கிரிக்கெட்

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை சென்றது - இன்று பயிற்சியை தொடங்குகிறது + "||" + IPL Cricket: Chennai Super Kings team went to Mumbai - training starts today

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை சென்றது - இன்று பயிற்சியை தொடங்குகிறது

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மும்பை சென்றது - இன்று பயிற்சியை தொடங்குகிறது
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று மும்பை போய் சேர்ந்தது. இன்று முதல் பயிற்சியில் ஈடுபடுகிறது.
மும்பை,

8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 9-ந் தேதி முதல் மே 30-ந் தேதி வரை சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் நடக்கிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் 10-ந்தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்திக்கிறது. ‘பிளே-ஆப்’ மற்றும் இறுதிப்போட்டி ஆமதாபாத்தில் அரங்கேறுகிறது.

கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையம் அமைத்து போட்டி நடைபெறுவதாலும், கடும் கட்டுப்பாடுகள் எதிரொலியாவும் இந்த முறை எந்தவொரு அணிக்கும் சொந்த ஊரில் போட்டிகள் கிடையாது. பொதுவான இடத்தில் தான் அனைத்து ஆட்டங்களும் நடத்தப்படுகிறது. ரசிகர்களுக்கும் அனுமதி இல்லை.

3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முதல் 5 லீக் ஆட்டங்கள் மும்பையில் நடக்கிறது. அதன் பிறகு டெல்லி, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நகரங்களில் அந்த அணியின் லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது.

ஐ.பி.எல். வரலாற்றில் தலைசிறந்த அணிகளில் ஒன்றாக விளங்கி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த ஆண்டு நடந்த போட்டியில் முதல்முறையாக ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேற முடியாமல் போனதுடன் 7-வது இடத்துக்கும் தள்ளப்பட்டது. இதனால் கடும் விமர்சனத்தை சந்தித்த டோனி தலைமையிலான சென்னை அணி இந்த சீசனுக்கு ராபின் உத்தப்பாவை ராஜஸ்தான் அணியிடம் இருந்து பரிமாற்றம் மூலம் வாங்கியது. அத்துடன் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த ஏலத்தில் மொயீன் அலி, கிருஷ்ணப்பா கவுதம், புஜாரா, ஹரிசங்கர் ரெட்டி, பகத் வர்மா, ஹரி நிஷாந்த் ஆகிய வீரர்களை தன்வசப்படுத்தி தனது பலத்தை அதிகரித்துள்ளது.

இந்த சீசனுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் கடந்த 8-ந் தேதி தொடங்கி 2 வாரம் நடந்தது. டோனி, ருதுராஜ் கெய்க்வாட், அம்பத்தி ராயுடு, ஜெகதீசன், சாய் கிஷோர் உள்ளிட்ட வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டனர்.

இந்த நிலையில் சென்னை அணி விமானம் மூலம் நேற்று மும்பை சென்றது. மும்பையில் நடைபெறும் முதல் கட்ட லீக் ஆட்டங்களுக்கு தயாராக அங்குள்ள ஸ்டேடியத்தில் இன்று முதல் வீரர்கள் பயிற்சியை தொடங்குகிறார்கள்.

தனிப்பட்ட காரணங்களுக்காக கடந்த சீசனில் கடைசி நேரத்தில் சென்னை அணியில் இருந்து விலகிய நட்சத்திர பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா இந்த முறை களம் இறங்க ஆவலுடன் உள்ளார். மும்பை சென்றுள்ள அவர் அங்குள்ள ஓட்டலில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். 7 நாள் தனிமைப்படுத்துதல் முடிந்ததும் அவர் அணியினருடன் இணைகிறார். இதேபோல் சென்னை அணியில் இடம் பிடித்துள்ள வெளிநாட்டு வீரர்களும் விரைவில் பயிற்சி முகாமில் இணைய இருக்கின்றனர்.

இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கூறுகையில், ‘கடந்த ஆண்டு போட்டிக்கு பிறகு டோனி எங்களிடம் பேசுகையில் அடுத்த சீசனுக்கு தயாராகுவதற்கு மார்ச் மாதம் சென்னை வந்து விடுவேன் என்று தெரிவித்து இருந்தார். அவர் சொன்னபடியே வந்து பயிற்சியை தொடங்கினார். இந்த சீசனுக்காக எங்கள் அணி நன்றாக தயாராகி இருக்கிறது. இந்த முறை எங்கள் அணி சிறப்பாக செயல்படும் என நாங்கள் மிகவும் நம்புகிறோம்’ என்றார்.