இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி ‘திரில்’ வெற்றி - தொடரையும் கைப்பற்றியது


இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்: பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி ‘திரில்’ வெற்றி - தொடரையும் கைப்பற்றியது
x
தினத்தந்தி 29 March 2021 2:30 AM GMT (Updated: 29 March 2021 2:30 AM GMT)

இங்கிலாந்துக்கு எதிரான பரபரப்பான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்து தொடரையும் கைப்பற்றியது.

புனே,

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே தொடர் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி மராட்டிய மாநிலம் புனேயில் நேற்று பகல்-இரவு மோதலாக அரங்கேறியது. இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றமாக குல்தீப் யாதவ் நீக்கப்பட்டு தமிழகத்தை சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் சேர்க்கப்பட்டார். இங்கிலாந்து அணியில் டாம் கர்ரனுக்கு பதிலாக மார்க்வுட் இடம் பெற்றார். நடப்பு தொடரில் தொடர்ந்து 3-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த இங்கிலாந்து முதலில் இந்தியாவை பேட் செய்ய அழைத்தது.

இதன்படி ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக அடியெடுத்து வைத்தனர். முந்தைய ஆட்டங்களில் ஆரம்பத்தில் சற்று மந்தமாக ஆடியதால் விமர்சனத்தை சந்தித்த இந்த ஜோடியினர் இந்த முறை சுதாரித்து விளையாடினர். பேட்டிங்குக்கு சாதகமான இந்த ஆடுகளத்தில் இருவரும் அவ்வப்போது பவுண்டரிகளை ஓடவிட்டு ஸ்கோரை உயர்த்தினர். 14-வது ஓவரில் இந்தியா 100 ரன்களை தொட்டது.

தவான்-ரோகித், ஜோடியாக 100 ரன்களுக்கு மேல் எடுப்பது இது 17-வது நிகழ்வாகும். இதன் மூலம் அதிகமுறை செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்த சாதனை ஜோடிகளின் பட்டியலில் இ்ந்தியாவின் சச்சின் தெண்டுல்கர்- சவுரவ் கங்குலி இணைக்கு (21 முறை) அடுத்த இடத்தை தவான்-ரோகித் பெற்றுள்ளனர்.

அணிக்கு வலுவான தொடக்கம் ஏற்படுத்தி தந்த இந்த ஜோடி ஸ்கோர் 103 ரன்களை எட்டிய போது பிரிந்தது. ரோகித் சர்மா (37 ரன், 37 பந்து, 6 பவுண்டரி) அடில் ரஷித்தின் சுழலில் கிளீன் போல்டு ஆனார். ரஷித்தின் அடுத்த ஓவரில் தவான் (67 ரன், 56 பந்து, 10 பவுண்டரி) அவரிடமே பிடிபட்டார். தொடர்ந்து வந்த கேப்டன் விராட் கோலி (7 ரன்) ஏமாற்றம் அளித்தார். அவர் சுழற்பந்து வீச்சாளர் மொயீன் அலி வீசிய பந்தை ஸ்டம்பை விட்டு விலகி விளாச முயற்சித்தார். ஆனால் சற்று தாழ்வாக சுழன்று திரும்பிய அந்த பந்து ஸ்டம்பை பதம் பார்த்தது. லோகேஷ் ராகுலும் (7 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை.

அடுத்தடுத்து விக்கெட் சரிவால் இந்தியாவுக்கு திடீரென நெருக்கடி உருவானது. இந்த சூழலில் இளம் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்டும், ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யாவும் கைகோர்த்து அணியை நிமிர வைத்தனர். இத்தகைய ஆடுகளத்தில் பெரிய ஸ்கோர் அவசியம் என்பதை உணர்ந்த இவர்கள் விக்கெட்டை பற்றி கவலைப்படாமல் மின்னல்வேக பேட்டிங்கை தொடுத்தனர். மொயீன் அலியின் ஒரே ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 3 சிக்சர்களை பறக்க விட்டார். ரிஷாப் பண்டும் அதிரடிக்கு குறைவைக்கவில்லை. ரன்ரேட் 7-ஐ எட்டியதுடன், இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது அணி 380 ரன்களை நெருங்கும் போல் தோன்றியது.

