கிரிக்கெட்

ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்? கடைசி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை + "||" + Who will win the one-day cricket series? India-England in the last match today

ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்? கடைசி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை

ஒரு நாள் கிரிக்கெட் தொடரை வெல்லப்போவது யார்? கடைசி ஆட்டத்தில் இந்தியா-இங்கிலாந்து இன்று பலப்பரீட்சை
தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் கடைசி ஒரு நாள் போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன.
புனே,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் புனேயில் நடந்து வருகிறது. இதில் தொடக்க ஆட்டத்தில் இந்தியா 66 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்து 6 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியுள்ளது. இந்த நிலையில் இவ்விரு அணிகளில் தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பகல்-இரவு ஆட்டமாக நடக்கிறது.

பேட்டிங்குக்கு உகந்த புனே ஆடுகளத்தில் இரு அணி வீரர்களும் அதிரடியான ரன்வேட்டை நடத்தியுள்ளனர். முதலாவது ஆட்டத்தில் இந்தியா 317 ரன்கள் எடுத்து எதிரணியை 251 ரன்னில் கட்டுப்படுத்தியது. 2-வது ஆட்டத்தில் இந்தியா 336 ரன்கள் குவித்த போதிலும் அதை இங்கிலாந்து 39 பந்துகள் மீதம் வைத்து எட்டிப்பிடித்து சாதனை படைத்தது. இன்றைய ஆட்டத்திலும் அதே போன்ற ரன்மழையை எதிர்பார்க்கலாம்.

இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் ஆரம்பத்தில் நிதானமாக ஆடுகிறார்கள். இரு ஆட்டத்திலும் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் தான் 300 ரன்களை கடக்க வைத்திருக்கிறார்கள். தற்போதைய சூழலில் தொடக்க வீரர்களும் கொஞ்சம் ஆக்ரோஷமாக ரன் சேர்க்க வேண்டியது அவசியமாகும். அப்போது தான் இது போன்ற ஆடுகளத்தில் மிகப்பெரிய ஸ்கோரை அடைய முடியும். சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் இரண்டு ஆட்டத்திலும் ரன்களை வாரி வழங்கினாரே தவிர ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை. 2-வது ஆட்டத்தில் அவரது பந்து வீச்சில் மட்டும் 8 சிக்சர்கள் பறந்தன. இதனால் இன்றைய மோதலில் அவருக்கு பதிலாக யுஸ்வேந்திர சாஹல் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இரண்டு ஆட்டத்திலும் பந்து வீசவில்லை. 2-வது ஆட்டத்தில் மற்றவர்களின் பந்து வீச்சு எடுபடாத நிலையில் ஹர்திக் பாண்ட்யாவை பந்து வீச கோலி அழைத்திருக்க வேண்டும். அவர் பந்து வீசியிருந்தால் ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டிருக்கலாம் என்று முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். இதற்கு விளக்கம் அளித்துள்ள கோலி, ‘20 ஓவர் போட்டிகளில் அவரை முழுமையாக பயன்படுத்தினோம். ஆனால் ஒரு நாள் போட்டியில் பணிச்சுமையை கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. அடுத்து இங்கிலாந்து மண்ணில் முக்கியமான டெஸ்ட் போட்டிகள் வர உள்ளன. அதற்கு அவர் முழு உடல்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம்’ என்றார். அதனால் ஹர்திக் பாண்ட்யா ஒரு பேட்ஸ்மேனாக மட்டுமே தொடருவார்.

இங்கிலாந்து அணியில் கேப்டன் இயான் மோர்கன் விரலில் ஏற்பட்ட காயத்தால் விலகி விட்டார். அவர் இல்லாத நிலையிலும் இங்கிலாந்து அணி 2-வது ஆட்டத்தில் மெகா இலக்கை மிகச்சுலபமாக ‘சேசிங்’ செய்து அசத்தியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஜானி பேர்ஸ்டோவும், ஜாசன் ராயும் அந்த அணியின் ஆணிவேராக இருக்கிறார்கள். இரண்டு ஆட்டத்திலும் முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் திரட்டினர். அத்துடன் அதிக செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து தந்த இங்கிலாந்து ஜோடி (13 முறை) என்ற சிறப்பையும் பெற்றிருக்கிறார்கள். முந்தைய ஆட்டத்தில் ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்சும் 10 சிக்சருடன் 99 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.

டெஸ்ட், 20 ஓவர் தொடர்களை பறிகொடுத்த இங்கிலாந்து அணி ஒரு நாள் தொடரை வென்ற திருப்தியுடன் தாயகம் திரும்ப தீவிரம் காட்டுகிறது. அதே சமயம் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக தொடர்ச்சியாக 5 ஒரு நாள் தொடர்களை கைப்பற்றியிருக்கும் இ்ந்திய அணி அந்த வெற்றிப்பயணத்தை நீட்டிக்க வரிந்து கட்டும். மொத்தத்தில் பலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுகட்டுவதால் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.

போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா, ஷிகர் தவான், விராட் கோலி (கேப்டன்), லோகேஷ் ராகுல், ரிஷாப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, குருணல் பாண்ட்யா அல்லது வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர் அல்லது டி.நடராஜன், பிரசித் கிருஷ்ணா, புவனேஷ்வர்குமார், குல்தீப் யாதவ் அல்லது யுஸ்வேந்திர சாஹல்.

இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், டேவிட் மலான், ஜோஸ் பட்லர் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டன், மொயீன் அலி, சாம் கர்ரன், அடில் ரஷித், டாம் கர்ரன் அல்லது மார்க்வுட், ரீஸ் டாப்லி.

பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.