இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா, சூர்யகுமார், குருணல் பாண்ட்யா


இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடர்: இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா, சூர்யகுமார், குருணல் பாண்ட்யா
x
தினத்தந்தி 20 March 2021 1:44 AM GMT (Updated: 20 March 2021 1:44 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடருக்கான இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா, சூர்யகுமார் யாதவ், குருணல் பாண்ட்யா முதல்முறையாக இடம் பிடித்துள்ளனர்.

மும்பை,

இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 20 ஓவர் தொடர் முடிந்ததும், 3 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் புனேயில் முறையே வருகிற 23, 26, 28 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியை சேத்தன் ஷர்மா தலைமையிலான இந்திய தேர்வு கமிட்டியினர் தேர்வு செய்து நேற்று அறிவித்தனர்.

சமீபத்தில் நடந்த விஜய் ஹசாரே கோப்பை போட்டியில் சிறப்பாக பந்து வீசிய கர்நாடகாவை சேர்ந்த 25 வயது வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா, ஆல்-ரவுண்டர் குருணல் பாண்ட்யா, மராட்டியத்தை சேர்ந்த பேட்ஸ்மேன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் முதல்முறையாக ஒரு நாள் போட்டி அணியில் இடம் பிடித்துள்ளனர். குருணல் பாண்ட்யா இந்திய அணிக்காக 18 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். சூர்யகுமார் யாதவ் ஆமதாபாத்தில் நடந்து வரும் இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரின் 4-வது ஆட்டத்தில் 31 பந்துகளில் 57 ரன்கள் குவித்தது நினைவிருக்கலாம்.

இன்னும் சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்காத பிரசித் கிருஷ்ணா 2018-ம் ஆண்டில் இருந்து ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அவர் 24 ஆட்டங்களில் ஆடி 18 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் ஒரு ஆண்டு இடைவெளிக்கு பிறகும், அடிக்கடி காயத்தால் அவதிப்பட்டு வந்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் 19 மாதங்களுக்கு பிறகும் ஒரு நாள் அணிக்கு திரும்பியுள்ளனர். தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்டு வந்து இந்திய அணியினருடன் சமீபத்தில் இணைந்த தமிழக இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.

கடந்த ஆண்டு இறுதியில் அரங்கேறிய ஆஸ்திரேலிய தொடருக்கான அணியில் இடம் பிடித்து இருந்த மனிஷ் பாண்டே, மயங்க் அகர்வால், சஞ்சு சாம்சன், நவ்தீப் சைனி ஆகியோர் கழற்றி விடப்பட்டுள்ளனர்.

சமீபத்தில் திருமண பந்தத்தில் இணைந்த வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு அவரது விருப்பப்படி ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. காயத்தில் இருந்து மீளாத முகமது ஷமி, ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரது பெயர் பரிசீலனை செய்யப்படவில்லை.

இந்திய ஒரு நாள் போட்டி அணி வருமாறு:-

விராட்கோலி (கேப்டன்) ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, ரிஷாப் பண்ட், லோகேஷ் ராகுல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், குருணல் பாண்ட்யா, வாஷிங்டன் சுந்தர், டி.நடராஜன், புவனேஷ்வர்குமார், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாகூர்.

Next Story