பெங்களூரு அணி கேப்டன் விராட் கோலி சென்னை வருகை; 7 நாள் தனிமைப்படுத்துதலை தொடங்கினார்


பெங்களூரு அணி வீரர்கள் விராட் கோலி, டிவில்லியர்ஸ் சென்னை வந்த போது எடுத்த படம்.
x
பெங்களூரு அணி வீரர்கள் விராட் கோலி, டிவில்லியர்ஸ் சென்னை வந்த போது எடுத்த படம்.
தினத்தந்தி 1 April 2021 9:28 PM GMT (Updated: 1 April 2021 9:28 PM GMT)

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று சென்னை வந்தார்.

கோலி வருகை

8 அணிகள் இடையிலான 14-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 9-ந்தேதி முதல் மே 30-ந்தேதி வரை சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, கொல்கத்தா, ஆமதாபாத் ஆகிய நகரங்களில் நடைபெறுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சுடன் மோதுகிறது. முதல்முறையாக இந்த சீசனில் எந்த அணிக்கும் சொந்த ஊரில் ஆட்டம் கிடையாது என்ற புதுமையான அனுபவத்தை வீரர்கள் சந்திக்க இருக்கிறார்கள். கொரோனா பரவலால் ரசிகர்களுக்கும் அனுமதி கிடையாது.

கடந்த 28-ந்தேதி இங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அதன் பிறகு கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் இருந்து விடுபட்டு வீட்டுக்கு சென்று 3 நாட்கள் ஓய்வு எடுத்தார்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வரும் விராட் கோலி நேற்று சென்னை வந்தடைந்தார். ராஜாஅண்ணாமலைபுரத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ள கோலி அங்கு கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். 7 நாள் தனிமைப்படுத்தும் நடைமுறையை முடித்ததும் முழுமையான பயிற்சியில் ஈடுபட அனுமதிக்கப்படுவார். இதே போல் 2011-ம் ஆண்டு முதல் பெங்களூரு அணிக்காக ஆடி வரும் தென்ஆப்பிரிக்க அதிரடி வீரர் டிவில்லியர்சும் சென்னை வந்து அணியுடன் இணைந்து விட்டார். ஏற்கனவே தனிமைப்படுத்துதலை முடித்த பெங்களூரு அணி வீரர்கள் பயிற்சியை தொடங்கி இருக்கிறார்கள்.

மற்ற அணி வீரர்கள்

இதற்கிடையே ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி வீரர்கள் நேற்று முன்தினம் சென்னை வந்து சேர்ந்தனர். ‘வணக்கம் சென்னை, நாங்கள் இங்கு வந்து விட்டோம்’ என்று ரோகித் சர்மா டுவிட்டர் பக்கத்தில் உற்சாகமாக பதிவிட்டுள்ளார். மும்பை அணி சென்னையில் 5 ஆட்டங்களில் விளையாட உள்ளது.

ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி தனது முதல் 5 லீக் ஆட்டங்களை சென்னையில் தான் ஆடுகிறது. அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு கிளம்பி விட்டார்.இதே போல் இயான் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் தனது சவாலை சென்னையில் இருந்து தான் தொடங்குகிறது. அந்த அணிக்குரிய முதல் 3 ஆட்டங்கள் சென்னையில் அரங்கேறுகிறது.


Next Story