இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி


இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்தியா வெற்றி
x
தினத்தந்தி 23 March 2021 9:54 PM GMT (Updated: 23 March 2021 9:55 PM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

புனே, 

இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று பகல்-இரவு மோதலாக நடந்தது. இந்திய அணியில் ஆல்-ரவுண்டர் குருணல் பாண்ட்யா, வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா அறிமுக வீரர்களாக அடியெடுத்து வைத்தனர். ஏற்கனவே சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் ஆடியுள்ள குருணல் பாண்ட்யா இந்தியாவின் 233-வது ஒரு நாள் போட்டி வீரர் ஆவார். முதல்முறையாக சர்வதேச கிரிக்கெட் பயணத்தை தொடங்கும் கர்நாடகாவைச் சேர்ந்த பிரசித் கிருஷ்ணா இந்தியாவின் 234-வது ஒரு நாள் போட்டி வீரர் ஆவார். விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால், ரிஷாப் பண்ட் வெளியே உட்காரவைக்கப்பட்டார். சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதிலாக குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டார். சூர்யகுமார் யாதவுக்கும் இடம் கிடைக்கவில்லை.

‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன் முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தார். ‘டாஸ்’ ஜெயித்திருந்தால் தானும் முதலில் பேட்டிங்கையே தேர்ந்தெடுத்திருப்பேன் என்ற இந்திய கேப்டன் கோலி, இங்கிலாந்தின் முடிவு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.

இதன்படி ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் இ்ந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர். வேகப்பந்து வீச்சாளர்கள் மார்க்வுட்டும், சாம் கர்ரனும் தாக்குதலை தொடுக்க இந்திய வீரர்கள் நிதானமாக ஆடினர். முதல் 10 ஓவர்களில் அவர்கள் 39 ரன் மட்டுமே எடுத்தனர். இதில் 2 மெய்டனும் அடங்கும்.

முதல் விக்கெட்டுக்கு 64 ரன்கள் (15.1 ஓவர்) எடுத்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. ரோகித் சர்மா (28 ரன், 42 பந்து, 4 பவுண்டரி), பென் ஸ்டோக்ஸ் ஆப்-ஸ்டம்புக்கு வெளியே வீசிய பந்தை அடித்த போது விக்கெட் கீப்பர் பட்லரிடம் பிடிபட்டார்.

இதன் பின்னர் கேப்டன் விராட் கோலி வந்தார். தவான்- கோலி ஜோடியினர் சீரான வேகத்தில் ஆடினர். ரன்ரேட் ஏறக்குறைய 5-ல் நகர்ந்தது. தனது 61-வது அரைசதத்தை கடந்த கோலி 56 ரன்களில் (60 பந்து, 6 பவுண்டரி) கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஸ்ரேயாஸ் அய்யர் 6 ரன்னில் வெளியேறினார். மறுமுனையில் 16 மற்றும் 59 ரன்னில் கேட்ச் கண்டங்களில் தப்பிப்பிழைத்து சதத்தை நெருங்கிய ஷிகர் தவான் (98 ரன், 106 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) துரதிர்ஷ்டவசமாக 2 ரன்னில் தனது 18-வது சதத்தை நழுவ விட்டார். பென் ஸ்டோக்ஸ் வீசிய ‘ஷாட்பிட்ச்’ பந்தை லெக்சைடில் மடக்கி அடித்த போது ‘மிட்விக்கெட்’டில் நின்ற மோர்கனிடம் கேட்ச் ஆனார். தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யாவும் (1 ரன்) நடையை கட்டினார். அப்போது இந்தியா 5 விக்கெட்டுக்கு 205 ரன்களுடன் (40.3 ஓவர்) தடுமாறியது.

இந்த நெருக்கடியான சூழலில் விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுலும், அறிமுக வீரர் குருணல் பாண்ட்யாவும் கைகோர்த்தனர். இருவரும் துரிதமான ரன் சேகரிப்பில் கவனம் செலுத்தினர். அதிக அளவில் ஷாட்பிட்ச் பந்துகளை வீசி திணறடிக்கும் வியூகத்துடன் செயல்பட்ட இங்கிலாந்தின் திட்டத்தை தவிடு பொடியாக்கினர். சாம் கர்ரனின் ஓவரில் 3 பவுண்டரி ஓட விட்ட குருணல் பாண்ட்யா, மற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் மார்க் வுட், டாம் கர்ரனின் ஓவர்களில் சிக்சர்களை பறக்க விட்டார். ராகுலும் ஏதுவான பந்துகளை எல்லைக்கோட்டுக்கு துரத்திவிட தவறவில்லை. இதனால் ஸ்கோர் எதிர்பார்ப்பையும் மிஞ்சி 300 ரன்களை கடந்தது. இருவரும் அரைசதத்தை கடந்து அசத்தினர்.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்தியா 5 விக்கெட்டுக்கு 317 ரன்கள் குவித்தது. லோகேஷ் ராகுல் 62 ரன்களுடனும் (43 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்), குருணல் பாண்ட்யா 58 ரன்களுடனும் (31 பந்து, 7 பவுண்டரி, 2 சிக்சர்) களத்தில் இருந்தனர். பாண்ட்யா-ராகுல் கூட்டணி 6-வது விக்கெட்டுக்கு 112 ரன்கள் (61 பந்து) திரட்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

அடுத்து 318 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணி ஆடியது. ஜாசன் ராயும், ஜானி பேர்ஸ்டோவும் மட்டையை தடாலடியாக சுழட்டினர். குறிப்பாக பேர்ஸ்டோ இந்திய பந்து வீச்சை தெறிக்க விட்டார். புதுமுக வீரர் பிரசித் கிருஷ்ணாவின் ஒரே ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரிகளை விரட்டியடித்து திகைப்பூட்டினார். 11.3 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை தொட்டது. சுழற்பந்து வீச்சிலும் பேர்ஸ்டோ சர்வசாதாரணமாக சிக்சர்களை விளாசி மிரட்டினார். ரன் ரேட் 9 ரன்னுக்கு மேலாக எகிறியது.





