இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பதிலடி கொடுக்குமா? ஆமதாபாத்தில் 2-வது போட்டி இன்று நடக்கிறது


இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பதிலடி கொடுக்குமா? ஆமதாபாத்தில் 2-வது போட்டி இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 14 March 2021 4:01 AM GMT (Updated: 14 March 2021 4:01 AM GMT)

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது.

ஆமதாபாத்,

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியமான நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. இதில் நேற்றுமுன்தினம் நடந்த முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை பந்தாடி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு நடக்கிறது.

முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து நம்பர் ஒன் அணி என்பதை பறைசாற்றும் வகையில் பந்து வீச்சு மற்றும் பேட்டிங்கில் சூப்பராக செயல்பட்டு கலக்கியது. அந்த அணியின் பந்து வீச்சாளர்கள் அபாரமாக செயல்பட்டு இந்திய அணியை 124 ரன்களுக்கு கட்டுப்படுத்தினார்கள். ஸ்ரேயாஸ் அய்யர் (67 ரன்) மட்டுமே அரைசதத்தை கடந்தார். அதிரடி ஆட்டக்காரர்களான ரிஷாப் பண்ட் (21 ரன்), ஹர்திப் பாண்ட்யா (19 ரன்) ஆகியோர் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

பவர்பிளேயில் (முதல் 6 ஓவர்களில்) இந்தியா 22 ரன்னுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. தொடக்க ஆட்டக்காரர்கள் லோகேஷ் ராகுல் 1 ரன்னிலும், ஷிகர் தவான் 4 ரன்னிலும், கேப்டன் விராட்கோலி ரன் எதுவும் எடுக்காமலும் ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற்றம் அளித்தனர். இந்த ஆரம்ப சரிவில் இருந்து இந்திய அணி கடைசி வரை நிமிரவில்லை.

இந்திய அணியின் பேட்டிங் சொதப்பலை கேப்டன் விராட்கோலியும் ஒப்புக்கொண்டுள்ளார். ‘நாங்கள் எங்களுடைய பேட்டிங் தரத்துக்கு தகுந்தபடி விளையாடாததால் தோல்வியை சந்திக்க வேண்டியதானது. இந்த மாதிரி தன்மை கொண்ட ஆடுகளத்தில் எந்த மாதிரியான ஷாட்களை ஆட வேண்டும் என்பதை நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆடுகளத்தை சரியாக பயன்படுத்தி பவுன்சராக வரும் பந்துகளை எப்படி விளையாட வேண்டும் என்பதற்கு ஸ்ரேயாஸ் அய்யரின் ஆட்டம் உதாரணமாக இருந்தது. அதுபோல் ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் அதிரடி காட்ட வேண்டியது அவசியமானதாகும். அடுத்த ஆட்டத்தில் மைதானத்தில் எந்த பகுதியில் ஷாட்களை அடிக்க வேண்டும் என்ற தெளிவான திட்டத்துடன் விளையாடி சரிவில் இருந்து மீளுவோம்’ என்று விராட்கோலி தெரிவித்தார்.

கடந்த ஆட்டத்தில் இந்திய அணி 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. ஆனால் இங்கிலாந்து அணியில் ஒரு சுழற்பந்து வீச்சாளர் தான் அங்கம் வகித்தார். இந்திய சுழற்பந்து வீச்சை இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் எளிதாக துவம்சம் செய்தார்கள். இதனால் இந்த ஆட்டத்தில் சுழற்பந்து வீச்சாளர்களில் வாஷிங்டன் சுந்தர் அல்லது அக்‌ஷர் பட்டேல் நீக்கப்பட்டு வேகப்பந்து வீச்சாளர் நவ்தீப் சைனிக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவது ஆட்டத்தில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த ரோகித் சர்மா இந்த ஆட்டத்திலும் ஆடமாட்டார் என்று தெரிகிறது. ஆடும் லெவனில் ராகுல் திவேதியாவை சேர்க்க பரிசீலனை செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.

இங்கிலாந்து அணியை பொறுத்தமட்டில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஜாசன் ராய், ஜோஸ் பட்லர் ஆகியோர் வேகமாக மட்டையை சுழற்றி பவர்பிளேயில் 50 ரன்கள் திரட்டி நல்ல தொடக்கம் ஏற்படுத்தினர். அடுத்து வந்த டேவிட் மலான், பேர்ஸ்டோ ஆட்டம் இழக்காமல் அதிரடி காட்டி 27 பந்துகள் மீதம் வைத்து அணி வெற்றி இலக்கை எளிதாக எட்ட வைத்தனர். பந்து வீச்சாளர்களும் தங்கள் பணியை கச்சிதமாக செய்ததால் அந்த அணியில் மாற்றம் எதுவும் செய்யப்பட வாய்ப்பில்லை.

வெற்றியுடன் தொடரை தொடங்கி இருக்கும் இங்கிலாந்து அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் காணுவதுடன், தங்களது வெற்றியை நீட்டிக்க முழுமுயற்சி மேற்கொள்ளும். அதேநேரத்தில் டெஸ்ட் போட்டி தொடரை போல் முதல் தோல்வியில் இருந்து மீண்டு வந்து பதிலடி கொடுத்து எழுச்சி காண இந்திய அணி எல்லா வகையிலும் முனைப்பு காட்டும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

2-வது போட்டிக்கான ஆடுகளம் முதல் போட்டிக்குரியது போன்ற தன்மை கொண்டதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ முக்கிய பங்கு வகிக்கும். பின் பாதியில் பனியின் தாக்கம் இருக்கும் என்பதால் 2-வது பேட்டிங் செய்யும் அணிக்கு அனுகூலமாக அமையும். எனவே ‘டாஸ்’ ஜெயிக்கும் அணி முதலில் பீல்டிங்கையே தேர்வு செய்யும்.

சர்வதேச 20 ஓவர் போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 15 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் 8-ல் இங்கிலாந்தும், 7-ல் இந்தியாவும் வெற்றி பெற்றிருக்கின்றன.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், விராட்கோலி (கேப்டன்), ரிஷாப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர், ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர் அல்லது நவ்தீப் சைனி, அக்‌ஷர் பட்டேல், புவனேஷ்வர்குமார், யுஸ்வேந்திர சாஹல்.

இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜோஸ் பட்லர், டேவிட் மலான், ஜானி பேர்ஸ்டோ, இயான் மோர்கன் (கேப்டன்), பென் ஸ்டோக்ஸ், சாம் கர்ரன், ஜோப்ரா ஆர்ச்சர், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷித், மார்க் வுட்.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

Next Story