வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி


வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி
x
தினத்தந்தி 20 March 2021 10:27 PM GMT (Updated: 20 March 2021 10:27 PM GMT)

வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது.

டுனெடின், 

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி அங்கு தலா 3 ஒருநாள், டி20 போட்டிகளில் விளையாடுகிறது. 

காயம் காரணமாக நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன், ராஸ் டெய்லர் ஆகியோர் இடம் பெறவில்லை. அதனால் டாம் லாதம் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். அதேபோல் வங்கதேச அணியில் ஷாகிப் அல் அசன் இடம் பெறவில்லை. இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டி நேற்று டுனெடினில் நடந்தது. நியூசிலாந்து அணியில் டாரில் மிட்செல், டிவோன் கான்வே, வில் யங், வங்கதேச அணியில் மெகதி ஹசன் ஆகியோர் அறிமுக வீரர்களாக இடம் பெற்றனர். 

டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச, அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்த வங்கதேச அணி 41.5 ஓவரிலேயே எல்லா விக்கெட்டையும் இழந்து 131 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வங்க தேச அணியில் முகமது மிதுன் 27, முஷ்பிகுர் ரகீம் 23, லிட்டன் தாஸ் 19 ரன்கள் எடுக்க, மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளும், நீஷம், சான்ட்னர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், மேத்யூ ஹென்றி 1 விக்கெட்டும் வீழ்த்தினர். 

அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 21.2 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 132 ரன்  எடுத்து அபாரமாக வென்றது. கப்தில் 38 ரன் (19 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்), கான்வே 27 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். ஹென்றி நிகோல்ஸ் 49 ரன் (53 பந்து, 6 பவுண்டரி), வில்லியம் யங் 11 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். போல்ட் ஆட்ட நாயகனாக தேர்வானார். இதன்படி வங்காளதேசத்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றது. 2வது போட்டி மார்ச் 23ம் தேதி கிறைஸ்ட் சர்ச்சில் நடைபெற உள்ளது. 

Next Story