 



அதிர வைத்த இந்த ஜோடியை ஒரு வழியாக பிரசித் கிருஷ்ணா பிரித்தார். ஸ்கோர் 135 ரன்களாக (14.2 ஓவர்) உயர்ந்த போது ஜாசன்ராய் 46 ரன்களில் (35 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த பென் ஸ்டோக்ஸ் (1 ரன்) பிரசித் கிருஷ்ணாவின் அடுத்த ஓவரில் காலியானார். 3-வது விக்கெட்டுக்கு இறங்கிய கேப்டன் மோர்கன் முதல் பந்திலேயே வெளியேறி இருக்க வேண்டியது. ஸ்லிப்பில் நின்ற கேப்டன் கோலி கேட்ச்சை தவற விட்டார். ஆனாலும் மோர்கன் (22 ரன்) பெரிய அளவில் தொல்லை கொடுக்கவில்லை. இதற்கிடையே சிம்மசொப்பனமாக திகழ்ந்த பேர்ஸ்டோ 94 ரன்களில் (66 பந்து, 6 பவுண்டரி, 7 சிக்சர்) ஷர்துல் தாகூரின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். அதன் பிறகு ஆட்டம் படிப்படியாக இந்தியா பக்கம் திரும்பியது. ஜோஸ் பட்லரும் (2 ரன்) நிலைக்கவில்லை.

முடிவில் இங்கிலாந்து 42.1 ஓவர்களில் 251 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளும், ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

தனது முதல் 3 ஓவர்களில் 37 ரன்களை வாரி வழங்கிய பிரசித் கிருஷ்ணா பிறகு வலுவாக மீண்டெழுந்து முக்கியமான விக்கெட்டுகளை சாய்த்தார். அறிமுக ஒரு நாள் போட்டியிலேயே 4 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் இந்திய பவுலர் என்ற சிறப்பையும் வசப்படுத்தினார்.

ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. 2-வது ஒரு நாள் போட்டி இதே மைதானத்தில் நாளை மறுதினம் (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

ரோகித் சர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் காயம்

இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா ஆட்டத்தின் 5-வது ஓவரில் காயமடைந்தார். வேகப்பந்து வீச்சாளர் மார்க்வுட் வீசிய பந்து அவரது வலது முழங்கையை தாக்கியது. இதனால் வலியால் அவதிப்பட்ட அவர் சிகிச்சை எடுத்துக்கொண்டு தொடர்ந்து விளையாடினார். இருப்பினும் வலி அதிகமாக இருந்ததால் பிற்பாதியில் அவர் பீல்டிங் செய்ய வரவில்லை.

இதே போல் இங்கிலாந்து பேட்டிங் செய்து கொண்டிருந்த போது 8-வது ஓவரில், இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் பந்தை தடுக்க பாய்ந்து விழுந்த போது இடது தோள்பட்டை தரையில் பலமாக இடித்தது. வலியால் துடித்த அவர் அத்துடன் களத்தை விட்டு வெளியேறினார். காயத்தன்மையை அறிய ஸ்கேன் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். தற்போதைய நிலைமையில், எஞ்சிய இரு ஆட்டங்களிலும் அவர் விளையாடமாட்டார் என்று தெரிகிறது. ஐ.பி.எல். போட்டிகளிலும் அவர் ஆடுவது சந்தேகம் தான்.

உலக சாதனை படைத்த குருணல் பாண்ட்யா கண்ணீர்

குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஆல்-ரவுண்டர் 30 வயதான குருணல் பாண்ட்யா இந்த ஆட்டத்தின் மூலம் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அறிமுகம் ஆனார். அறிமுகத்திற்குரிய தொப்பியை அவரது தம்பி ஹர்திக் பாண்ட்யா வழங்கிய போது உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டார்.




 


அதன் பிறகு களம் இறங்கி 26 பந்துகளில் அரைசதம் அடித்து உலக சாதனை படைத்தார். ஒரு நாள் கிரிக்கெட்டில் அறிமுக ஆட்டத்திலேயே குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் இவர் தான். இதற்கு முன்பு 1990-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அறிமுக வீரர் ஜான் மோரிஸ் 35 பந்துகளில் அரைசதம் எடுத்ததே சாதனையாக இருந்தது. அந்த 31 ஆண்டு கால சாதனையை குருணல் பாண்ட்யா முறியடித்தார்.

இன்னிங்ஸ் முடிந்ததும் ஒளிபரப்பு நிறுவனம் அவரிடம் பேட்டி கண்டது. அந்த சமயமும் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கினார். அவரது தந்தை கடந்த ஜனவரி மாதம் மறைந்தார். அந்த சோகத்தை நினைத்து உருகிய குருணல் பாண்ட்யாவுக்கு பேச முடியாமல் நாக்கு தழுதழுத்தது. அரைசதத்தை மறைந்த தந்தைக்கு அர்ப்பணிப்பதாக கூறியபடி கண்ணீர் சிந்தினார். பிறகு அவரது சகோதரர் ஹர்திக் பாண்ட்யா், அவரை கட்டித் தழுவி ஆறுதல் கூறி தேற்றினார்.


Next Story