் பிப்ரவரி மாதத்துக்கான சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அஸ்வின் பிப்ரவரி மாதத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 3 டெஸ்டில் விளையாடி 24 விக்கெட்டுகள் வீழ்த்தியதோடு, ஒரு சதமும் அடித்து அமர்க்களப்படுத்தினார்.

ஐ.சி.சி. வாக்கு அகாடமி பிரதிநிதி இயான் பிஷப் கூறுகையில், ‘அஸ்வின் தொடர்ச்சியாக விக்கெட் வீழ்த்தியதால், முக்கியமான இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்தியாவை முன்னெடுத்து செல்ல உதவிகரமாக இருந்தது. சென்னையில் நடந்த 2-வது டெஸ்டில் இங்கிலாந்து பின்னடைவில் இருந்து மீண்டு வர முயற்சித்த நேரத்தில் 2-வது இன்னிங்சில் முக்கியமான கட்டத்தில் அஸ்வின் சதம் அடித்தார். அவரது பேட்டிங்கின் மூலம் இந்தியா எதிரணியின் வாய்ப்பை முற்றிலும் முடக்கியது’ என்று குறிப்பிட்டார்.

பிப்ரவரி மாதத்தின் சிறந்த வீராங்கனை விருதை இங்கிலாந்தின் டாமி பீமாண்ட் தட்டிச்சென்றார். இவர் கடந்த மாதத்தில் நியூசிலாந்துக்கு எதிரான 3 ஒரு நாள் போட்டிகளிலும் அரைசதம் அடித்ததோடு, தொடரை வெல்லவும் வித்திட்டார்.

Next Story