‘சர்வதேச கிரிக்கெட்டில் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது தெரியும்’ - இந்திய வீரர் தவான் பேட்டி


‘சர்வதேச கிரிக்கெட்டில் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது தெரியும்’ - இந்திய வீரர் தவான் பேட்டி
x
தினத்தந்தி 24 March 2021 11:00 PM GMT (Updated: 24 March 2021 9:35 PM GMT)

சர்வதேச கிரிக்கெட்டில் நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்பது நன்கு தெரியும் என்று இந்திய வீரர் தவான் கூறினார்.

புனே, 

புனேயில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இந்தியா நிர்ணயித்த 318 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து 42.1 ஓவர்களில் 251 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. தொடக்க ஆட்டக்காரராக களம் கண்டு 98 ரன்கள் குவித்த இந்திய வீரர் ஷிகர் தவான் ஆட்டநாயகன் விருது பெற்றார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

மீண்டும் அணிக்கு திரும்பியது சிறப்பானது. இந்த ஆட்டத்தில் எனது செயல்பாடு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையிலேயே உற்சாகமாக அனுபவித்து விளையாடினேன். ஆடும் லெவனில் இடம் கிடைக்காத போது அணிக்கு எனது பங்களிப்பை எப்படி அளிப்பது என்று சிந்தித்தேன். அதனால் சிறந்த 12-வது வீரராக இருப்பது என்று முடிவு செய்தேன். மைதானத்தில் வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை எடுத்துச் சென்று கொடுத்து ஊக்கப்படுத்தினேன். அதே நேரத்தில், நான் நம்பிக்கையை இழக்கவில்லை. நமக்குரிய வாய்ப்பு வரும் போது, அதை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன்.

சர்வதேச கிரிக்கெட்டில் எப்போதும் நெருக்கடி இருக்கத்தான் செய்யும். ஒரு அனுபவ வீரராக அதை எப்படி கையாள்வது என்பது எனக்கு நன்றாக தெரியும். எந்த ஆடுகளத்தில் எந்த மாதிரியான ஷாட்டுகளை அடிக்க வேண்டும் என்பதை நான் அறிவேன். ஒரு பேட்டிங் குழுவாக இந்த ஆடுகளத்தன்மையை சரியாக கணித்து செயல்பட்டோம். தொடக்கத்தில் வேகப்பந்து வீச்சு எடுபடும், போகப் போக ரன் குவிக்க முடியும் என்பதை அறிந்திருந்தோம். அதன்படியே செயல்பட்டதால் தான் இறுதியில் 300 ரன்களுக்கு மேல் குவிக்க முடிந்தது. என்னை பொறுத்தவரை களத்தில் நிலைத்து நின்று விட்டால் போதும். நிறைய ஷாட்டுகளை அடித்து ரன்கள் திரட்ட முடியும்.

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் போட்டிக்கு பிறகு எஞ்சிய ஆட்டங்களில் அணியில் இடம் கிடைக்கவில்லை. ஆனாலும் தொடர்ந்து நேர்மறையான எண்ணத்துடன் செயல்பட்டேன். உடல்தகுதியை மேம்படுத்துவதிலும், உடற்பயிற்சிலும், பேட்டிங்கிலும் கவனம் செலுத்தினேன். அது மட்டுமின்றி மனதளவில் நான் எப்போதும் நம்பிக்கையுடன் இருக்கக்கூடியவன்.

அணிக்கு வருகை தரும் புதிய வீரர்கள் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். காரணம், அவர்கள் நிறைய முதல்தர கிரிக்கெட் போட்டிகளிலும், ஐ.பி.எல். போட்டிகளிலும் விளையாடி அதன் மூலம் பெரிய வீரர்களுடன் ஓய்வறையில் பழகும் வாய்ப்பும், அவர்களுக்கு எதிராக விளையாடும் சந்தர்ப்பமும் கிடைக்கிறது. அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்துகிறது என்று தவான் கூறினார்.

