ஐ.பி.எல். கிரிக்கெட்: பழைய நிலையை எட்டுமா ராஜஸ்தான்?


சஞ்சு சாம்சன்
x
சஞ்சு சாம்சன்
தினத்தந்தி 1 April 2021 10:31 PM GMT (Updated: 1 April 2021 10:31 PM GMT)

வருகிற 9-ந்தேதி தொடங்கும் ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழாவில் பங்கேற்கும் 8 அணிகளில் ஒன்றான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பற்றிய ஒரு அலசல்.

ஐ.பி.எல். கிரிக்கெட் 2008-ம் ஆண்டு உதயமான போது அந்த சீசனில் ஷேன் வார்னே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மகுடம் சூடியது. அந்த ஐ.பி.எல்.-ல் கணிப்புக்கு மாறாக அதிக பிரபலம் இல்லாத வீரர்களுடன் களம் இறங்கிய ராஜஸ்தான் அணி இறுதி ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்சை கடைசி பந்தில் தோற்கடித்தது. அதன் பிறகு ராஜஸ்தான் அணி ஒரு சில ஆண்டுகளில் சிறப்பாக விளையாடிய போதிலும் கோப்பையை மீண்டும் கையில் ஏந்தும் தருணம் மட்டும் கிட்டவே இல்லை. இத்தனைக்கும் ஷேன் வார்னே பயிற்சியாளர், ஆலோசகர் என்று பலகட்டமாக அணியுடன் 
ஒருங்கிணைந்து செயல்பட்ட போதிலும் ஏதோ எழுச்சியை மட்டும் பார்க்க முடியவில்லை. இடையில் சூதாட்ட புகாரில் சிக்கி 2 ஆண்டு தடை நடவடிக்கைக்கும் உள்ளானது.

சோகத்தின் உச்சகமாக கடந்த ஆண்டு நடந்த ஐ.பி.எல்.-ல் ராஜஸ்தான் அணி கடைசி இடத்துக்கு (6 வெற்றி, 8 தோல்வி) தள்ளப்பட்டது. ஐ.பி.எல்.-ல் வரலாற்றில் அந்த அணியின் மோசமான செயல்பாடு இது தான். அதுவும் முதல் ஆட்டத்தில் 216 ரன்கள் குவித்து, 2-வது ஆட்டத்தில் 224 ரன்களை ‘சேசிங்’ செய்து அமர்க்களமாக தொடங்கிய ராஜஸ்தான் அணி அதன் பிறகு சரிவு பாதைக்கு சென்று கடைசி வரை நிமிராமல் போய் விட்டது. கேப்டன் ஸ்டீவன் சுமித் 14 ஆட்டங்களில் 311 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனால் அதிருப்திக்குள்ளான அந்த அணி நிர்வாகம் கேப்டன் ஸ்டீவன் சுமித்தை அணியில் இருந்து தடாலடியாக கழற்றி விட்டது. அவருக்கு பதிலாக இந்த ஆண்டு இந்திய விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

தென்ஆப்பிரிக்க அணியின் ஆல்-ரவுண்டர் கிறிஸ் மோரிசை ரூ.16¼ கோடிக்கு ராஜஸ்தான் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஐ.பி.எல். சரித்திரத்தில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர் இவர் தான். இதே போல் இந்திய ஆல்-ரவுண்டர் ஷிவம் துபே, வங்காளதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிஜூர் ரகுமான், இங்கிலாந்து பேட்ஸ்மேன் லியாம் லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் புதிய வரவாக அணியுடன் இணைகிறார்கள்.ராஸ்தான் அணியை பொறுத்தவரை பேட்டிங்கில் பலம் வாய்ந்ததாக திகழ்கிறது. உலகத் தரம் வாய்ந்த ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், கடந்த சீசனில் காட்ரெலின் ஒரே ஓவரில் 5 சிக்சர் பறக்க விட்ட ராகுல் திவேதியா, ரியான் பராக், இளம் பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வால், மனன் வோரா, டேவிட் மில்லர் என்று நட்சத்திர பட்டாளம் அணிவகுத்து நிற்கிறது.

பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் (இங்கிலாந்து) தான் அந்த அணியின் ஆணிவேராக இருந்தார். கடந்த ஆண்டு மொத்தம் 20 விக்கெட்டுகள் வீழ்த்தியதுடன், ஓவருக்கு சராசரியாக 6.55 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து சிக்கனத்தையும் காட்டினார். கையில் ஏற்பட்ட காயத்துக்கு ஆபரேஷன் செய்துள்ள ஜோப்ரா ஆர்ச்சர் தொடக்ககட்ட ஆட்டங்களில் ஆட முடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் ராஜஸ்தானுக்கு பின்னடைவு தான். மெகா தொகைக்கு எடுக்கப்பட்ட கிறிஸ் மோரிசையும், பென் ஸ்டோக்சையும் தான் இப்போது அந்த அணி பந்து வீச்சில் அதிகம் சார்ந்திருக்கிறது. கார்த்திக் தியாகி, ஜெய்தேவ் உனட்கட் ஜொலித்தால் பந்துவீச்சு வலுவடையும். குறிப்பிடத்தக்க அளவுக்கு சுழற்பந்து வீச்சாளர் இல்லாதது இன்னொரு குறையாக பார்க்கப்படுகிறது. 

ஸ்ரேயாஸ் கோபால் தான் முக்கியமான சுழற்பந்து வீச்சாளராக உள்ளார். அவருக்கு கூட சர்வதேச போட்டி அனுபவம் கிடையாது. இருப்பினும் சரியான கலவையில் ஒருங்கிணைந்து செயல்பட்டால் ஆரம்ப கால சிறந்த நிலையை எட்டுவதற்கு வழிபிறக்கும். அந்த அணி தனது தொடக்க ஆட்டத்தில் வருகிற 12-ந்தேதி பஞ்சாப்பை கிங்சை மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் சந்திக்கிறது.

இதுவரை...
2008- சாம்பியன்

2009- லீக் சுற்று

2010- லீக் சுற்று

2011-லீக் சுற்று

2012- லீக் சுற்று

2013-பிளே ஆப் சுற்று

2014- லீக் சுற்று

2015-பிளே-ஆப் சுற்று

2018-பிளே-ஆப் சுற்று

2019-லீக் சுற்று

2020-லீக் சுற்று

அணி வீரர்கள்
சஞ்சு சாம்சன் (கேப்டன்), குல்டிப் யாதவ், பென் ஸ்டோக்ஸ், ஜெய்ஸ்வால், அனுஜ் ரவாத், கிறிஸ் மோரிஸ், ஆண்ட்ரூ டை, ஆகாஷ் சிங், கார்த்திக் தியாகி, ஜோப்ரா ஆர்ச்சர், ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் திவேதியா, ஜெய்தேவ் உனட்கட், சேத்தன் சகாரியா, மயங்க் மார்கண்டே, ஷிவம் துபே, கே.சி.கரியப்பா, மஹிபால் லோம்ரோர், முஸ்தாபிஜூர் ரகுமான், டேவிட் மில்லர், லியாம் லிவிஸ்டன், ஜோஸ் பட்லர், மனன் வோரா, ரியான் பராக்.

தலைமை பயிற்சியாளர்- ஆண்ட்ரூ மெக்டொனால்டு (ஆஸ்திரேலியா)

Next Story