ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் தோல்வியை தவிர்க்க ஜிம்பாப்வே போராட்டம்


ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான கடைசி டெஸ்டில் தோல்வியை தவிர்க்க ஜிம்பாப்வே போராட்டம்
x
தினத்தந்தி 14 March 2021 3:50 AM GMT (Updated: 14 March 2021 3:50 AM GMT)

ஆப்கானிஸ்தான்-ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் நடந்து வருகிறது.

அபுதாபி, 

இதில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 4 விக்கெட்டுக்கு 545 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது. அதிகபட்சமாக ஹஸ்மத்துல்லா ஷாகிடி ஆட்டம் இழக்காமல் 200 ரன்னும், கேப்டன் ஆஷ்கர் ஆப்கன் 164 ரன்னும் சேர்த்தனர். பின்னர் ஆடிய ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 287 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆகி ‘பாலோ-ஆன்’ ஆனது. இதனால் 258 ரன்கள் பின்தங்கிய நிலையில் தொடர்ந்து 2-வது இன்னிங்சை ஆடிய ஜிம்பாப்வே அணி 3-வது நாள் ஆட்டம் முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன்கள் எடுத்து இருந்தது.

நேற்று 4-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடந்து ஆடிய ஜிம்பாப்வே அணியின் விக்கெட்டுகள் சீரான இடைவெளியில் வீழ்ந்தாலும், கேப்டன் சீன் வில்லியம்ஸ் நிலைத்து நின்று ஆடி சதம் அடித்தார். அவர் அடித்த 4-வது சதம் இதுவாகும். நேற்றைய ஆட்டம் முடிவில் ஜிம்பாப்வே அணி 2-வது இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 266 ரன்கள் எடுத்து 8 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளதுடன் தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. சீன் வில்லியம்ஸ் 106 ரன்னுடனும், டொனால்டு திரிபானே 63 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இருவரும் 8-வது விக்கெட்டுக்கு 124 ரன்கள் திரட்டியுள்ளனர். ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் 5 விக்கெட் சாய்த்தார். இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய பிரகாசமான வாய்ப்புள்ளது.

Next Story