இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: புனேயில் இன்று நடக்கிறது


இந்தியா-இங்கிலாந்து மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட்: புனேயில் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 22 March 2021 11:30 PM GMT (Updated: 22 March 2021 9:26 PM GMT)

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று நடக்கிறது.

புனே, 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்திய அணி கைப்பற்றியது.

இதனை அடுத்து இவ்விரு அணிகள் இடையேயான 3 ஆட்டங்கள் அடங்கிய ஒரு நாள் போட்டி தொடர் மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது. ரசிகர்களுக்கு அனுமதி இன்றி நடைபெறும் இந்த போட்டி தொடர் பூட்டிய ஸ்டேடியத்தில் அரங்கேறுகிறது.

இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புனேயில் இன்று (செவ்வாய்க்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.

விராட்கோலி தலைமையிலான இந்திய அணி டெஸ்ட் மற்றும் 20 ஓவர் போட்டி தொடர்களில் தொடக்க ஆட்டத்தில் அதிர்ச்சி தோல்வி கண்டது. இதனால் ஒரு நாள் தொடரை வெற்றியுடன் தொடங்கும் வேட்கையில் இந்திய அணி உள்ளது. அத்துடன் 20 ஓவர் போட்டியில் நம்பர் ஒன் அணியான இங்கிலாந்தை கடந்த வாரம் முடிந்த தொடரில் கடைசி 2 ஆட்டங்களில் அடுத்தடுத்து வீழ்த்திய உற்சாகத்துடன் இந்திய அணி இந்த போட்டியில் களம் இறங்குகிறது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவுடன் இணைந்து ஆடப்போவது யார் என்பதில் அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இங்கிலாந்துக்கு எதிரான 20 ஓவர் தொடரில் முதலாவது ஆட்டத்தில் 4 ரன்னில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்த தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவானுக்கு எஞ்சிய ஆட்டங்களில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. இதனால் அனுபவம் வாய்ந்த வீரரான அவருக்கு ஒரு நாள் தொடரில் மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படுமா? என்ற கேள்விக்குறி எழுந்தது.

இதற்கு விராட்கோலி நேற்று விடைகொடுத்துள்ளார். ஒருநாள் போட்டி குறித்து அவர் அளித்த பேட்டியில், ‘தொடக்க ஆட்டக்காரராக ரோகித் சர்மாவுடன், ஷிகர் தவான் நிச்சயம் களம் இறங்குவார்’ என்று தெரிவித்தார். கடந்த சில வருடங்களாக ரோகித் சர்மா, ஷிகர் தவான் இணை அணிக்கு அருமையான தொடக்கம் அளித்து இருக்கின்றனர் என்று பாராட்டிய அவர் அறிமுக 20 ஓவர் போட்டியில் அதிரடி காட்டிய சூர்யகுமாருக்கு இடம் அளிப்பதற்கு எல்லா முயற்சிகளும் எடுப்பேன் என்றும் கூறினார். லோகேஷ் ராகுலுக்கு இடம் கிடைக்குமா? என்ற கேள்விக்கு நேரடியாக பதில் அளிக்காத அவர் மோசமான பார்மில் தவிக்கும் வீரர்களுக்கு அணி நிர்வாகம் பக்கபலமாக எப்பொழுதும் இருக்கும் என்று குறிப்பிட்டார். வீரர்கள் குறித்து வெளியில் இருந்து வரும் விமர்சனங்கள் கருத்தில் எடுத்து கொள்ளப்படமாட்டாது என்றும் அவர் தெரிவித்தார்.

விராட்கோலி சதம் அடிப்பாரா?

20 ஓவர் தொடரில் 3 அரைசதம் அடித்து அசத்திய கேப்டன் விராட்கோலி பேட்டிங்கில் நல்ல பார்மில் இருக்கிறார். 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கு பிறகு ஒரு நாள் போட்டியில் விராட்கோலி சதம் எதுவும் அடிக்கவில்லை. அந்த சோகத்துக்கு இந்த தொடரில் அவர் முற்றுப்புள்ளி வைப்பாரா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இதேபோல் ரோகித் சர்மா, ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.




 



லோகேஷ் ராகுல் இங்கிலாந்துக்கு எதிரான நான்கு 20 ஓவர் போட்டிகளில் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அவருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா? என்பது உறுதியாக தெரியவில்லை. சிறந்த வீரரான அவருக்கு ஒருநாள் போட்டியில் உரிய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் உள்பட பலர் வலியுறுத்தி இருக்கின்றனர்.

