20 ஓவர் கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க இந்தியாவுக்கு வாய்ப்பு


20 ஓவர் கிரிக்கெட் அணிகளின் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடிக்க இந்தியாவுக்கு வாய்ப்பு
x
தினத்தந்தி 11 March 2021 5:06 AM GMT (Updated: 11 March 2021 5:06 AM GMT)

20 ஓவர் போட்டி அணிகளின் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ அரியணையை பிடிக்கும் வாய்ப்பு இந்திய அணிக்கு உருவாகியுள்ளது.

துபாய், 

20 ஓவர் போட்டி அணிக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. நேற்று வெளியிட்டது. இதில் இங்கிலாந்து 275 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரை 2-3 என்ற கணக்கில் பறிகொடுத்த ஆஸ்திரேலியா தரவரிசையில் ஒரு இடம் (267 புள்ளி) சரிந்து 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இதனால் 3-ல் இருந்த இந்தியா (268 புள்ளி) 2-வது இடத்துக்கு முன்னேறியது. பாகிஸ்தான் 260 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், நியூசிலாந்து 253 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன.

இந்திய அணி சொந்த மண்ணில் இங்கிலாந்துடன் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாட உள்ளது. முதலாவது 20 ஓவர் போட்டி ஆமதாபாத்தில் நாளை நடக்கிறது. இந்த தொடரை இந்திய அணி 5-0 அல்லது 4-1 என்ற கணக்கில் கைப்பற்றினால் நம்பர் ஒன் இடத்துக்கு முன்னேற முடியும். அதே சமயம் இங்கிலாந்து அணி முதலிடத்தை தக்கவைக்க குறைந்தது 2 ஆட்டங்களில் வெற்றி பெற்றாக வேண்டும். சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் வசப்படுத்திய இந்திய அணி அதன் மூலம் டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தை பிடித்தது போல் 20 ஓவர் போட்டியிலும் முத்திரை பதிக்குமா? என்று ரசிகர்கள் ஆவல் கொண்டுள்ளனர்.

20 ஓவர் போட்டிக்கான பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் டேவிட் மலான் (915 புள்ளி) முதலிடத்தில் தொடருகிறார். நியூசிலாந்து தொடரில் இரண்டு அரைசதம் விளாசிய ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் (830 புள்ளி) இரு இடம் உயர்ந்து 2-வது இடத்துக்கு வந்துள்ளார். இதனால் 2-ல் இருந்த இந்தியாவின் லோகேஷ் ராகுல் (816 புள்ளி) 3-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். பாகிஸ்தானின் பாபர் அசாம் 4-வது இடத்திலும், தென்ஆப்பிரிக்காவின் வான்டெர் துஸ்சென் 5-வது இடத்திலும், இந்திய கேப்டன் விராட் கோலி 6-வது இடத்திலும் உள்ளனர். இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா 14-வது இடம் வகிக்கிறார். இங்கிலாந்து தொடரில் ரன்வேட்டை நடத்தினால் இந்திய வீரர்கள் தரவரிசையில் கணிசமாக முன்னேறலாம்.

20 ஓவர் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் டாப்-10 இடத்தில் எந்த இந்தியர்களும் இடம் பெறவில்லை. இந்திய தரப்பில் அதிகபட்சமாக தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தர் 13-வது இடத்தில் உள்ளார். இங்கிலாந்து தொடரில் வாஷிங்டன் சுந்தர் அசத்தினால் டாப்-10 இடத்திற்குள் நுழையலாம்.


Next Story