இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு - யூசுப் பதானுக்கும் தொற்று உறுதி


இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கருக்கு கொரோனா பாதிப்பு - யூசுப் பதானுக்கும் தொற்று உறுதி
x
தினத்தந்தி 27 March 2021 10:42 PM GMT (Updated: 27 March 2021 10:42 PM GMT)

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தெண்டுல்கருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். முன்னாள் அதிரடி வீரர் யூசுப் பதானுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மும்பை,

இந்தியாவில் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்து கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போது தினசரி 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகிறார்கள். அதிலும் குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் கொரோனாவின் கோரதாண்டவம் நாளுக்கு நாள் வேகம் எடுத்து வருகிறது. அங்கு நாள் ஒன்றுக்கு பாதிப்பு 36 ஆயிரத்தை கடந்து விட்டது.

இதற்கிடையே மராட்டிய மாநிலம் மும்பையில் வசிக்கும் இந்திய கிரிக்கெட் ஜாம்பவானும், முன்னாள் கேப்டனுமான சச்சின் தெண்டுல்கர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இதனை அவரே நேற்று தெரிவித்தார்.

இது குறித்து 47 வயதான தெண்டுல்கர் தனது டுவிட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா தொற்றுக்கான லேசான அறிகுறி இருந்ததை தொடர்ந்து தானாக முன்வந்து மருத்துவ பரிசோதனை செய்து கொண்டதில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது குடும்பத்தினர் யாருக்கும் கொரோனா தொற்று இல்லை என்பது பரிசோதனையின் முடிவில் தெரியவந்து இருக்கிறது. கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து வீட்டில் என்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். மருத்துவர்களின் ஆலோசனையின்படி கொரோனா தடுப்பு மருத்துவ பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி வருகிறேன். எனக்கும், நாட்டில் உள்ள பலருக்கும் உதவிகரமாக இருந்து வரும் சுகாதார பணியாளர்களுக்கு இந்த தருணத்தில் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நீங்கள் எல்லோரும் கவனமாக இருங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் மும்பை மற்றும் ராய்ப்பூரில் நடந்த சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் தெண்டுல்கர் பங்கேற்று விளையாடினார். அவரது தலைமையிலான இந்திய ஜாம்பவான் அணி, தில்ஷன் தலைமையிலான இலங்கை ஜாம்பவான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது நினைவுகூரத்தக்கது.

இந்த நிலையில் தெண்டுல்கருடன் இணைந்து உலக சீரிஸ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் கலந்துகொண்ட முன்னாள் அதிரடி வீரர் யூசுப் பதானும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அவர் சமீபத்திய நாட்களில் தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் பரிசோதித்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளார். யுவராஜ்சிங், ஷேவாக், இர்பான் பதான், முகமது கைப் உள்ளிட்ட இந்திய முன்னாள் வீரர்களும் இந்த போட்டியில் ஆடியது குறிப்பிடத்தக்கது.

Next Story