ஆனால் முக்கியமான கட்டத்தில் இவர்கள் இருவரும் அடுத்தடுத்து வீழ்ந்தது பாதிப்பை ஏற்படுத்தியது. அணியின் ஸ்கோர் 256 ரன்களாக (36 ஓவர்) உயர்ந்த போது ரிஷாப் பண்ட் 78 ரன்களில் (62 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) கேட்ச் ஆனார். மறுமுனையில் 7-வது அரைசதத்தை எட்டிய ஹர்திக் பாண்ட்யா 64 ரன்களில் (44 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) பென் ஸ்டோக்ஸ் சற்று லெப்சைடுவாக்கில் வீசிய பந்தில் போல்டு ஆனார். அப்போது இந்தியா 6 விக்கெட்டுக்கு 276 ரன்கள் (39 ஓவர்) எடுத்திருந்தது. பிரதான பேட்ஸ்மேன்கள் அனைவரும் வெளியேறிய நிலையில் எஞ்சிய 11 ஓவர்களை இந்தியா எப்படி சமாளித்து ரன் எடுக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்தது.

நல்லவேளையாக குருணல் பாண்ட்யாவுடன் இணைந்த ஷர்துல் தாகூர் சில சிக்சர்களை ஓடவிட்டு 300 ரன்களை தாண்ட வைத்தார். ஆனாலும் ரன்வேகம் எதிர்பார்ப்புக்கு மாறாக குறைந்து போனது. ஷர்துல் தாகூர் 30 ரன்களிலும் (21 பந்து, ஒரு பவுண்டரி, 3 சிக்சர்), குருணல் பாண்ட்யா 25 ரன்னிலும் (34 பந்து) கேட்ச் ஆனார்கள். முடிவில் இந்தியா 48.2 ஓவர்களில் 329 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. கடைசி 8 ரன்னுக்கு இந்தியா 4 விக்கெட்டுகளை பறிகொடுத்தது கவனிக்கத்தக்கது.

அடுத்து 330 ரன்கள் இலக்கை நோக்கி இங்கிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜானி பேர்ஸ்டோவும், ஜாசன் ராயும் களம் புகுந்தனர். பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய ஜாசன் ராய், புவனேஷ்வர்குமாரின் முதல் ஓவரில் 3 பவுண்டரி விரட்டியதுடன் அதே ஓவரின் கடைசி பந்தில் போல்டு ஆனார். பேர்ஸ்டோ (1 ரன்) புவனேஷ்வர்குமாரின் அடுத்த ஓவரில் எல்.பி.டபிள்யூ. ஆனார். டி.ஆர்.எஸ்.-ன்படி அப்பீல் செய்தும் பலன் இல்லை. முந்தைய இரு ஆட்டங்களில் 100 ரன்களுக்கு மேல் சேர்த்த தொடக்க ஜோடி இந்த ஆட்டத்தில் சொற்ப ரன்னில் முடங்கியதால் இந்திய பவுலர்கள் உற்சாகமானார்கள்.

அதன் பிறகு இங்கிலாந்துக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தாலும், ரன்னும் மிதமான வேகத்தில் வந்து கொண்டிருந்தது. பென் ஸ்டோக்ஸ் 35 ரன்னிலும், டேவிட் மலான் 50 ரன்னிலும், பொறுப்பு கேப்டன் ஜோஸ் பட்லர் 15 ரன்னிலும் பெவிலியன் திரும்பினர்.

ஒருகட்டத்தில் இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 200 ரன்களுடன் (30.3 ஓவர்) தள்ளாடிய போது ஆல்-ரவுண்டர் சாம் கர்ரன் விசுவரூபம் எடுத்தார். பின்வரிசை வீரர்களின் துணையுடன் அணியை முன்னெடுத்து சென்ற அவர் இந்திய பவுலர்களை மிரள வைத்தார். இதனால் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது மதில் மேல் பூனையாகவே தெரிந்தது.

கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன் தேவைப்பட்டது. இங்கிலாந்தின் கைவசம் 2 விக்கெட் இருந்தது. பரபரப்பான 50-வது ஓவரை தமிழக வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன் வீசினார். முதல் பந்தில் 2-வது ரன்னுக்கு ஓடிய போது மார்க்வுட் (14 ரன்) ரன்-அவுட் ஆனார். அடுத்து இறங்கிய டாப்லி 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதன் பின்னர். 3-வது, 4-வது பந்துகளை எதிர்கொண்ட சாம் கர்ரன் ரன் எடுக்கவில்லை. 5-வது பந்தில் பவுண்டரி அடித்தார். இதையடுத்து கடைசி பந்தில் வெற்றிக்கு 8 ரன் தேவை என்ற நிலையில் கர்ரன் எல்லைக்கோட்டை நோக்கி ஓங்கி அடித்தார். ஆனால் பலன் இல்லை. இதனால் இந்திய அணி 7 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. இங்கிலாந்து அணியால் 50 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 322 ரன்களே எடுக்க முடிந்தது. சாம் கர்ரன் 95 ரன்களுடன் (83 பந்து, 9 பவுண்டரி, 3 சிக்சர்) களத்தில் இருந்தார். இந்திய தரப்பில் ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர்குமார் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக இங்கிலாந்தின் சாம் கர்ரனும், தொடர்நாயகனாக பேர்ஸ்டோவும் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதலாவது ஆட்டத்தில் இந்தியாவும், 2-வது ஆட்டத்தில் இங்கிலாந்தும் வெற்றி பெற்றன. முன்னதாக டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கிலும், 20 ஓவர் தொடரை 3-2 என்ற கணக்கிலும் இந்தியா வென்று இருந்தது. இதனால் இங்கிலாந்து அணி வெறுங்கையுடன் தாயகம் திரும்புகிறது.

சர்வதேச போட்டிகள் முடிவடைந்த நிலையில் அடுத்து ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 9-ந்தேதி தொடங்குகிறது.

ஸ்கோர் போர்டு

இந்தியா

ரோகித் சர்மா (பி) ரஷித் 37

தவான் (சி) அண்ட் (பி) ரஷித் 67

விராட் கோலி (பி) மொயீன் 7

ரிஷாப் பண்ட் (சி) பட்லர் (பி)

சாம் கர்ரன் 78

லோகேஷ் ராகுல் (சி) மொயீன்

(பி) லிவிங்ஸ்டன் 7

ஹர்திக் பாண்ட்யா (பி)

ஸ்டோக்ஸ் 64

குருணல் பாண்ட்யா (சி)

ஜாசன் (பி) மார்க்வுட் 25

ஷர்துல் தாகூர் (சி) பட்லர்

(பி) மார்க் வுட் 30

புவனேஷ்வர்குமார் (சி)

சாம் கர்ரன் (பி) டாப்லி 3

பிரசித் கிருஷ்ணா(பி)மார்க் வுட் 0

டி.நடராஜன் (நாட்-அவுட்) 0

எக்ஸ்டிரா 11

மொத்தம் (48.2 ஓவர்களில்

ஆல்-அவுட்) 329

விக்கெட் வீழ்ச்சி: 1-103, 2-117, 3-121, 4-157, 5-256, 6-276, 7-321, 8-328, 9-329

பந்து வீச்சு விவரம்

சாம் கர்ரன் 5-0-43-1

ரீஸ் டாப்லி 9.2-0-66-1

மார்க்வுட் 7-1-34-3

பென் ஸ்டோக்ஸ் 7-0-45-1

அடில் ரஷித் 10-0-81-2

மொயீன் அலி 7-0-39-1

லிவிங்ஸ்டன் 3-0-20-1

இங்கிலாந்து

ஜாசன் ராய் (பி) புவனேஷ்வர் 14

பேர்ஸ்டோ எல்.பி.டபிள்யூ

(பி) புவனேஷ்வர் 1

ஸ்டோக்ஸ் (சி) தவான் (பி)

நடராஜன் 35

டேவிட் மலான் (சி) ரோகித்

(பி) தாகூர் 50

ஜோஸ் பட்லர் எல்.பி.டபிள்யூ

(பி) தாகூர் 15

லிவிங்ஸ்டன் (சி) அண்ட்

(பி) தாகூர் 36

மொயீன் அலி (சி) ஹர்திக்

பாண்ட்யா (பி) புவனேஷ்வர் 29

சாம் கர்ரன் (நாட்-அவுட்) 95

அடில் ரஷித் (சி) கோலி (பி)

தாகூர் 19

மார்க்வுட் (ரன்-அவுட்) 14

ரீஸ் டாப்லி (நாட்-அவுட்) 1

எக்ஸ்டிரா 13

மொத்தம் (50 ஓவர்களில்

9 விக்கெட்டுக்கு) 322

விக்கெட் வீழ்ச்சி: 1-14, 2-28, 3-68, 4-95, 5-155, 6-168, 7-200, 8-257, 9-317

பந்துவீச்சு விவரம்

புவனேஷ்வர்குமார் 10-0-42-3

டி.நடராஜன் 10-0-73-1

பிரசித் கிருஷ்ணா 7-0-62-0

ஷர்துல் தாகூர் 10-0-67-4

ஹர்திக் பாண்ட்யா 9-0-48-0

குருணல் பாண்ட்யா 4-0-29-0

Next Story