வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி


வங்காளதேசத்துக்கு எதிரான கடைசி 20 ஓவர் போட்டியிலும் நியூசிலாந்து வெற்றி
x
தினத்தந்தி 1 April 2021 9:58 PM GMT (Updated: 1 April 2021 9:58 PM GMT)

நியூசிலாந்து-வங்காளதேச அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் நேற்று நடந்தது.

 மழை காரணமாக சுமார் 2 மணி நேரம் தாமதமாக போட்டி தொடங்கியது. இதனால் இந்த ஆட்டம் 10 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதில் முதலில் ‘பேட்’ செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்ட மார்ட்டின் கப்தில், பின் ஆலென் ஆகியோர் அதிரடியாக ஆடி நல்ல தொடக்கம் அமைத்து கொடுத்தனர். 5.4 ஓவர்களில் அணியின் ஸ்கோர் 85 ரன்னாக இருந்த போது கப்தில் (44 ரன், 19 பந்து, ஒரு பவுண்டரி, 5 சிக்சர்) கேட்ச் கொடுத்து வெளியேறினார். 18 பந்துகளில் அரைசதத்தை எட்டிய பின் ஆலென் 29 பந்துகளில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 71 ரன்கள் விளாசி ஆட்டம் இழந்தார். நியூசிலாந்து வீரரின் 2-வது அதிவேக அரைசதம் இதுவாகும். நிர்ணயிக்கப்பட்ட 10 ஓவர்களில் நியூசிலாந்து 4 விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்தது.

தொடர்ந்து ஆடிய வங்காளதேச அணி 9.3 ஓவர்களில் 76 ரன்னில் சுருண்டது. இதனால் நியூசிலாந்து அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றதுடன் தொடரையும் 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது. ஏற்கனவே நடந்த ஒரு நாள் தொடரையும் அந்த அணி 3-0 என்ற கணக்கில் வென்று இருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story