வேகப்பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், ஷர்துல் தாகூர், நடராஜன் சுழற்பந்து வீச்சில் யுஸ்வேந்திர சாஹல், வாஷிங்டன் சுந்தர், குருணல் பாண்ட்யா உள்ளிட்ட சிறந்த வீரர்களும் அணியில் இடம் பிடித்துள்ளனர். அணியில் இடத்தை உறுதி செய்வதில் வாஷிங்டன் சுந்தர், குருணல் பாண்ட்யா இடையே போட்டி நிலவுகிறது.

உலக சாம்பியனான இங்கிலாந்து அணியில் கேப்டன் இயான் மோர்கன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப செயல்படவில்லை. 20 ஓவர் தொடரில் அவர் பேட்டிங்கில் சோபிக்க தவறினார். இதேபோல் ஜோஸ் பட்லர், ஜாசன் ராய், பேர்ஸ்டோ ஆகியோரும் பேட்டிங்கில் ஏற்றம் காண வேண்டியது அவசியமானதாகும். ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் செயல்படும் விதம் அந்த அணிக்கு மிகவும் முக்கியமானதாகும்.





 



வேகப்பந்து வீச்சில் மார்க்வுட் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் 20 ஓவர் தொடரில் 7 விக்கெட்டுகள் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் வலது முழங்கை காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி இருப்பது இங்கிலாந்து அணிக்கு பெருத்த பின்னடைவாக கருதப்படுகிறது. சுழற்பந்து வீச்சாளர்கள் மொயீன் அலி, அடில் ரஷித் ஆகியோரால் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி அளிக்க முடியவில்லை. இதனால் அவர்கள் புதிய வியூகத்துடன் களம் இறங்க வேண்டியது தேவையான ஒன்றாகும். மொயீன் அலிக்கு இடம் கிடைப்பது சற்று சந்தேகம் தான். அவருக்கு பதிலாக லியாம் லிவிங்ஸ்டன் சேர்க்கப்படலாம்.

முந்தைய இரண்டு தொடர்களில் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்து வெற்றியுடன் விடைபெற இங்கிலாந்து அணி எல்லா வகையிலும் முயற்சி மேற்கொள்ளும். அதேநேரத்தில் உள்ளூரில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்ட இந்திய அணி தனது முழு பலத்தையும் வெளிப்படுத்தும். எனவே இந்த போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

மராட்டிய கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இதுவரை 4 சர்வதேச ஒரு நாள் போட்டிகள் நடைபெற்று இருக்கிறது. இதில் இந்தியா 2-ல் வெற்றியும், 2-ல் தோல்வியும் கண்டுள்ளது. இந்த மைதானத்தில் 2017-ம் ஆண்டு ஜனவரியில் நடந்த போட்டியில் இந்திய அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியதும் அடங்கும். இந்த ஆடுகளம் பேட்டிங்குக்கு அனுகூலமானதாகும். ஆட்டத்தில் போகப்போக சுழற்பந்து வீச்சு எடுபடும்.

இரு அணிகளும் இன்று மோதுவது 101-வது ஒருநாள் போட்டியாகும். இதுவரை நடந்த 100 மோதல்களில் இந்திய அணி 53 ஆட்டத்திலும், இங்கிலாந்து அணி 42 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. 2 ஆட்டம் டையில் முடிந்தன. 3 ஆட்டங்கள் முடிவு இல்லாமல் போனது.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட்கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் அய்யர், ரிஷாப் பண்ட், லோகேஷ் ராகுல் அல்லது குருணல் பாண்ட்யா அல்லது வாஷிங்டன் சுந்தர், ஹர்திக் பாண்ட்யா, புவனேஷ்வர் குமார், ஷர்துல் தாகூர், யுஸ்வேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ், டி.நடராஜன்.

இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், இயான் மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், சாம் பில்லிங்ஸ், மொயீன் அலி அல்லது லியாம் லிவிங்ஸ்டன், சாம் கர்ரன் அல்லது டாம் கர்ரன், அடில் ரஷித், ரீஸ் டாப்லி, மார்க்வுட்.

பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடியாக ஒளிபரப்பு செய்கின்றன.


Next Story