இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா - 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது


இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா - 2-வது ஆட்டம் இன்று நடக்கிறது
x
தினத்தந்தி 26 March 2021 1:38 AM GMT (Updated: 26 March 2021 1:38 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லும் முனைப்பில் உள்ள இந்திய அணி இன்று 2-வது ஆட்டத்தில் களம் இறங்குகிறது. இங்கிலாந்து கேப்டன் மோர்கன் காயத்தால் விலகியுள்ளார்.

புனே, 

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி டெஸ்ட் மற்றும் 20 ஓவர் தொடரை ஏற்கனவே இழந்து விட்டது. அடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-இங்கிலாந்து இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் இன்று (வெள்ளிக்கிழமை) பகல்-இரவு மோதலாக நடக்கிறது.

தொடக்க ஆட்டத்தில் இந்திய அணியில் ஷிகர் தவான், கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல், புதுமுக வீரர் குருணல் பாண்ட்யா ஆகியோர் அரைசதம் அடித்து 300 ரன்களை கடக்க வைத்தனர். ராகுலும், குருணலும் இங்கிலாந்தின் ‘ஷாட்பிட்ச்’ தாக்குதலை திறம்பட எதிர்கொண்டு ரன்களாக மாற்றினர். பந்து வீச்சில் நமது பவுலர்கள் தொடக்கத்தில் ரன்களை வாரி வழங்கினாலும் பிற்பகுதியில் கட்டுப்படுத்தி அசத்தினர். குறிப்பாக அறிமுக வேகப்பந்து வீச்சாளர் பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளை வீழ்த்தி கவனத்தை ஈர்த்தார்.

இந்த ஆட்டத்தின் போது பாய்ந்து விழுந்து பந்தை தடுத்த போது தோள்பட்டையில் காயமடைந்த ஸ்ரேயாஸ் அய்யர் எஞ்சிய இரு போட்டிகளில் இருந்து விலகினார். அவருக்கு பதிலாக ரிஷாப் பண்ட் அல்லது சூர்யகுமார் யாதவ் ஆகிய இருவரில் ஒருவர் வாய்ப்பு பெறுவர். இதே போல் 9 ஓவர்களில் 68 ரன்களை விட்டுக்கொடுத்து விக்கெட் ஏதும் வீழ்த்தாத சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்படுவார் என்று தெரிகிறது. பந்து தாக்கி முழங்கையில் காயமடைந்த ரோகித் சர்மாவுக்கு காயம் பயப்படும்படி இல்லை. அதனால் இன்றைய ஆட்டத்தில் அவர் ஆடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டத்துடன் தொடரை கைப்பற்றிவிடும் உத்வேகத்துடன் இந்திய வீரர்கள் ஆயத்தமாகியுள்ளனர்.

இந்திய பயணத்தில் முதல் 2 தொடர்களை பறிகொடுத்த இங்கிலாந்து அணி ஒரு நாள் தொடரையாவது வசப்படுத்தி பரிகாரம் தேட வேண்டும் என்ற வேட்கையில் உள்ளது. தொடரை வெல்லும் வாய்ப்பில் நீடிக்க வேண்டும் என்றால் அவர்கள் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

அந்த அணிக்கு திடீர் பின்னடைவாக கேப்டன் இயான் மோர்கன் எஞ்சிய இரு ஒரு நாள் போட்டிகளிலும் ஆடமாட்டார் என்று நேற்றிரவு அறிவிக்கப்பட்டது. தொடக்க ஆட்டத்தில் பீல்டிங் செய்த போது அவருக்கு வலது கையில் இரு விரல்களுக்கு இடைப்பட்ட பகுதியில் சதை கிழிவு ஏற்பட்டு தையல் போடப்பட்டுள்ளது. இதனால் அவருக்கு ஓய்வு அளிக்கப்படுகிறது. இதே போல் பந்தை தடுக்க முயன்று தோள்பட்டையில் காயமடைந்த சாம் பில்லிங்சும் இன்றைய ஆட்டத்தில் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மோர்கனுக்கு பதிலாக விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் கேப்டன் பணியை கவனிப்பார்.

உலக சாம்பியனான இங்கிலாந்து அணி, மீதமுள்ள இரு ஆட்டங்களில் குறைந்தது ஒன்றில் வெற்றி பெற்றால் தான் ஒரு நாள் போட்டி தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை தக்க வைக்க முடியும். இரண்டிலும் தோற்றால் இந்தியா ‘நம்பர் ஒன்’ இடத்தை பிடித்து விடும். முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுக்குமா? அல்லது மறுபடியும் இந்தியாவிடம் பணிந்து போகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ஷிகர் தவான், ரோகித் சர்மா, விராட் கோலி (கேப்டன்), சூர்யகுமார் யாதவ் அல்லது ரிஷாப் பண்ட், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா, யுஸ்வேந்திர சாஹல் அல்லது குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், பிரசித் கிருஷ்ணா, புவனேஷ்வர்குமார்.

இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், டேவிட் மலான், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், டாம் கர்ரன், அடில் ரஷித் அல்லது மேட் பார்கின்சன், மார்க்வுட் அல்லது ரீஸ் டாப்லி.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Next Story