இந்திய அணி உலககோப்பையை வென்று 10 ஆண்டு நிறைவு; கவுதம் கம்பீரின் வித்தியாசமான ஆதங்கம்


உலக கோப்பையுடன் தெண்டுல்கர்-கம்பீர்.
x
உலக கோப்பையுடன் தெண்டுல்கர்-கம்பீர்.
தினத்தந்தி 1 April 2021 10:13 PM GMT (Updated: 1 April 2021 10:13 PM GMT)

இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2011-ம் ஆண்டு சொந்த மண்ணில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட்டில் 28 ஆண்டுகளுக்கு பிறகு மகுடம் சூடியது.

அந்த உலக கோப்பையை உச்சிமுகர்ந்து இன்றுடன் 10 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. 2011-ம் ஆண்டு ஏப்ரல் 2-ந்தேதி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த இறுதி ஆட்டத்தில் இந்திய அணி, இலங்கையுடன் மோதியது. இதில் இலங்கை அணி நிர்ணயித்த 275 ரன்கள் இலக்கை இந்திய அணி 48.2 ஓவர்களில் எட்டிப்பிடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கேப்டன் டோனி சிக்சருடன் வெற்றிக்குரிய ரன்னை எடுத்து குதூகலப்படுத்தியதுடன் 91 ரன்கள் விளாசி ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். ஆல்-ரவுண்டராக பிரகாசித்த யுவராஜ்சிங் தொடர்நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கரின் உலக கோப்பை கனவும் நனவானது. கண்ணீர் மல்க கோப்பையை ஏந்திய அவருக்கு இது கடைசி உலக கோப்பை தொடராக அமைந்தது.

உலக கோப்பையை கைப்பற்றி 10 ஆண்டுகள் ஆனதையொட்டி முன்னாள் வீரர்களும், ரசிகர்களும் சமூக வலைதளம் மூலம் நினைவுகளை பகிர்ந்து வருகிறார்கள். இறுதி ஆட்டத்தில் 97 ரன்கள் குவித்தவரான இந்திய முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் கூறுகையில், ‘அது ஒரு பெருமைக்குரிய தருணம் தான். ஆனால் இப்போது இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்து செல்ல வேண்டிய நேரம் இது. கடந்த 10 ஆண்டுகளாக நாம் எந்த உலககோப்பையையும் வெல்லவில்லை. அனேகமாக நாம் அடுத்த உலக கோப்பையை வெல்வதற்குரிய நேரம் இது’ என்றார். உலக கோப்பையை வென்ற பிறகு இறுதிப்போட்டியில் விளையாடிய அந்த 11 வீரர்களும் இணைந்து மீண்டும் எந்தவொரு ஆட்டத்திலும் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை என்பது வேதனையான ஒன்று என்றும் கம்பீர் ஆதங்கப்பட்டார்.


Next Story