கோலி கருத்து

வெற்றிக்கு பிறகு இந்திய கேப்டன் விராட் கோலி கூறுகையில், ‘சமீப காலங்களில் ஒரு நாள் கிரிக்கெட்டில் பெற்ற இனிமையான வெற்றிகளில் இதுவும் ஒன்று. முதலில் நிறைய ரன்கள் விட்டுக்கொடுத்தாலும் அதன் பிறகு அவர்களை கட்டுப்படுத்தி மீண்ட விதம் அற்புதம். ஆரம்பத்தில் ரன்களை விட்டுக்கொடுத்த பிரசித் கிருஷ்ணா, அதன் பிறகு மீண்டெழுந்து முத்திரை பதித்தது வியப்பூட்டுகிறது. வீரர்களை நினைத்து நான் உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.

நான் ஏற்கனவே கூறியது போல் தீவிரமும், தங்கள் திறமை மீது நம்பிக்கையும் கொண்ட வீரர்களுக்கு வாய்ப்பளிக்கிறோம்.

ஷிகர் தவான் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோரது இன்னிங்சை பற்றி குறிப்பிட்டாக வேண்டும். இவர்கள் சுயநலமின்றி ஆடக்கூடியவர்கள். அதனால் தான் அவர்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். அணியில் ஒவ்வொரு இடத்திற்கும் 2-3 வீரர்கள் இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. இந்திய கிரிக்கெட்டுக்கு இது நல்ல அறிகுறியாகும். தற்போது அணி சரியான பாதையில் பயணிக்கிறது. ஷிகர் தவான் குறித்து மற்றொரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். அணியில் ஆடாத போதும் அவர் சோர்ந்து போகாமல் உத்வேகத்துடன் காணப்பட்டார். எங்களுக்கு உதவிகரமாக இருந்தார். இந்த ரன் குவிப்புக்கு அவர் தகுதியானவர். மிகவும் கடினமான சூழலில் அவர் பேட்டிங் செய்து 98 ரன்கள் எடுத்திருக்கிறார். ஸ்கோர் போர்டில் காட்டியதை விட அவரது ரன்னுக்கு மதிப்பு அதிகம்’ என்றார்.

குருணல் பாண்ட்யா உருக்கமான பதிவு

இந்திய ஆல்-ரவுண்டர் குருணல் பாண்ட்யா இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டியில் அறிமுக வீரராக இடம் பிடித்து 26 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். முதல்முறையாக ஒரு நாள் போட்டியில் ஆடிய குருணல் பாண்ட்யா, இரண்டு மாதங்களுக்கு முன்பு மறைந்த தனது தந்தையை நினைத்து கண் கலங்கினார். இந்த இன்னிங்சை தனது தந்தைக்கு அர்ப்பணித்தார். பின்னர் அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் வெளியிட்ட உருக்கமான பதிவு வருமாறு:-

ஒவ்வொரு பந்திலும், என்னுடைய மனதிலும், இதயத்திலும் நீங்கள் இருந்தீர்கள். நீங்கள் என்னுடனேயே இருந்தீர்கள் என உணர்ந்தேன். அதனால் தான் முகத்தில் கண்ணீர் வழிந்தோடியது. எனக்குள் வலிமையை கொடுத்்ததற்கும், மிகப்பெரிய உறுதுணையாக இருந்ததற்கும் நன்றி. இந்த ஆட்டத்தின் மூலம் உங்களை பெருமையடையச் செய்து விட்டேன் என்று நம்புகிறேன். இது உங்களுக்குரியது. நாங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் உங்களுக்கானது என்று அதில் கூறியுள்ளார்.

சையத் முஷ்டாக் அலி கோப்பை கிரிக்கெட் தொடரில் குருணல் பாண்ட்யா விளையாடிக்கொண்டிருந்த போது தான் அவரது தந்தை ஹிமான்ஷூ மரணம் அடைந்தார். மகனின் ஆட்டத்தை பார்ப்பதற்காக ஒவ்வொரு போட்டியின் போதும் உடை, ஷூ ஆகியவற்றை முந்தைய நாள் இரவே தயாராக வைத்திருப்பது அவருடைய வழக்கமாகும். அதுபோல் முஷ்டாக் அலி கோப்பை போட்டியையும் பார்க்க ஆர்வமுடன் காத்து இருந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக மரணம் அவரை தழுவி விட்டது. போட்டியை காண்பதற்காக கடைசியாக அணிய வைத்திருந்த தந்தையின் உடையை வீரர்களின் ஓய்வறைக்கு கொண்டு வந்துள்ள குருணல் பாண்ட்யா இது தன்னை மேலும் வலிமையாக்குவதாக குறிப்பிட்டுள்ளார்.

Next Story